Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திருத்தச் சட்டமூலம், அடுத்த மாதம் சபைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக, நன்கு வியூகம் அமைத்து, சுயமாக ஒரு கட்சியை ஆரம்பித்து, ஐ.தே.கவையும் சு.கவையும் புறமொதுக்கி வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுன, இன்னும் ஒரு தசாப்த காலத்துக்காவது ஆட்சி செய்யும் கனவைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே திட்டமிட்டபடி தமக்கு ஏற்றாற்போல் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டு வருவதில், முழுமூச்சாகக் களமிறங்கியுள்ளமை பட்டவர்த்தனமானது.
ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறிய ஜே.ஆர் ஜெயவர்தன, 1978ஆம் ஆண்டில் இரண்டாவது குடியரசு அரசமைப்பைக் கொண்டு வந்தார். மிகுந்த ‘வல்லமை’ பொருந்திய அரசமைப்பாக இது வர்ணிக்கப்பட்டது.
ஆனால், அதற்குப் பின்னர் ஆட்சி செய்த ஐ.தே.கவும் சுதந்திரக் கட்சியும் கூட்டு முன்னணிகளும், இதுவரை 19 தடவைகள் இந்த அரசமைப்பைத் திருத்தியிருக்கின்றன.
இத்தனைக்கும், ஜே.ஆர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான், அரசமைப்பில் அதிகப்படியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வல்லுநர்கள் அரசமைப்பை வரைந்திருந்தாலும் திருத்த வேண்டிய நிர்ப்பந்தங்களைக் காலம் ஏற்படுத்தி இருக்கின்றது.
அரசமைப்பைக் கொண்டு வந்த ஜே.ஆர் உள்ளடங்கலாக, பல ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளை, ஏதோ ஒரு விடயத்தில் திருப்திப்படுத்துவதாக அமையவில்லை. அந்தவகையில், இதுவரை 19 திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 12ஆவது சட்டமூலம், சட்டமாக்கப்படவில்லை. மேலும் சில சட்டமூலங்கள், பல தடவைகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டும், அவை நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டு இருக்கின்றன.
காலத்துக்குக் காலம், மக்கள் நலன் சார்ந்து உருவாகின்ற தேவைப்பாடுகள், ஆட்சியாளர்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கின்ற எத்தனங்கள் எனப் பல காரணங்களின் அடிப்படையில், இவ்வாறு அரசமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு ஒருபடி மேலே சென்று, நல்லாட்சி அரசாங்கம், புதிதாக இன்னுமோர் அரசமைப்பை உருவாக்கும் நோக்கில், அரசமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்தது.
இந்த வரிசையிலேயே, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில், புதிய அரசாங்கம் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. 20ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மேலும் பல திருத்தங்களைக் கொண்டுவரவோ, அரசமைப்பை முழுமையாக மறுசீரமைக்கவோ பொதுஜன பெரமுன, அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்துவதற்கான நிகழ்தகவுகளும் இல்லாமலில்லை.
மஹிந்த ராஜபக்ஷ, 2010இல் ஆரம்பித்த இரண்டாவது ஆட்சிக் காலத்தில், அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்பில் காணப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இத்திருத்தம் அமைந்தது. இச்சட்டமூலத்துக்கு, இன்றைய ஆளும் தரப்பும் முஸ்லிம் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஆதரவளித்திருந்தன.
2015இல் ஆட்சியைப் பிடித்த மைத்திரி- ரணில் கூட்டரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தது. ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன்’ என்று, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜனாதிபதியின் சில அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் 2015இல் இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. 215 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இது நிறைவேற்றப்பட்டது.
19ஆவது திருத்த சட்டமூலமானது, அடிப்படையில் ஜனாதிபதியின் ஒருசில அதிகாரங்களைக் குறைத்து, அவற்றை நாடாளுமன்றத்துக்குக் கையளிக்கும் வகையிலானதாகும். ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைப்பு, நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் கட்டுப்பாடு, அரசமைப்புப் பேரவை உருவாக்கம், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு, சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கம் போன்றவை, இச்சட்டமூலத்தில் உள்ளடங்கியிருந்த முக்கிய விடயங்களாகும். குறிப்பாக, ஜனாதிபதியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிப்பதைத் தடை செய்யும் 18ஆவது திருத்த வரைபுக்கான திருத்தமும் இதில் உள்ளடங்கியிருந்தது.
இதன்படி நாடாளுமன்றம், அரசமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டதுடன், நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவில்லை என்றாலும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் சற்றுக் குறைக்கப்பட்டன. மறைமுகமாக, பிரதமரின் அதிகாரங்கள் சற்று அதிகரித்ததான பிரக்ஞையும் ஏற்பட்டது.
19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு சில விடயங்கள், ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகே நடைமுறைக்கு வரும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தனக்கிருந்த அதிகாரத்தைக் குறைக்க முன்வந்தமைக்காக, மைத்திரிபால சிறிசேன பாராட்டப்பட்டார்.
ஆனால், ஐ.தே.கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் பனிப்போர் தொடங்கிய பிறகு, 19ஆவது திருத்தத்தை, மைத்திரி விமர்சிக்கத் தொடங்கினார். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்டது என்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை அற்றுப் போயுள்ளது என்றும் இதை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்.
நாட்டில், ‘அனைத்து அதிகாரங்களும்’ கொண்ட ஜனாதிபதி முறைமை நிலவ வேண்டும் என்பதில், ராஜபக்ஷக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி, நீண்டகாலம் ஆட்சிபீடத்தில் வீற்றிருப்பதற்கான வேட்கையும் அவர்களுக்கு இருக்கின்றது. எனவே, இப்போதிருக்கின்ற அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, உயர்ந்தபட்ச அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளுவதில் ஆளும் பொதுஜன பெரமுன மும்முரம் காட்டுகின்றது. இதில் முதற்கட்டமாகவே, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் முன்னகர்த்தப்படவுள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் என்ற பெயரில், இதற்கு முன்னரும் திருத்த முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதன் உள்ளடக்கங்கள் வேறுபட்டவையாக இருந்தன. அவை, வெற்றி பெறாமையின் காரணமாக, 19 இல்லாதொழிக்கும் புதிய திருத்தத்துக்கு 20 ஆவது திருத்தம் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.
2015ஆம் ஆண்டிலேயே முதன்முறையாக 20ஆவது திருத்தம் உத்தேசிக்கப்பட்டது. எல்லை மீள் நிர்ணயம், புதிய தேர்தல் முறைமை ஆகியவற்றை இத்திருத்தம் முன்வைத்தது. 2017இல், மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடத்தும் விடயம் என்ற கோதாவில், 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தையடுத்து அம்முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, 20ஆவது திருத்தம் வேறு பல மொழிவுகளுடன் சபைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 20ஆவது திருத்தத்தில், என்னென்ன விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமோ என்ற கேள்வி, பரவலாக எழுந்துள்ளது.
முக்கியமாக, 19ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனாதிபதியின் பதவிக்காலம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற நல்ல விடயங்களைத் தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் ஆலோசிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் காலம், அரசமைப்புப் பேரவையின் கட்டமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் போன்றவற்றுக்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் குறிப்பிட்ட சில அதிகாரங்கள்போன்ற மேலும் பல திருத்தங்கள், 20இன் ஊடாகக் கொண்டு வரப்படலாம் என்ற அனுமானங்கள் வெளியாகியுள்ளன.
இங்கு முக்கியமாக, இதுவரை அரசமைப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில திருத்தங்கள் மீளத் திருத்தப்பட்டுள்ளன; இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. இதனால், அரசியல் செய்கின்றவர்களைவிட, மக்களுக்கு நேரடியான அனுகூலங்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன என்றால் பொய்யில்லை.
அரசமைப்பிலும் சரி, அதில் ஏற்படுத்தப்படுகின்ற திருத்தங்களிலும் சரி, மக்களின் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுவதாக வெளியுலகுக்குக் காண்பிக்கப்பட்டாலும் நிஜத்தில் ஆட்சியாளர்களின் எதிர்கால நலனே, கருத்தில் கொள்ளப்படுவதுண்டு.
எனவே, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும் விடயத்தில் அரசாங்கமானது, பெரும்பான்மை மக்களையும் சிறுபான்மைச் சமூகங்களையும் சம கண்ணோட்டத்தில் நோக்கி, அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுஜனப் பெரமுன கூறியிருப்பதைப் போல, அரசமைப்பில் உள்ள நல்ல விடயங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதே நல்லது. இது, மக்களை மய்யமாகக் கொண்டதாக அமைவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவது அவசியம். அதுவே மக்கள் ஆணைக்குச் செய்கின்ற சரியான கைமாறும் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago