Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 24 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் தமது அரசு மீதுள்ள கோபத்திலும் வேதனையிலும் தான் விமர்சனங்களை முன்வைத்தன என்று கூறினார்.
தேர்தல் காலத்தில் பிரசாரங்களைச் செய்கின்ற போது, பலவாறு பலதையும் கூறிய ஜனாதிபதி இப்போது யதார்த்தத்திலும் உத்தியோகப்பூர்வமாகவும் வங்குரோத்து அடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் தேர்தல் கால வாக்குறுதிகளைக் கணக்கிலெடுக்காதீர்கள் என்பதாகக் கூட இருக்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாடு பெற்றுள்ள கடன்களின் வட்டிகளைச் செலுத்துவதற்காக 2950 பில்லியன் ரூபாவும், அரச சேவை சம்பளத்திற்காக 1352 பில்லியன் ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவைச் செலுத்துவதற்காக 442 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசின் செலவினத்தைக் குறைப்பதற்காக வருவாயை அதிகரிக்கவென அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் நீக்கப்பட்டு அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அதிலிருந்து கழிக்கப்படுகின்றவைகள் அதிகமாகியிருக்கின்றன. இது அரச ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகையைக் குறைக்கும். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இருக்கிறது.
அவ்வாறானால் அரச ஊழியர்களின் கைகளுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு இப்போதைக்குக் குறைவாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி போதாது, பிரதேசங்களுக்கான நிதிகள் குறைவு என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில்தான் இவ்வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேறியிருக்கிறது.
அனுர ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்குச் சென்று வந்தார் பின்னர் சீனாவுக்குச் சென்றார். வேறு பல நாடுகளுக்கும் பயணமாக இருக்கிறார். அவரது பதவிக்காலத்தின் ஆறு மாத காலத்துக்குள் நாட்டு மக்களுக்காக அவர் செய்து முடித்திருக்கின்றார் என்று கேள்வி கேட்பதனை விடுத்து இவ்வாறு கதைகளை அடித்துவிடுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சாதாரணமாக இருக்கிறது.
ஒன்றுக்காக ஒன்றைப் பதிலீடாகக் கொடுக்கின்ற அல்லது காண்பிக்கின்ற சம்பவங்கள் வழமையாகவே நடைபெற்றுவருவதுதான். ஆனால் இங்கு வழமையைவிடவும் அதிகமாக நடைபெறுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கையை எடுத்த எடுப்பில் மாற்றிவிடுவது சாத்தியமற்ற ஒன்றே. இதற்குள் தேசிய மக்கள் சக்தி சொல்வதைப்போல் பொருளாதாரத்தை மக்களுக்கு ஏற்றால் மாற்றியமைப்பது மிகச் சிரமாகவே இருக்கும்.
வரவு-செலவுத் திட்ட முன்வைப்பின்போது, எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வெறுமனே விலக்கி விடப்படாமல் சாதகமான விடயங்கள் பரிசீலிக்கப்படுதல் நாட்டுக்குச் சிறப்பானதாகும். இந்நிலையில் பொருளாதார நிலைப்பாட்டினை நோக்குகையில், தேசிய மக்கள் சக்தி தங்கள் தேர்தல் கால பிரசாரத்தில் முன்வைத்திருந்த, ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் கடன் வசதிக்காகக் காண்பித்த எதிர்ப்புகள் இப்போது எங்கே போயின என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரந்தளவிலான கடன் வசதிகளுடன் நாட்டைக் கொண்டுசெல்லுதல் என்ற வழியே அவர்களுக்கு இருக்கிறது என்பது மாத்திரமே நிலைமை.
இந்த நிலைமையில் இருந்து கொண்டு பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து விட்டது என்ற கதையை எவ்வாறு அனுரவால் சொல்ல முடிகிறது என்பது தான் வேடிக்கை. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று கூறமுடியும். இந்தியாவும் சீனாவும் மாத்திரமே ஏட்டிக்குப் போட்டியாக தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காகவும், அதிகரித்துக் கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் வேலைகள் நாட்டில் நூறு வீதம் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி விடாது என்பது மறக்கப்படக் கூடாதது.
இந்நிலையில்தான், தன்னுடைய நாட்டு நலன்களைப் பிரதான நோக்காகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவ்வேளையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட இருக்கின்றன. முக்கியமாக சம்பூர் மின் நிலையத்துக்கான நிர்மாணத்தை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைப்பார். அதனை தவிர, வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை. அயல் நாட்டின் தலைவரின் வருகைக்குப் பொருளாதார ஸ்திரநிலையைக் கொண்டு முடிச்சிடுவது எந்தவகையில் பொருந்தும் என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
159 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையுடன் மக்களின் மகிழ்ச்சிக்கான, நிம்மதியான வாழ்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதே நல்லதாகும். அதனை விடுத்து, தேசபந்துவைக் கைது செய்வதே ஒரு பெரும் விடயமாகக் காண்பிக்கப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி வரையில் அதற்காகக் கருத்து வெளியிடுவதும். அதில், அவ்வளவு அக்கறையாக இருப்பது எந்தளவுக்கானது என்பது தெரியவில்லை.
தேசபந்து தேடப்பட்டார், தலைமறைவாக இருந்தார்.அவருக்காகப் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இறுதியில் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இப்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதிலென்ன வேடிக்கையென்றால், அவர் கடமையாற்றிய பொலிஸ்த் துறையின் உத்தியோகத்தர்களாலேயே அவர் வேட்டையாடப்பட்டிருக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தேசபந்துவின் விளம்பரம் தேசிய மக்கள் சக்திக்குப் போதுமானதாக இருக்கலாம்.
ஆனால், மூன்று வாரங்களாக நாட்டின் உளவுத்துறையால் அவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்யத் திறந்த பிடியாணை உள்ள ஒருவர், ஒரு சொகுசு காரில் நீதிமன்றத்தில் தோன்றி எப்படி வந்தார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று காவல்துறைக்குத் தெரியாததா? அல்லது அவர் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தாரா? அல்லது அவரைக் கைது செய்ய விரும்பவில்லையா? போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதும், ஆட்சி கலைக்கப்பட்டு அமைக்கப்பட்ட காபந்து அரசாங்கம் முன்னைய ஜனாதிபதி முதல், அமைச்சர்கள், பிரதானிகள் கைவசம் வைத்திருந்த வாகனங்கள் மீளப் பெறப்பட்ட, துரத்திப் பிடிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு விளம்பரம் நடத்தப்பட்டது. அது சற்று ஓய்ந்து போகவே ஊழல் தொடர்பான விடயங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைந்த புதிய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களால் மருத்துவச் செலவுக்கான பணம் பெறப்பட்டவைகள் வெளிப்படுத்தப்பட்டன.
பின்னர். ‘அரகலய’ போராட்டத்தில் பற்றவைக்கப்பட்ட சொத்துக்களுக்காக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீடுகள் வெளிக்கு வந்தன. பின் சுத்தமான இலங்கை ( கிளீன் சிறிலங்கா). அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் பூதாகாரமாக்கப்பட்டது.
இவ்வாறு நகரும் அரசு தனக்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.அனுரகுமார ஜனாதிபதியானவுடன், பாராளுமன்றத்தைக் கலைத்து அந்தச் சூட்டுடனேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், அந்தச் சூட்டுடன் நடத்த முடியாது போன உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான சூடாக வரவு-செலவு திட்டம் பயன்படுத்தப்படப் போகிறது. இருந்தாலும், இன்னமும் இரண்டு மாதங்களில்தான் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடான பிரதிபலிப்பு தெரிய வரும். அதுவரையில் காலம் தாழ்த்தாது இத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலின் பின்னரே மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வர்.இவ்வாறான நிலையில், “காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த” கதையாக நடைபெறுவனவற்றைக் கொண்டு ஒட்டுமொத்தமான முடிவுக்கு வருவதும் கருத்துக்களை வெளியிடுவதும் பொருத்தப்பாடற்றதாகவே தோன்றுகிறது. நாடு ஸ்த்திரநிலையை எட்டிவிட்டதா? இல்லையா? என்பதை மக்களிடமே கேட்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago