Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
நாட்டில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலை அவ்வளவாக மாறாதிருக்கும் நிலையில், அக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபர் மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மட்டுமேயாவார்.
கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார 5,740,179 வாக்குகளைப் பெற்று, 4,530,902 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 37 வேட்பாளர்களை பின் தள்ளிவிட்டு நாட்டின் அதி உயர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
ஆனால், இத்தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறாத காரணத்தால் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றிக் கொள்ளுமா? என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அனுரகுமார போட்டியிட்டார். ஆனால், அவர் அத்தேர்தலில் சுமார் மூன்று சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.
எனவே, அனுர அலையொன்று நாட்டில் புதிதாகத் தோன்றியிருந்தாலும், அவரால் ஜனாதிபதியாக முடியுமா? என்று பலர் கேள்வி எழுப்பினர். கணித அடிப்படையில் அது மிகவும் தர்க்க ரீதியான வாதமாகவும் தெரிந்தது.
ஆயினும், கணிதம் என்பது அரசியலல்ல, சில சந்தர்ப்பங்களில் அரசியல் மாற்றங்கள் எவ்வாறு இடம்பெறும் என்பதை முன்கூட்டியே கூற முடியாது. எனினும், அன்று 3 சதவீத வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெறுவது சாத்தியம் என்று நாம் எமது முன்னைய கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்தோம். தற்போதைய பொருளாதார நெருக்கடி சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை அவதானித்தே நாம் அவ்வாறு கூறினோம்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொது மக்களில் பலருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலிருந்த பிணைப்புக்கள் சிதைந்த சிதறி விட்டன.
குறிப்பாக மக்களின் வெறுப்புக்கு இலக்காகிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோடு இருந்த மக்களின் பிணைப்புக்கள் சிதைந்து அதன் ஆதரவாளர்கள் வேறு தலைமைகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அத்தோடு, 2022இல் வெடித்த மக்கள் எழுச்சியின் தாக்கத்தின் காரணமாக
மேலும் இந்த மரபு ரீதியான அரசியல் பிணைப்புக்கள் சிதைந்து மக்கள் புதிய அணிகளாகத் திரண்டுள்ளனர். அதன் விளைவே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை பதவிக்கு வந்துள்ளது.
இலங்கையில் தேர்தல் முறையில் பாரியதொரு குறை இருக்கிறது. அதாவது ஆளும் கட்சியானது ஆளும் கட்சியாக இருந்த வண்ணமே அரச வளங்களைப் பாவித்துத் தேர்தலில் பங்குபற்ற முடியும். இதனால் ஏனைய கட்சிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. தேர்தலில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
அதற்கு சிறந்த உதாரணம் கடந்த வருடம் நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களாகும். தமது கட்சி அத்தேர்தல்களில் தோல்வியடையும் என்று அச்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை ஒத்திவைப்பதற்காகப் பல தந்திரங்களைக் கையாண்டார்.
முதலில் தேர்தல் சட்டங்களைத் திருத்த முயன்றார்.
தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இது முறையற்றதாகும். இராணுவ அதிகாரி ஒருவர் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரைப் பணித்த போது அந்த பணிப்புரையை வழங்கிய நீதியரசர்களைப் பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த பாராளுமன்றத்தில் கூறினார்.
இது நீதிமன்றத்துக்கு விடுத்த அச்சுறுத்தலாகும். இறுதியில் நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியினை தடுத்து நிறுத்தியதன் விளைவாக அந்தத் தேர்தல் நடைபெறவில்லை.
ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சம் பலரிடம் இருந்தது. அதனால் பலர் தேர்தலை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினர்.
அதேபோல், தமது அதிகாரத்தைப் பாவித்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு அரச வளங்களைப் பாவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், அரசாங்கம் அதனையும் அரசியலுக்குப் பாவித்தது. ஒருமுறை அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி வாபஸ் பெறப்பட்டது.
பின்னர் 1,700 ரூபாய் வழங்குவதாகக் கூறி மற்றொரு வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி தமது அதிகாரங்களைப் பாவித்துத் தேர்தலை முன்னிட்டு சிலருக்கு வீடு வழங்கினார்.
காணி வழங்கினார். தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை முடிவு எடுத்தது. தேர்தல் காலத்தில் இவை அனைத்தும் இலஞ்சமாகவே கணிக்கப்படுகிறது. ஆயினும், தேர்தலில் அவை ஜனாதிபதிக்குப் பயனளிக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியில் சிறுபான்மையினர் மிகச் சிலரே இணைந்துள்ளனர்.
இதற்குத் தவறான பிரசாரங்கள், தொடர்பாடல் பிரச்சினைகள்
போன்றவை காரணமாகி இருக்கலாம்.
தனிப்பட்ட நலன்களைப் பார்க்கிலும் பொது நலன்களை முன்னிறுத்தியே மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் இது வரை அரசியலில் ஈடுபட்டுள்ளது. இதுவரை காலமும் அந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் சம்பளத்தைக் கட்சி நிதிக்கு வழங்கி அதில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், அதன் தலைவர்கள் எவருக்கும் தனிப்பட்ட வாக்குறுதிகளை வழங்குவதில்லை.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தைக் கட்சி நிதிக்கு வழங்குவதாகவே கூறப்படுகிறது. இவற்றில் ஊழல் இடம்பெறுவதாக எவருமே கூறவில்லை.
எனவே, சலுகை அரசியலைப் பழகிவிட்ட அரசியல்வாதிகள் இக்கட்சிகளை விரும்புவதில்லை.
இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வரசாங்கங்களில் இருந்த அரசியல்வாதிகளின் தற்போதைய வாழ்க்கைத் தரம் அதற்கு சான்றாக இருக்கிறது.
தாம் பதவிக்கு வந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் அவர்களுக்கு வழங்கப்படும் கோடிக் கணக்கு ரூபாய் பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்து, அமைச்சர்களுக்கு தற்போது போல் ஐந்து, ஆறு வாகனங்கள் வழங்காது ஒரு வாகனத்தை மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர்களது மின்சார மற்றும் நீர் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தாது என்றும் தேர்தல் காலத்தில் அனுரகுமார கூறினார்.
எனவே, ஏனைய கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தியை விரும்புவதில்லை. அதேபோல், இதுவரை ஊழல் மலிந்த அரசாங்கங்களில் இருந்த அரசியல்வாதிகளைத் தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
எனவே, தான் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்கும் தாவிய போதிலும் எவருமே தேசிய மக்கள்
சக்திக்குத் தாவவில்லை.
எனவே, தற்போது ஏனைய கட்சிகளில் அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தேசிய மக்கள் சக்தியை எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களுடன் இணைந்திருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிலும் பெரும்பாலானோரும் தேசிய மக்கள் சக்தியோடு இணையவில்லை என்று ஊகிக்கலாம். அதுவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்குத் தமிழ் முஸ்லிம் வாக்குகள் குறையக் காரணமாக இருக்கலாம்.
இது சிறுபான்மையினருக்கோ, தேசிய மக்கள் சக்திக்கோ, நல்லதல்ல. உதாரணமாக, பொதுத் தேர்தல் நடைபெறும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை நிறுவினால் அனுரகுமாரவின் அமைச்சரவையில் எத்தனை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடம் கிடைக்கும்? அவர்கள் பெயருக்காக எவரையும் சேர்த்துக் கொள்வதில்லை.
அதற்கு அவர்களிடம் மட்டுமன்றி சிறுபான்மை மக்களிடமும் தீர்வு இருக்க வேண்டும். அவர்களது அரசியல் கலாசாரத்தோடு, ஒருமித்துப் போகச் சிறுபான்மையினர் தயாராக இல்லாவிட்டால் நாளை அமைச்சரவையிலும் வேறு பல நிறுவனங்களின் முக்கயஸ்தர்களாகவும் முஸ்லிம்கள் இல்லை, தமிழர்கள் இல்லை என்று கூச்சலிடுவதில் அர்த்தம் இல்லை.
09.25.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago