2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

அதிவலதின் எதிர்காலம்: எச்சரிக்கைக் குறிப்புகள்

Johnsan Bastiampillai   / 2023 மே 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 26 

இலங்கை போன்ற தென்னாசியச் சூழலில், அதிவலதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வினாவுக்கான விடையைப் பெறுவதற்கு, பயனுள்ள  ஐந்து அடிப்படைப் புரிதல்களில் இரண்டைக் கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக ஏனையவற்றை நோக்கலாம். 

மூன்றாவது, அரசாங்க ஊழியர்களிடமிருந்து அதிவலதுக்கு ஆதரவு கிட்டுகிறது. ஒருபகுதியினர், அதிவலது சக்திகளுடன் இணைகிறார்கள்; அல்லது, அவர்களுக்கு அனுதாபம் காட்டுகிறார்கள், மற்றவர்கள், நடுநிலைமை என்ற பெயரில், அவர்களின் அநீதிகளைக் கண்டு மௌனத்தைக் கடைபிடிக்கின்றனர். எனவே, கருத்தியல் ரீதியாக அதிவலதின் அபாயத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

நான்காவது, தென்னாசியாவில் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிவலதுக்கான அதிகபட்ச ஆதரவு இருக்கிறது. இலங்கையை பொறுத்தவரை, அதிவலது உறுப்பினர்களின் செல்வாக்கு, நகர்ப்புறம் சார்ந்தாகவே தேர்தல்களில் இருப்பது ஓர் எடுத்துக்காட்டு. எனவே, களப்பணியாற்றுவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தால் அதிவலதின் ஆபத்தைக் கையாளவியலும். 

ஐந்தாவது, தாராளவாத ஜனநாயக ஆட்சியின் மிக முக்கியமான குறைபாடுகள், அதிவலதின் ஆதரவுத்தளத்தை அதிகரிக்கின்றன. முறையான சமத்துவமின்மை, சமூகப் படிநிலை இடைவெளியை நிவர்த்தி செய்வதில் அதன் தோல்வி என்பன, நிச்சயமாக அனைவரையும் புண்படுத்தி உள்ளன. 

எனவே தாராளவாத ஜனநாயக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்காமல், மக்கள் நல அரசை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களில் முற்போக்கு சக்திகள் ஈடுபடுவது அவசியம்.

இந்த அடிப்படைகளில், இலங்கையின் அண்மைய அனுபங்கள் சொல்கின்ற செய்தி என்ன? குறிப்பாக, ‘அரகலய’வும் அதைத் தொடர்ந்த அரசியல் அரங்குகளும் சில திசைகாட்டிகளைத் தருகின்றன. 

மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலும் அதிவலது எவ்வாறு இலங்கையில் செல்வாக்கோடு இருக்கிறது என்ற வினா, பலர் மத்தியில் உள்ளது. இதற்கு ‘அரகலய’ என்ற ஒருவகையான புரட்சிகரத் தன்மையை, எவ்வாறு அதிகார வர்க்கம் எதிர்ப்புரட்சி ஊடாகக் கையாளுகிறது என்பதையும் அதில் அதிவலதின் பாத்திரத்தையும் புரிந்து கொள்ளல் அவசியம். 

முதலாவது பாடம், எதிர்ப்புரட்சி என்ற சொல்லுக்குத் தகுதியான அரசியல் இயக்கங்களில் பரந்த அளவில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகையானது, ஆதிக்க வர்க்கத்தால் நேரடியாக இயக்கப்படும் எதிர்புரட்சியானது, அந்த ஆதிக்கக் கட்டமைப்பிலிருந்து பயனடையும் உயரடுக்குகள் மற்றும் நட்பு சக்திகளுக்கு எதிராக ஒரு சமூக அமைப்பை அடிப்படையாக மாற்றும் ஒரு புரட்சிகர அல்லது சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு கிளர்ச்சியான கீழ்த்தட்டு வர்க்கத்தை நிறுத்திச் சிதைப்பது. 

இந்தக் கணக்கெடுப்பில், முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலி மற்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்தோனேசியா, சிலி, தாய்லாந்து ஆகியவற்றின் வர்க்க அடிப்படையிலான எதிர்ப்புரட்சிகள் இந்த வகைக்குள் அடங்கும். 

இரண்டாவது வகையானது, ஒரு புரட்சிகர அல்லது சீர்திருத்த இயக்கத்தை நோக்கியதாக அல்லாமல், மாறாக ஊழல், திறமையற்ற மற்றும் பொருட்களை வழங்க முடியாத தாராளவாத ஜனநாயக ஆட்சியை மாற்றுவது நோக்கி இயக்கப்படும் எதிர்ப்புரட்சிச் செயற்பாடுகள். இது பெரும்பாலும் சமூக சீர்திருத்தம், ஊழலை ஒழித்தல், தனிப்பட்ட பாதுகாப்பை வழங்குதல் என்றளவில் சுருங்கி விடுகின்றன. பல தீவிர வலதுசாரி இயக்கங்கள், இந்த வகையான எதிர்ப்புரட்சிக்கு நெருக்கமாக உள்ளன. தாராளவாத ஜனநாயகத்தில் சலுகை பெறும் முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தும் இந்தியாவில், இந்துத்துவ எதிர்ப்புரட்சி, பிலிப்பைன்ஸில் ரொட்ரிகோ டுட்டார்ட்டால் ஆளுமைப்படுத்தப்பட்ட தாராளவாத-ஜனநாயக எதிர்ப்பு இயக்கம் என்பன இதன் அண்மைய உதாரணங்கள். 

இவை தாராளவாத ஜனநாயகத்தை, அதன் தோல்வியை ஏளனம் செய்யும் இந்த வகையான எதிர்ப்புரட்சியின் பல அம்சங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இவை ஊழல் நிறைந்த உயரடுக்கினரைப் பாதுகாப்பதை தமது பிரதான இலக்காகக் கொண்டுள்ளன. 

இந்த இயக்கங்களில் சிலவற்றில் கலாசார கதைகள், முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தேசியவாதக் கதைகள், மத அடிப்படைவாதம், பண்டைக்கால பெருமிதம் போன்றன முக்கிய கருவிகளாகப் பயன்படுகின்றன. இலங்கையில் இப்போது அரங்கேறும் நிகழ்வுகள் இதற்கு நல்ல சான்றாகும். 

இரண்டாவது பாடம் என்னவென்றால், ஆளும் வர்க்கத்தால் இயக்கப்படும் எதிர்ப்புரட்சியை, மக்களுக்கு எதிரானதாக இல்லாமல் அதேவேளை புரட்சிகர மனநிலையை மழுங்கடிக்கும் உபாயம் முன்னெடுக்கப்படுகிறது. சமூக சீர்திருத்தத்தை ஊக்குவிக்க சட்டத்தையும் நிறுவப்பட்ட நிறுவனங்களையும் பயன்படுத்தக்கூடிய ஒரு முற்போக்கான இயக்கமாக இது உருவாக்கப்படுகிறது. இத்தாலி, இந்தோனேஷியா, சிலி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதுதான் நடந்தது. இது ஆளும் வர்க்கத்தின் இருப்பையும் இயக்கத்தையும் உறுதிசெய்ய வழிசெய்கிறது. 

மூன்றாவது பாடம், நடுத்தர வர்க்கம் என்பது பெரும் தளம்பல் நிறைந்த காலங்களில் அரசியலில் சுழலும் மையமாக உள்ளது. நடுத்தர வர்க்கம், கொந்தளிப்பானதாக உள்ளது. தாய்லாந்தில் சுசிந்தா இராணுவ சர்வாதிகாரம், பிலிப்பைன்ஸில் மார்கோஸ் ஆட்சி போன்ற சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரத்தின் ஆட்சிகள் சில சூழ்நிலைகளில், ஜனநாயகமயமாக்கலைத் தள்ளுவதில் முற்போக்கான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று காட்டியது. 

இருப்பினும், மற்ற சூழ்நிலைகளில், இது ஓர் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. மேலும், இது பெரும் அரசியல் கிளர்ச்சி காலங்களில் குறிப்பாக, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் போது, இந்த நடுத்தர வர்க்கம் தங்கள் நலன்களைக் காப்பதற்காக உயரடுக்கின் சார்பாகச் செயற்படுகின்றன. 

சில வேளைகளில், தம் நலன்களுக்காக சர்வாதிகாரிகள் பதவிக்கு வருவதற்கு துணை போகின்றன. இலங்கையில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வருகை இவ்வாறு நிகழ்ந்ததே!

நான்காவதாக, அரசு பலவீனமாக, சட்டபூர்வ தன்மை இல்லாத நிலையில், உயரடுக்குகள் பாசிச துணை இராணுவக் குழுக்களை நாடுகின்றன. துணை இராணுவக் குழுக்கள் ஓர் எதிர்ப்புரட்சிக் கருவியின் இன்றியமையாத பகுதி. அவையே ஆட்சியிலுள்ள அரசியல் கட்சியின் சமூக மற்றும் கலாசார முன்னணியாகச் செயற்படுகின்றன. 

மறுபுறம், அரசு (குறிப்பாக, அடக்குமுறை அமைப்புகள்) வலிமையாக இருக்கும் போது, அவை பொதுவாக எதிர்ப்புரட்சியின் இறுதிக் கட்டத்தை வழிநடத்துகின்றன. இது இடதுசாரித் தன்மையுடைய முற்போக்கு அமைப்புகளையும் நபர்களையும் முழுமையாக இல்லாதொழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுவதற்கு, தமக்குச் சார்பான சிவில் சமூகக் குழுக்களைப் பயன்படுத்துகின்றன. இளையோரிடையே புரட்சிகர சிந்தனையை மழுங்கடிக்கும் அமைப்புகளை உருவாக்குதல் முக்கியமானது. ஏனெனில், இளையோரே புரட்சியின் வலிமையான வினைதிறனான பங்காளிகள் என்பதை அதிகார வர்க்கம் நன்கறியும்.  

ஐந்தாவது, அதிகாரப் பிரயோகமும் வன்முறையும், எதிர்ப்புரட்சி சக்திகள் தங்கள் எதிர்த்தரப்பு மீது பின்பற்றும் விருப்பமான உத்தியாகும். குறிப்பாக, புரட்சிகர சக்திகள் ஜனநாயக ரீதியாக அமைதியானதாக இருந்த போதும், வன்முறைப் பிரயோகம் விரும்பப்படுகிறது. ஏனெனில் இதன்மூலம் புரட்சிகர சக்திகளை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் அதிகார வர்க்கம் உறுதியாக இருக்கிறது. இலங்கையில் ‘அரகலய’வுக்கு பின் நிகழ்ந்த சம்பவங்கள், இதற்கான அண்மைய உதாரணங்கள் ஆகும். 

ஆறாவது, எதிர்ப்புரட்சிகர இயக்கங்கள், ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் அல்லது சமூக தூய்மையை சீர்குலைப்பவர்கள் என, குறிப்பிட்ட குழுக்கள் குறிவைக்கப்படுகின்றன. பெரும்பான்மையின் எதிர்ப்புரட்சியில், சிறுபான்மையினர் மற்றும் கம்யூனிஸ்டுகள் பிரதான இலக்காகின்றனர். 

சில சந்தர்ப்பங்களில், இலக்கின் வர்க்கம் ஒரு பலிகடாவை விட அதிகமாகக் காணப்படுகிறது. அப்போது கருத்தியல் ரீதியாக அனைத்து மனித இனத்திலிருந்தும் அகற்றப்பட வேண்டிய பூச்சிகள் அல்லது முறையான அடக்குமுறைக்கு தகுதியான குழுக்களாக, இவை வகைப்படுத்தப்படுகின்றன. இதில் அதிவலதின் பங்கு பெரிது. 

இலங்கையின் அண்மைய அனுபங்களும் இப்போது நாட்டின் வடக்கு,  கிழக்கில் நடந்தேறுபவைகளும் சில முக்கியமான எச்சரிக்கைக் குறிப்புகளைத் தருகின்றன. 
இலங்கையில் பல்முனைப்பட்ட நெருக்கடிகள் அதிவலதின் கைகளை வலுப்படுத்தி உள்ளன. அவை அடிப்படையில் இரண்டு விடயங்களைக் குறிவைத்துச் செய்கின்றன. முதலாவது, புரட்சிகர சக்திகளை இல்லாது ஒழிப்பதையும் அச்சக்திகள் செல்வாக்கு இழப்பதையும் நோக்காகக் கொண்ட செயற்பாடுகளாகும்.  

இரண்டாவது, மதத்தேசியவாதத்தைக் கிளறுவதன் ஊடு, திசைதிருப்பல் உத்தியைக் கையிலெடுக்கின்றன. அதிவலதின் அதிகரிக்கும் செல்வாக்கு, இலங்கைக்கு சேதத்தையே கொணர்ந்து சேர்க்கும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .