Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 20 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
2009இல் முடிவுற்ற போருடன் இலங்கையின் அரசியலில் விடுதலைப் புலிகளின் பங்கு முடிந்து விட்டது.
இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள அதன் ஆதரவாளர்கள் இந்த யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை அரசு, குறிப்பாக அதன் பாதுகாப்புக் கட்டமைப்பானது, பாராளுமன்ற அரசியல் அமைப்பாகக் கூட புலிகளை மீண்டும் எழுச்சி பெற அனுமதிக்க வாய்ப்பில்லை. புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்தோர் தமது ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் வெளிநாட்டில் அணி திரட்டும் வேலையைப் போரின் பின்னரான முதல் சில ஆண்டுகளில் மேற்கொண்டனர்.
ஆனால், காலப்போக்கில் அவை உள் முரண்பாடுகளாலும் பிளவுகளாலும் நீர்த்துப் போயின. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி பல வடிவங்களில் வெளிப்பட்டது. இந்தப் போட்டியின் உச்சபட்சம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதமாகப் பல்லாண்டு நீடித்தது. புலம்பெயர் தேசங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவோர் உண்டு.
இலங்கையில் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இன உறவுகளின் தன்மையைத் தொடர்ந்து வரையறுக்கும் ஒன்றாக இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய கேள்வி இருந்தது. இலங்கையின் அரசியல் சமன்பாட்டிலிருந்து இராணுவ வழி மூலம் விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டவுடன், புலிகள் அல்லாத தமிழ்க் கட்சிகளுடன் உடனடியாக அரசியல் சமரசம் ஏற்படும் என்று இந்தியாவும் மேற்கத்தியச் சக்திகளும் நினைத்ததாகத் தெரிகிறது.
ஆனால், இலங்கையில் அது நடப்பதாகத் தெரியவில்லை. யுத்தம் நிறைவடைந்தவுடன் அரசியல் தீர்வொன்றை அமுல்படுத்துவதாக யுத்தத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு உறுதியளித்தார். தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை நோக்கி நகரும் ராஜபக்ஷ நிர்வாகத்தின் அரசியல் ஆற்றலை மட்டுப்படுத்தும் உள்ளகக் கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த வாக்குறுதியானது நடைமுறைக்கு வரவில்லை.
போரின் பின்னரான இலங்கையின் ஆட்சியானது, ஜனாதிபதி ராஜபக்ஷ தனது போர் முயற்சிகளுக்கு ஆதரவாக முன்னர் ஒன்றிணைத்த ஒரு பரந்த கூட்டணியின் மையமாக உள்ள கடும் போக்கு சிங்கள தேசியவாதிகளின் கூட்டணியாகும்.
அந்தக் கூட்டணியில் இராணுவம், ஊடகங்கள், தேசியவாத புத்திஜீவிகள், புலிகளுக்கு எதிரான தமிழர்களின் அரசியல் உயரடுக்குகள், அத்துடன், தமிழர் அல்லாத சிறுபான்மையினர், இலங்கை புலம்பெயர்ந்தோர் மற்றும் பௌத்த மற்றும் கத்தோலிக்க மத நிறுவனங்கள் அடங்கும். இது ஒரு பரந்த மற்றும் சக்திவாய்ந்த போர் கூட்டணியாகும்.
எவ்வாறாயினும், உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கையில் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட அதே கூட்டணியானது, தமிழ் அரசியல் கோரிக்கைகளில் சிலவற்றையாவது பூர்த்தி செய்யக்கூடிய நியாயமான மற்றும் நியாயமான அரசியல் தீர்விற்கான வாகனமாக இருக்க முடியாது என்பதை அது தனது நடத்தையூடு உறுதி செய்தமையாகும்.
எந்தவொரு அதிகாரப் பகிர்வு கட்டமைப்பையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் தயக்கம் இந்த சிக்கலான பிரச்சினையில் பெருமளவில் வேரூன்றியுள்ளது. இப்பின்புலத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் இரண்டு தெரிவுகள் இருந்தன. மிதவாத அரசியல் மற்றும் சித்தாந்த சக்திகளின் புதிய போருக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்க வேண்டும் அல்லது இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைத் தொடர்ந்து ஒத்திவைக்க வேண்டும். அவர் இரண்டாவதைத் தெரிவு செய்தார்.
தேசியப் பாதுகாப்பு ஆட்சியின் கீழ், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டும் பாதுகாப்பு நிறுவனத்திற்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவை தேசியப் பாதுகாப்பு ஆட்சிக்கான சட்டக் கட்டமைப்பை வழங்கின.
போரின் உக்கிரமான காலகட்டத்தில், ஊடக சுதந்திரம் உண்மையாகவும் உருவகமாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாளது. ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும், அன்றைய போக்காக இருந்தது.
26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பான முடிவு இலங்கையில் அதிகார உறவுகளில் வியத்தகு மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இரண்டு முக்கிய போர்க் குணமிக்க தரப்புகளுக்கு இடையே பல தசாப்தங்களாக ஆயுத மோதலுக்குப் பிறகு, மோதலில் ஒரு தரப்பினர் அழிக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி பற்றிய செய்திகள் பல்வேறு குழுக்களிடையே பெறப்பட்ட விதமும் சமூகத்தின் அதிகார மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.
2009 மே மற்றும் ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடந்தன.
பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் பெரும்பாலான வீடுகளுக்கு வெளியே இலங்கைக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்த அதேவேளை, பாரிய கட்-அவுட்கள் மற்றும் பதாகைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் வெற்றியைப் பெற்ற வீர வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தன.
ஜனாதிபதி தனது சொந்த சாதனைகள் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் புகழ்பெற்ற மன்னர்களின் சாதனைகளுக்கு இடையே சமாந்தரத்தை வரைந்தார்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்ததன் மூலம், ஜனாதிபதியின் செல்வாக்கும் அதிகாரமும் முன்னெப்போதையும் விட அதிகரித்திருந்தது. ஆனால், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் போது, விடுதலைப் புலிகள் தங்கள் வன்முறைப் போராட்டத்தை நடத்துவதாகக் கூறிய தமிழ் மக்களில் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை, போர் முடிந்துவிட்டது என்ற நிம்மதி,இறந்த அல்லது காயமடைந்த உறவினர்களின் துயரத்தாலும், நடமாடும் சுதந்திரமின்றி, முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான உயிர் பிழைத்த தமிழ் மக்களின் அவல நிலை குறித்த கோபத்தாலும் மேலெழுந்தது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் இனி ஒரு போர் இல்லை. இருப்பினும், இரத்தக் களரி மோதலுக்கு வழிவகுத்த பல அடிப்படைச் சிக்கல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகள் தீர்க்கப்படாமல் இருந்தன. போர்க்கால இலங்கையை வகைப்படுத்திய சீரற்ற அதிகார உறவுகள் - இன மற்றும்
மதக் குழுக்களிடையே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மற்றும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் - போருக்குப் பிந்தைய எதிர்காலத்தை நாடு எதிர்கொள்ளும் போது இலங்கையின் சமூகத்தைத் தொடர்ந்து வடிவமைக்கிறது.
அரசியல் சீர்திருத்தம் (பிராந்திய அதிகாரப் பகிர்வு உட்பட), பொருளாதார மேம்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை அதிகாரத்திற்குச் சமமற்ற அணுகல் கொண்ட வெவ்வேறு அரங்காடிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய முயற்சிகளாகும். ஆனால், அது எதையும் செய்யவிடாமல் போரின் வெற்றி உருவாக்கிய சிங்கள-பௌத்த பேரினவாத அகங்காரம் தடுத்தது.
இலங்கையில் மாற்றப்பட்ட அதிகார உறவுகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும், அதிகாரம் செலுத்தப்படும் ஏனைய அமைப்புகள் அப்படியே இருக்கின்றன.
இலங்கைச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு, போருக்குப் பின்னரான அதன் வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கு, இந்த பல்வேறு அதிகார உறவுகளின் தொடர்ச்சி மற்றும் மாற்றங்கள் இரண்டையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
அரசியல் அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும்,பொருளாதாரத் துறையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் நடக்கும் அதிகாரப் பேச்சுவார்த்தைகள், எடுத்துக்காட்டாக, இராணுவ சோதனைச் சாவடிகள் அல்லது மக்களின் வீடுகளுக்குள் தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள் என்பன சில முக்கிய செய்தியை உணர்த்தின. அவை அதிகாரம் பற்றியதாக இருந்தன.
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையை ஆட்கொண்டது போன்ற ஒரு ஆயுத மோதலை பகுப்பாய்வு செய்யும் போது, அதிகாரம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது மற்றும் செயல்படுத்துகிறது என்பதை நாம் காண்கிறோம். ஆயுதமேந்திய அரங்காடிகளுக்கிடையே மிகத் தெளிவான அதிகாரப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இருப்பினும், பல குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் இடையிலான அதிகார இயக்கவியல் சமூகத்தையும் அதில் வாழும் தனிநபர்களின் வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. ஒரு போரின் முடிவில், புனரமைப்பு செயல்முறை ஒரு புதிய சூழலை வழங்குகிறது, இதில் முந்தைய சக்தி கட்டமைப்புகளை வலுப்படுத்தலாம் அல்லது சவாலுக்குள்ளாகலாம்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையிலான பல தசாப்தகால யுத்தம் இலங்கையின் அதிகார மோதலின் மேலோட்டமான சித்தரிப்பாக ‘இன மோதலை’ ஆக்கியது. இருப்பினும், வரலாற்று ரீதியாக, அதிகாரத்திற்கான போட்டி வர்க்கம், சாதி, இனம், மதம் மற்றும் கட்சி அரசியல் சார்பு போன்ற பல்வேறு வழிகளில் நடந்துள்ளது. பல்கலாசார சமூகமாக இலங்கையில் அதிகாரம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அது இன முரண்பாட்டிலும் போரிலும் போரின் முடிவிலும் அதன் பின்னரும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது.
12.07.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago