2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு 2012இன் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த செர்கே ஹரோச், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்ட் ஆகியோர் மேற்கொண்டுள்ள ஒளி மற்றும் சடப்பொருள் தொடர்பான 'குவான்டம் ஒப்டிக்ஸ்'ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுக்களின் துணைத் துகளான போட்டான் மற்றும் அயன்களின் செயற்பாடுகளை விரிவாக அறிந்துகொள்ள இவர்களது ஆராய்ச்சி உதவியுள்ளது.

இவர்களது ஆராய்ச்சி ஒளியால் இயங்கும் கடிகாரங்களின் திறனை அணு கடிகாரங்களை விடத் துல்லியமானதாக தரம் உயர்த்தவும், கணினிகளின் செயற்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

இவர்களுக்காக 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் (152,545,000 ரூபா) பரிசாக வழங்கப்படவுள்ள நிலையில் இந்த பரிசுத்தொகை இவ்விருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான பௌதிகவியலுக்கான நோபல் பரிசு ஹிக்ஸ் போஸானை (கடவுளின் அணுத்துகள்) கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கமாக நோபல் பரிசுகள் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகள் கழித்தே வழங்கப்பட்டு வருவதால், ஹிக்ஸ் போஸானுக்கான விருது அடுத்த சில ஆண்டுகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பௌதிகவியலுக்கான முதல் நோபல் பரிசு எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்த ஜேர்மனியைச் சேர்ந்த வில்ஹெம் ரோண்ட்ஜெனுக்கு வழங்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குரிய ஆராய்ச்சியாளர்களை தேர்வுக்குழு தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

இங்கிலாந்தின் ஜோன் கக்ர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளன.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 15ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

அனைத்து பரிசுகளும் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் திகதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X