2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’’வருடம் முழுவதும் பெண்கள் தினத்தைக் கொண்டாடவேண்டும்’’

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , பி.ப. 04:20 - 0     - 20

பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒரு நாள் போதாது அவர்களைச் சிறப்பிப்பதாயின் வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர தெரிவித்தார்.

இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனை தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன் என்றும் அவர் வலியுறுத்தி தொடர்ந்து தமிழிலேயே பேசினார்.

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக –வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்"  எனும் இவ்வருடம் சர்வதேச மகளிர் தின தொனிப் பொருளில் அமைந்த இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் இடம்பெற்றது.

சுமார் 250 பேருக்கு மேற்பட்ட பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொழில் முனைவோராக திகழும் 25 பெண்கள் ஆளுநர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி பாராட்டப்படுவார்கள்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர,தாயாக, சகோதரியாக, மனைவியாக என பல பாத்திரங்களில் இந்த உலகை உயிர்ப்பூட்டும் பெண்களை தினமும் கண்ணியப்படுத்துவது தான் சரியாக இருக்கும். பெண்களுக்கு உள்ள வளங்கள், அவர்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

பெண்களுக்கு உயர் கண்ணியத்தையும், மதிப்பும், மரியாதையும் வழங்க வேண்டும் என்றால் அதை நாங்கள் எமது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். பின்னர் அது வியாபித்து பாடசாலை, பணியிடம், பள்ளிவாசல்,  கோயில், விகாரை, தேவாலயம் என்று அவைகளும் பெண்களைக் கண்ணியப்படுத்தும் இடங்களாக மாற வேண்டும். இதனைத் காலம் தாழ்த்தாது அமுல் படுத்த வேண்டும்.

இன்று இலங்கையில் மட்டுமல்ல முழு உலகத்திலும் பெண்களின் கல்வித் தரம், அவர்களது நிபுணத்துவ மனித வளம் மேம்பட்டிருக்கிறது. இலங்கைப் பல்கலைக் கழகங்களில் சகல பாடங்களிலும் கற்கின்ற மாணவிகளின் எண்ணிக்கை மெச்சிப் பேசுமளவிற்கு அதிகரித்திருக்கிறது. நாட்டின் சனத்தொகையில் பெண்கள் 52 வீதம் உள்ளார்கள்.

முன்னர் நாங்கள் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித் தருவது தேயிலை, இறப்பர், கோப்பி என்றுதான் சொன்னோம். ஆனால் அந்த நிலை மாறி இப்பொழுது நாட்டிற்று டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது நம் நாட்டுப் பெண்களே என்றாகியிருக்கிறது. இவ்வாறு பெண்கள் எல்லா வகையிலும் தமது அர்ப்பணிப்பை செய்து வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு அவர்களே. எனவே அத்தகைய அர்ப்பணிப்பாளர்களை கௌரவிப்பதில் வருடத்தில் ஒரு நாள் போதாது” என்றார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி. எம். ஹேமந்த குமார, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் ஆகியோரும் பெண்களின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதேச செயலாளர்கள், திருகோணமலை பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவினர்,  திருகோணமலை மாவட்ட, பிரதேச செயலகங்களின் மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள், இன்னும் பல அரச, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் உட்பட இன்னும் பலர்  இந்நிகழ்வில்  பங்கு பற்றினர்.

ஹுசைன் அப்துல்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .