வழியேது..
எத்தனை சிகரம் ஏறியும்
மலைவாழ் பெண்களின் வாழ்க்கை
சிகரம் தொட
இன்னும் எத்தனை காலம்..?
மனதில் குடும்ப சுமைகள்
உடலில் வலிமையின்றி
வாட்டும் வெயிலில்
வாட்டத்துடன்
கொழுந்து பறிக்கும்
கொப்பளித்த கைகள்;
இன்னும் எத்தனை காலம்..?
பெண்களின் கால்களில்
மிஞ்சி போல உறவாடும்
நித்தம் இரத்தம் குடிக்கும்
அட்டைகள்
ஆசை மிஞ்சிக்கு
இன்னும் எத்தனை காலம்..?
கொப்பளித்த விரல்கள்
கொழுந்து பறித்து
மரத்துபோன கைகள்
மரக்கட்டை போல் எம் தாய்
மலை வாழ் தோட்டதில்
இன்னும் எத்தனை காலம்..?
தலையில் சுமையுடன்
மலை உச்சிவரை ஏறி இறங்கும்
கூடை நிறைய கொழுந்து
பறிச்சாத்தா
ஒரு நாள் பேருக்கு
இன்னும் எத்தனை காலம்...?
வஞ்சகமின்றி பாதி இரத்தம்
உறிஞ்சும் அட்டைகள்
மீதி இரதத்தை
உறிஞ்சும்
நவகாலனிய மயமாக்க
கம்பெனிகள்
இன்னும் எத்தனை காலம்...?
கடைசிவரை காலுக்கு
அட்டை தான் மிஞ்சியோ
சேர்த்து வைக்க ஓன்றுமில்லையோ
புதைத்தபடி இருக்குது
மனதில் பல ஆசைகள்
இன்னும் எத்தனை காலம்...?
செயல் இழக்கும் வரை
இயந்திரம் வேலை செய்வதுபோல்
உழைத்து உழைத்து
உடல் வலுவிழக்கும் வரை
மலையில் வேலை
இன்னும் எத்தனை காலம்...?
காலனியத்துவம் அன்றும்
நவகாலனித்துவம் இன்றும்
நித்தம் குடிக்கும்
உழைப்பினை
இன்னும் எத்தனை காலம்...?
சகாயராஜா புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.