Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலாநிதி சி.ஜெயசங்கர்
ஈழத்துச் சூழலில் நவீன ஓவியம் என்பது கடந்த காலத்துக்கு உரியதாயிற்று. சிறப்புத் தேர்ச்சியும் ஆற்றலும் கொண்ட கலைஞரென அழைக்கப்படும் ஒருவர் உருவாக்கிய படைப்புகளை, ஓவியக் கூடத்தில் பார்த்து இரசிப்பதுதான் தராதரமானதெனக் கொள்ளப்பட்ட காலம் ஒன்றிருந்தது.
ஈழத்து நவீன ஓவிய வளர்ச்சியின் போதாமைக்குக் காரணமாக ஓவியக் கூடங்களின் இன்மையும் கூறப்படுவது வழமை. இத்தகைய நிலமைகளைக் கடந்து ஓவிய வளர்ச்சி ஓவியக் கூடங்களுடன் அடையாளப்படுத்தப்படும் நவீன ஓவிய கால கட்டத்தைத் தாண்டி, புதிய பல பரிமாணங்களை ஈழத்து ஓவியப் போக்குகள் எடுத்திருக்கின்றன.
ஓவியக்கூடமோ, நவீன ஓவிய ஆக்கங்களுக்குத் தேவையான சாதனங்களோ அல்லது ஊடகங்களோ அற்றச் சூழ்நிலையிலும் அவை பற்றி அலட்டிக் கொள்ளாமல்; ஓவியச் செயற்பாட்டை முன்னெடுத்த ‘ஓவியர் மாற்கு’ இங்கு குறிப்பிடப்பட வேண்டியவர்.
ஓவியக் கலையின் சமகாலச் சமூகத் தேவையுணர்ந்து தனக்குச் சாத்தியமான ஊடகங்களிலும் சாத்தியமான இடங்களிலும் ஓவிய ஆக்கங்களையும்: காட்சிப்படுத்தல்களையும் மிகவும் இயல்பாக முன்னெடுத்தவராக ஓவியர் மாற்கு முன்னோட்டம் கொடுத்திருந்தார்.
‘காட்போட்’ மட்டைகளில் கரித்துண்டுகளால் படைப்பாக்கத்தை நிகழ்த்துவது வரை அவரதுச் செயற்பாடு சென்றிருந்தது.
தராதரமானதென அங்கிகரிக்கப்பட்ட அதிகாரம் கொண்ட ஓவியச் சூழல் பற்றிய அங்கலாய்ப்பற்றவராக ஓவியர் மாற்கு இயங்கினார். சமூகத்துக்குத் தேவையான ஓவியச் சூழலை உருவாக்கினார். நவீன ஓவியமென்பது வெகுசனத்துக்கு உரியதாக புதிய பரிமாணம் கொண்டது. போர்க் காலச் சூழலிலும் மாற்குவினதும், மாற்குவினது மாணவர்களதும் தொடர்ச்சியான இச்செயற்பாடு 1980களில் ஆரம்பமானது. அது இன்று வரை ஈழத்துக்கே உரிய போக்காக அமைகிறது. ஓவியக் கூடங்களுக்கு வெளியே வருவது, நிரந்தரத் தன்மையற்ற ஓவிய ஆக்கங்களை உருவாக்குவது என்ற புதிய எண்ணக்கருக்கள் இலங்கையின் அதிகார மையங்கொண்ட தராதரமானதெனக் கொள்ளப்படுகின்ற ஓவிய மய்யங்களின் புதிய கோலங்களாக தற்பொழுது மாற்றம் கண்டுள்ளன.
தராதரமானதென அதிகாரம் கொண்ட இலங்கையின் ஓவியக் கூட மய்ய ஓவியச் செயற்பாடுகள் சார்ந்து கவனத்திற் கொள்ளப்படாத மேற்படி ஓவியர் மாற்குவை முன்னோடியாகக் கொண்ட ஈழத்தின் தற்கால ஓவியச் செயற்பாடு என்றவொன்று இருந்ததாகவோ அல்லது நடந்ததாகவோ கவனத்திற் கொள்ளப்படாமல் கடந்து போவதைக் காண முடிகிறது. ஓவிய கூடங்களுக்கு வெளியே வருவது, நிரந்தரத் தன்மையற்ற படைப்பாக்கங்கள் என்ற புதிய எண்ணக்கருக்களை உள்வாங்கிய இலங்கையின் ஓவியச் செயற்பாட்டுப் பதிவுகளில் இதனைக் காணமுடிகிறது.
ஈழத்து நவீன ஓவியச் செயற்பாடுகளிலும் நாடக அரங்கச் செயற்பாடுகளிலும் புதிய வெளிகளுக்கு வருதல், புதிய வெளிப்பாடுகளைத் தருதல் புதுமை நாட்டத்தின் வெளிப்பாடுகளாய் அமைந்ததல்ல. அது காலத்தினதும் சமூகத்தினதும் தேவையாக கலைச் செயற்பாடுகளை ஆற்றுப்படுத்திச் சென்றது. அது பற்றிய தேடல் சமாந்தரமான எண்ணக்கருக்களையும் நடைமுறைகளையும் அறிய வைத்து வலுப்படுத்துவதாக இருந்தது.
இத்தகையதொரு பின்னணியில் தான் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் ஒகஸ்ட் 2019 தனியாள் யாழ் ஓவியக் காட்சிப்படுத்தலை அறிமுகம் செய்வது பொருத்தமானதாகிறது.
கருத்தியல் தெளிவும் படைப்பாற்றல் திறமும் கொண்ட மிகவும் தனித்துவமான படைப்பாளுமையாக இயங்கி வருபவர் சுசிமன் நிர்மலவாசன். ஓவியக்கலையின் சமூக மையத் தன்மையை ஆழமாக உணர்ந்திருக்கும் சுசிமன் நிர்மலவாசன் தனது படைப்புகளின் காட்சிப்படுத்தல்களுக்கு தேர்ந்தெடுக்கும் இடங்கள் பாடசலை மண்டபங்கள், ‘விறாந்தைகள்’ பொது இடங்கள், சமூக முக்கியத்துவம் கொண்டிருந்து பாழடைந்த இடங்கள், கிராமத்து வெளிகளென அவை விரியும்.
கவனத்திற் கொள்ளப்படாத அல்லது கவனத்துக்கு எடுக்கப்படாத, நிராகரிக்கப்பட்ட வெளிகளை நோக்கி ஓவியக் காட்சிப்படுத்தல்களை முன்னெடுத்துச் செல்லும் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’ எனும் செயல்வாதத்தில் முன்னின்று செயற்படுபவர்களில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிடத்தக்கவர்.
காட்சிப்படுத்தும் இடத்தின் தராதரத்தில் அதிகாரத்தில் தொங்கி நிற்காத சுசிமன் நிர்மலவாசன் அந்த இடங்களுக்கு அழைக்கப்பட்டு தனது படைப்புகளை காட்சிப்படுத்துவபராகவும் இருப்பது அவரது ஆளுமையின் புலப்பாடாகும்.
தராதரமானதென, அதிகாரமானதென மிகவும் பெருமை பாராட்டிக் கொள்ளப்படுகின்ற ஓவிய கூட மய்யங்களில் மயங்கிக் கிடக்காத சுசிமன் நிர்மலவாசனின் படைப்பாக்கம் என்பது, தனியாள் சிறப்புத் தேர்ச்சி என்ற கலைஞர் மைய ஆதிக்கத்தையும் கேள்விக்கி உட்படுத்துவதாக இயக்கம் கொள்கிறது.
அவரது படைப்புக்கள் பார்வையாளரை அழைத்து முழுமைப்படுத்திக் கொள்வதாகவோ, அல்லது வளர்ந்து செல்வதாகவோ இருப்பதுடன் பார்வையாளர் பங்குபற்றல் இல்லாமல் இயங்க முடியாதவையாகவும் ஆக்கப்பட்டிருப்பவை.
ஓவியக் காட்சிப்படுத்தல் என்பது, பூரணப்படுத்தப்பட்டவற்றைப் பார்த்து இரசித்துச் செல்லுதல் என்ற நவீன நிலைப்பாட்டைத் தாண்டி, பார்த்தும் பங்கு பற்றியும் செல்லும் திருவிழாவாக, சடங்காக பரிணமிக்கச் செய்திருப்பதில் சுசிமன் நிர்மலவாசனின் பயணம் கலையின் பன்மைப் பரிமாணங்களைத் துலங்கச் செய்வதாகக் காணப்படுவது யதார்த்தமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
19 minute ago
28 minute ago