2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சாதனை நாயகன் அனிஸ்டஸ் ஜெயராஜ்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


- க.ஆ.கோகிலவாணி


இதுவரை இலக்கியத்துறையில் நிகழ்த்தப்படாத சாதனையொன்று இலங்கையின் கிழக்கிலங்கையில் கடந்த சனிக்கிழமை(30) நிகழ்த்தப்பட்டது. தன்னை ஓர் எழுத்தாளன் என இந்த உலகமே அறிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடன் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சானையை நிலைநாட்டியுள்ளார் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ்.

வித்தியாசமான சிந்தனையோட்டம்கொண்ட இக் கலைஞன், “கரன்சி இல்லாத உலகம்“ என்ற தொடரினை எழுதி, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நிமிடத்துக்கு 10 சொற்கள், மணித்தியாலத்துக்கு 6 பக்கங்கள் என தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் இவர் எழுதியுள்ளார்.

மொத்தமாக 77 பக்கங்களையும் 7,582 சொற்களையும் கொண்ட இவரது 'கரன்சி இல்லாத உலகம்' தொடரானது இன்று இலக்கியத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த சனிக்கிழமை (30) காலை 8 மணிக்கு ஆரம்பமான இவரது சாதனை பயணம் மாலை 8 மணிக்கே நிறைவுபெற்றது.

சமூக நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தனிநபர் வரலாறு, இனங்களின் வரலாறு என எழுத்து துறையில் பல பரிமாணங்களில் எழுதி கொண்டிருக்கும் இவர் திருகோணமலை, பெரியக்கணையை பிறப்பிடமாக கொண்டவர்.

1978ஆம் ஆண்டு  சேகுவேரா என்ற நூலை வெளியிட்டதனூடாக இவர் எழுத்துலக்கு அறிமுகமானார். கடந்த 25 வருடங்களாக 1,000 இற்கும் மேற்பட்ட படைப்புகளை இவர் படைத்துள்ளார். ஆனாலும், 25 படைப்புகளையே இவரால் வெளிக்கொணர முடிந்தது. இவரது படைப்புகளின் அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள் என்ற புத்தகம், இலங்கை அரசியல் வரலாற்றின் பல உண்மைகளை உலகறியச்செய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 வருட எழுத்துலக வாழ்க்கையில் தனக்கு சரியான அங்கிகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்பது இவரது மன ஆதங்கம். இவரை தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்ட போது, அவர் பகிர்ந்துகொண்டவை.

கேள்வி: பல்வேறு துறைகளில் Œõதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளபோதிலும்  எழுத்துத்துறையில்  ஒரு சாதனை இதுவரை நிகழ்த்தப்படவில்லை. இன்று அதனை நீங்கள் செவ்வனே செய்து முடித்து, எழுத்துத் துறைக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளீர்கள். இந்த தருணத்தை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

பதில்:  இதனை ஒரு சாதனையாக நான் கருதவில்லை. ஏனெனில் 36 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை புரிவதே என்னுடைய இலக்கு.  அதனை நான் இன்னும் அடையவில்லை. 36 மணித்தியாலத்தில் அரைவாசியை இப்போது நிறைவு செய்துள்ளேன். 24 மணித்தியாலங்கள், அதன்பின்னர் 36 மணித்தியாலங்கள் என எனது பயணத்தை தொடரவுள்ளேன். 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதியதை நான் சாதனையாக கருதிவிட்டால் அது, எனது மிக நீண்ட இலக்கை அடைவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். எனவே இது சாதனையல்ல. சாதனைக்கான ஒரு முயற்சி.


கேள்வி: இவ்வாறான விசாரனையை நிகழ்த்தவேண்டும் என்ற உந்துதல் உங்களுக்குள் உருவாக காரணமாக அமைந்தது?


பதில்: நான் ஒரு தலைச்சிறந்த எழுத்தாளன் என்பதை இந்த உலகுக்கு எடுத்துரைப்பதற்காகவே இவ்வாறான சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 1974ஆம் ஆண்டு சேகுவேரா என்ற நூலை வெளியிட்டதனூடாக எழுத்துலகுக்கு அறிமுகமானேன். எனது எழுத்துப் பயணம் 25 வருடங்களை கடந்துவந்துவிட்டது. ஆனால், ஓர் எழுத்தாளனுக்கு கிடைக்கவேண்டிய சரியான அங்கிகாரம், ஓர் அடையாளம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்றே நான் உணர்கிறேன். எனவே, எனக்கான அடையாளத்தை பெறுவதே எனது இந்த  சாதனைகளின் நோக்கமாக உள்ளது.

கேள்வி: தலைச்சிறந்த எழுத்தாளன் என்ற அங்கிகாரம் அல்லது அடையாளப்படுத்தல் உங்களுக்கு கிடைக்காமல் போனமைக்கு காரணமாய் அமைந்தது எது?

பதில்: எழுத்தாளன் என்பவன் வியாபாரி அல்ல. அவன் பிரபஞ்சத்தின் பிரஜை, ஓர் எல்லைக்குட்பட்டவன் அல்ல. அவனுடைய சிந்தனையை தூக்கிக்கொண்டு அவனே போகமுடியாது. எழுதுகோளுக்கென ஒரு மதிப்புண்டு. எழுதுகோளை வைத்துகொண்டு நான் எழுத்தாளன், நான் எழுத்தாளன் என கூறிக்கொண்டிருக்க முடியாது. எழுத்தை தேடி வாசிப்பவனே சிறந்த வாசகன்.

கடந்த 25 வருட எழுத்துலக வாழ்க்கையில் 1,000 இற்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துவிட்டேன். அவற்றில் 25 படைப்புகளையே என்னால் வெளிக்கொணர முடிந்தது. மீதமானவற்றில் பலவற்றை கிழித்தெறிந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. இதற்கு இரண்டு காரணங்களையே என்னால் கூறமுடியும். ஒன்று படைப்புகளை எழுதி அதனை வெளிக்கொணர்வதற்குரிய நிதி என்னிடம் இருக்கவில்லை. இரண்டாவது வாழ்க்கைச் சூழல் இறுக்கமாகி போனது. எனது எழுத்துக்களுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காமல் போனமைக்கு பிற எழுத்தாளர்களையோ அல்லது ஊடகங்களையோ நான் குறைகூறவில்லை.

கேள்வி இன்று எழுத்தாளர்களுக்கு களம் கொடுப்பதற்கென பலர், சமூக ஊடகங்கள் (வலைத்தளம், முகத்தளம்) பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் எவ்வாறு?

பதில்: பெரியளவில் இவற்றை பயன்படுத்தவில்லை. ஆனாலும் இத்தகைய ஊடகங்களிலும் எனது படைப்புகளை பதிவேற்றம் செய்துள்ளேன்.

கேள்வி: இன்றைய சமூகம் நூல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிடவும் இவ்வாறான சமூக ஊடகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகரித்துவிட்டதாக பொதுவான கருத்து உள்ளது. இத்தகையதொரு சூழலில், படைப்பாளிகளின் படைப்புகள் சரியாக வாசகனை  சென்றடையுமா?

பதில்: ஐரோப்பியா, மேற்கத்தேய நாடுகளில் என்னதான் சமூக ஊடகங்கள் புதிது புதிதாக தோன்றினாலும் அவர்கள் வாசிப்புக்கும் வாசிக்கும் நூல்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகமானது. அதனால்தான் அவர்கள் உலக நாடுகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்கின்றார்கள். அவர்கள் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். ஆனால், நாம் இங்கு என்ன செய்கின்றோம்? மேலைத்தேய மோகத்தில் திகழ்ந்துகொண்டிருக்கின்றோம். வாசிப்பு, சிந்தனை என்பது அருகி போய்விட்டது.

நாமும் எமது எழுத்துப்பாணியை மாற்றாமல் பிழை செய்துவிட்டோம். பக்கம்பக்கமாக எழுதுவதில் முனைப்புடன் இருக்கின்றோம். மக்களது விடயங்களை அரை மணித்தியாலயத்தில் கூறிமுடிக்கும் வகையிலான எழுத்தோட்டம் எம்மிடம் கிடையாது. இது எமது எழுத்தை ஆரோக்கியமற்ற சூழலுக்கு அழைத்து சென்று விட்டது.

அதேபோல், நாங்கள் எழுதும் எழுத்துக்கள், பெரியளவிலான வாசகர்களை சென்றடைய வேண்டும் என்று நினைக்கின்றதே தவிர பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைப்பதில்லை. இன்று எமது மக்களுக்கு நிதி என்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த உலகமே நிதிக்குள் அடங்கிவிட்டது.  இந்நிலையில் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் வாழும் ஒரு வாசகன் 1,000 ரூபாயை செலுத்தி நூலை வாங்கி வாசிப்பானா? என்பது கேள்வி குறிதான். இவ்வாறான குறைபாடுகளே எழுத்துக்கு என்று இருந்த தனித்துவத்தை குறைத்துள்ளது.

இதனால், ஓர் எழுத்தாளனால்  வெளியிடும் படைப்பானது விலையிலும் சரி எழுத்தோட்டத்திலும் சரி வாசிப்பை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். பாமர மக்களையும் ஒரு படைப்பு நெருங்க வேண்டும்.


கேள்வி: உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த விமர்சனங்களினூடாக நீங்கள் மனம் வருந்திய சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா?


பதில்: நிச்சயமாக உண்டு. மறைந்த மாபெரும் தலைவன் அஷ்ரப்பின் நினைவாக 'அஷ்ரபின் வரலாறு' என்ற நூலை வெளியிட்டேன். இந்நூல் அஷ்ரப்பின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் அமைந்திருந்தது. அந்நூலை வாசித்த இரு சமூகத்திலும் (தமிழ், முஸ்லிம்) இருந்து நான் பல திட்டுக்களை வாங்கினேன். இவன் பைத்தியக்காரன் என்று கூறிய வாசகர்களும் இருக்கத்தான்  செய்கின்றனர்.  காலம் கடந்து வாழ்பவனே எழுத்தாளன். எனது அந்த வரலாற்று நூல் காலம் கடந்து பேசப்படும்.

நான் ஏற்கெனவே கூறியதுபோல ஓர் எழுத்தாளன் என்பவன் பிரபஞ்சத்தின் பிரஜை. அவன் பிரபஞ்சத்துக்கு மட்டுமே உரியவன். அவனுடைய சமூகத்துக்கோ அல்லது அவனுக்கு எதிரான சமூகத்துக்கோ எழுதுபவன் எழுத்தாளனாக இருக்க முடியாது. எழுத்தாளனை விலை கொடுத்து வாங்க முடியாது. விலைகொடுத்து வாங்கக்கூடிய ஒருவன் எழுத்தாளனாக முடியாது.


கேள்வி: உங்களை எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் குறித்து கூறுங்கள்


பதில்: நான் எழுத்தாளனாக வேண்டும் என நினைத்து இந்த எழுத்துலகில் நுழையவில்லை. எனக்கு ஐந்து உடன்பிறப்புகள் உள்ளனர். அவர்களில் இருவர் இரட்டை பிள்ளைகள். இரட்டை பிள்ளைகளை பராமரிக்க எனது தாய் மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில் அவர்களை தூங்க வைப்பது போன்ற சிறுசிறு உதவிகளை தாசூக்கு செய்துகொடுப்பேன். இரட்டையர்களை தூங்க வைக்கும்போது ஓர் இடத்தில் இருந்து, சாய்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் நீட்டி அவர்களை காலில் வைத்து தூங்க வைப்பேன். இதன்போது எனது தந்தையின் நூல்களை வாசிப்பேன். எனது பெறறோர் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். அதனால், அவர்களது நூல்களை எடுத்து வாசித்துவிடுவேன். இதுவே என்னை நாளடைவில் எழுதுவதற்கு தூண்டியிருக்கலாமென நினைக்கிறேன்.

நான் ஓர் எழுத்தாளன் என என்னை நம்ப வைத்தவர் வா.அ.இராசரத்தினம் தான். அதன்பின்புதான் நான் பரவலாக எழுத தொடங்கினேன். எனது எழுத்துக்களை ஊடகங்களுக்கு பிரசுரிக்க அனுப்பினாலும் அவை பெரும்பாலும் பிரசுரமாகாது. பின்னர் எனது படைப்புகளை வாங்கி வா.அ.இராசரத்தினம் அவருக்கு தெரிந்த சஞ்சிகைகளுக்கு அனுப்பிவைப்பார். அப்போதும் அந்த எழுத்துக்கள் பிரசுரமாகாது. அதன்போது அவர் என்னை தட்டிக்கொடுத்து நீ நல்ல எழுத்தாளனாக வளருவாய் என ஊக்கப்படுத்துவார். அவர் கொடுத்த தட்டிக்கொடுப்புகளே என்னை இன்று உலகத்தையே திரும்பி பார்க்கச் செய்துள்ளது.

அதேபோல், நான் சாதனை நிகழ்த்துவதற்கு பலர் எனக்கு உதவிகளை செய்துள்ளனர்.

அவர்களில், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் தலைவர் திருமலை நவம் மற்றும் திருகோணமலை, புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தில் செயலாளர் வணக்கத்துக்குரிய தந்தை நோயல் இமானுவேல் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் நான் சாதனை நிகழ்த்தி முடிக்கும்வரை எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள்.

இவர்களை தவிர சாதனை நிகழ்த்தும் நாளன்று என்னை உற்சாகப்படுத்திய மட்டு. ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை, கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தண்டாயுதபாணி, திருகோணமலை நகரபிதா உட்பட பலர் நினைவுக்கூர வேண்டியவர்கள்.

(படங்கள்: சசிக்குமார்)

You May Also Like

  Comments - 0

  • Naushad Aboobucker Wednesday, 24 December 2014 06:49 PM

    Go Go Allah will help your ambition , I wish you sir

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .