2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் எத்தனை நாட்டிய சபாக்கள் உள்ளன? : மோகனப்பிரியன்

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மேலைத்தேய கலையை விரும்புகின்றார்கள் என்றால் காலம் போகும் போக்கு அப்படி என்று கூறலாம். இலங்கையில் நாட்டியக் கச்சேரிகள் நடப்பது மிகவும் குறைவு. இந்தியா போன்ற ஏனைய நாடுகளை  எடுத்துகொண்டால் மார்கழி மாத காலத்தில் இசை நடன கச்சேரிகள் அதிகமாக நடக்கும்.

ஆனால், இலங்கையில் ஏன் அவ்வாறான நாட்டிய கச்சேரிகள் நடப்பதில்லை. இலங்கையில் எத்தனை நாட்டிய சபாக்கள்; உள்ளன என்பதே எனது
கேள்வி?' என்கிறார் வளர்ந்து வரும் பரதக்கலைஞர் தவராஜா மோகனப்பிரியன்.

மட்டக்களப்பை பிறப்பிடமாக்கொண்ட இவர், நடனத்துறையின் மீது கொண்ட அதீத ஆர்வம், ஈடுபாடு காரணமாக நடனத்துறையை தமது ஆற்றுகை வெளிப்பாட்டுக்கலையாக தேர்ந்தெடுத்து அதுசார்ந்த பட்டப்படிப்புகளையும் கற்றுமுடித்துள்ளார்.

இந்தியாவின் பாரதிதாஸன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் தமது நடனம் சார்ந்த பட்டப்படிப்புகளை தொடர்ந்த இவர், நடனத்துறையில் முதுகலைமாணி பட்டத்திற்கான  தங்க பத்தக்கம் வென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

சுவாமி விவேகானந்தர் விருது,  நாட்டிய கலை அரசன் விருது,  நடன கலை அரசன் விருது, வளரும் சாதனையாளர் விருது,  சுவாமி விவேகானந்தர் விருது என தமது நடனத்திறமைக்காக பல விருதுகளை பெற்றுகொண்டுள்ள இவர் குச்சுப்பிடி, மோகினி ஆட்டங்களையும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரை தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை....


கேள்வி:- பரதத்தில் உங்களது உள்வரவு குறித்து கூறுங்கள்?


பதில்:- நடனத்தில் சிறு வயது முதலே அதிக ஆர்வம் காணப்பட்டது. க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் பயின்றதால் அதில் நடனமும் ஒரு பாடகமாக தேர்ந்தெடுத்தேன். நான் தேர்ந்தெடுத்திருப்பது நடனத்துறை என்பதால் அதை இந்தியாவில் சென்று கற்றால் சிறப்பாக அமையும் என எனது ஆரம்பகால ஆசிரியர்கள் கூறினர்.

எந்த கலை எங்கு பிறந்ததோ அந்த இடத்தில் சென்று பயின்றால் அந்தக்கலையின் சுயத்தன்மை கிடைக்குமென்பது அவர்களின் ஆலோணையாக அமைந்தது. அவர்களின் ஆலோசணைக்கமைவாக நான் இந்தியாவில் சென்று நடனத்துறைசார்ந்த மேற்படிப்பை தொடர்ந்தேன்.
12 வயதிலிருந்தே நான் நடனத்தை கற்றுவருகின்றேன். ஆனால், இதனையே வாழ்க்கைகான தொழிலாக மாற்றிகொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி:- இத்துறையில் மேற்படிப்பை தொடர்வதற்காக நீங்கள் இந்தியா சென்றபோது அங்கு நீங்கள் பெற்றுகொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

பதில்:- கற்கும்போது அதிகமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இந்தியாவில் கலை துறை மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் இந்திய மாணவர்கள் போட்டி மனப்பாங்குடனேயே இருப்பார்கள். நாங்கள் எவ்வளவு தூரம் கடினமாக உழைக்கின்றோமோ, புதிய புதிய விடயங்களை வெளிப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு எமக்கு முன்னுரிமை கிடைக்கும். இந்தியாவில் விரல்விட்டு எண்ணமுடியாத அளவிற்கு கலைஞர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில் கற்கைநெறியை தொடர வேண்டும் எனும்போது அது மிகவும் கடினமானது. ஆரம்பத்தில் நான் மிகவும் சிரமப்பட்டேன். இந்தியாவில்  சென்று கற்கை நெறியை தொடரபோகின்றோம். 5 வருடங்கள்தான் அந்த நாட்டில் இருக்கபோகிறோம். அதற்குள் எவற்றையெல்லாம் கற்றுகொள்ள முடியுமோ, புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் அதிகமாகவே இருந்தது. இதனால், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றவற்றையும் கற்றேன்.

நாங்கள் எந்த துறையை தெரிவு செய்கிறோமோ அந்த துறையை விரும்பி தெரிவு செய்தால் எங்களுடைய ஆய்வும் அதில் அதிகமாக இருக்கும். ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாகவே இருக்கும்.


கேள்வி:- பரதம் என்று வரும்போது ஆண்களைவிட பெண்களே அதிகமான பங்களிப்பு செய்பவர்களாக காணப்படுகின்றனர். பெண்களுக்கு மத்தியிலே ஒரு போட்டியான சூழல் நிலவும் நிலையில் நீங்கள் தேர்ந்தெடுத்த இந்தத் துறையில் உங்களது பெயரை எவ்வாறு தக்கவைத்துகொள்ள போகின்றீர்கள்?


பதில்:-  நடனத்துக்குரிய மூலக்கடவுளே நடராஜர்தான். அவரும் ஓர் ஆண்தான். பரதநாட்டிய சாரங்களை தொகுத்து  நாட்டிய சாஸ்த்திரத்தை வழங்கிய பரத முனியும் ஒரு ஆண்தான். இந்த கலையை வளர்ப்பதற்காக எத்தனையோ ஆண் நடனக்கலைஞர்கள் எம்முன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

நாட்டியத்துறை என்று வரும்போது நாங்கள் என்ன செய்யபோகிறோம், என்ன கற்றுகொண்டுள்ளோம், கற்றுகொண்ட விடயங்களை எவ்வாறு வெளிபடுத்தபோகிறோம், நாட்டியத்துறையில் எத்தனை மாணவர்களை உருவாக்கபோகிறோம், நாங்கள் கற்றுகொண்டதை வைத்து நடனத்தில் மேற்கொள்ளவுள்ள புதிய முயற்சிகள், ஒரு நடன விழாவில் சிறப்புமிக்க நடன ஆற்றுகையை எவ்வாறு வழங்கபோகிறோம் என்பதிலே எமது பெயர் நிலைக்க போகின்றது.

வெறுமனே கற்றுகொண்ட கலையை மாணவர்களுக்கு அப்படியே கற்றுகொடுக்காமல் சமூக விழிப்புணர்வு சார்;ந்த விடயங்களை நடனத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கி அதனை சமூகத்துக்கும் வழங்கவேண்டும்.

சமூக விழிப்புணர்வு சார்ந்த நடன ஆற்றுகையை பார்க்கும் மக்கள் வெறுமனே தமது பிள்ளைகளும் நடனத்தை பயில வேண்டும் என்று நினைக்காமல் நடனத்திலும் சமூக விழிப்புணர்வுகளை கூறமுடியும் என்ற எண்ணவோட்டத்தில் நடனத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல கலைக்கான வெற்றியாக அமையும்.

உதாரணத்திற்கு இங்கு ஒன்றை கூறவிளைகிறேன்.

நாட்டிய நிகழ்வொன்றிற்காக நடனம் பயில்பவர்களுக்கு நற்சிந்தனையுடைய பாடல்களை தெரிவு செய்து நாட்டியத்தை கற்றுகொடுக்கலாம். இதற்கூடாக நடனத்தை பயில்பவர்களுக்கும் நற்சிந்தனை பரவும். அந்த நடனத்தை பயின்று பார்வையாளர்களுக்கு வழங்கும்போது பார்வையாளர்களுக்கும் நற்சிந்தனை பரவும். எனவே நடனத்தின் சாஸ்திரியத்தை மாற்றாமல் அதனை அப்படியே வைத்துகொண்டு நடனத்துக்கூடாக வழங்க கூடிய விழிப்புணர்வுகளை வழங்கவேண்டும். இது எம்மை இயல்பாகவே மக்கள் மத்தியில் நிலைநாட்டும்.


கேள்வி:- நீங்கள் பயின்ற மோகினி ஆட்டம் குச்சிப்புடி போன்ற நடன வகைகளை இலங்கையில் எவ்வாறு வளர்க்கப்போகின்றீர்கள்?


பதில்:- இவ் ஆட்ட வடிவங்களை இலங்கையிலும் பரப்பலாம். ஒரு நிலையான கல்விக்கூடத்தில் ஒரு கல்விக்கூடத்தை ஆரம்பித்து இவ்
ஆட்டவடிவங்களை பயில விரும்பும் ஆர்வலர்களுக்கு கற்றுகொடுக்கலாம். திடீரென்று இவற்றினை செய்துமுடித்துவிட முடியாது. இதற்கென நீண்டதொரு காலக்கட்டம் தேவைப்படுகின்றது. குச்சிப்புடி ஆட்டத்தை  பயில்வதற்காக இந்தியாவில்  எனக்கு 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் கூட 5 மாணவர்கள் மோகினி ஆட்டத்தில் அரங்கேற்றம் செய்து முடித்தனர்.

இலங்கையில் இவ்வாறான மாணவர்களை உருவாக்க வேண்டுமென்றால் எனக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.
மாணவர்களை திரட்டி, அவர்களை பயிற்றுவித்து ஒரு சூழலுக்கேற்ற நடன நிகழ்வை வழங்குவதென்பது நீண்டகால செயற்பாடு.

கேள்வி: மேலைத்தேய கலாசார வடிவங்கள் பரதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்:- இல்லை. மேலைத்தேய நடனத்தை விரும்புபவர்களும் உள்ளனர். பரதத்தை விரும்புபவர்களும்  உள்ளனர். பொதுவாக பரதத்தை கற்றவர்களிடம் இது குறித்து கேட்டால் அவர்கள் இதனை ஏற்றுகொள்ள மாட்டார்கள். அதேபோல் மேலைத்தேய நடனத்தை பயின்றவர்களிடம் இது குறித்து கேட்டால் அவர்களும் இதனை ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஏனெனில் இரண்டுதுறைக்குமான அணுகுமறை வித்தியாசம். பரதத்தில் அணியும் ஆடை முதல் ஆட்டவகைககைள் வரை அனைத்தும் மனிதர்களின் ஆத்மாவுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றன. பரதத்தை எந்த கலையுடனும் ஒப்பிட முடியாது.

ஆனால், மேலைத்தேய கலையை விரும்புகின்றார்கள் என்றால் காலம் போகும் போக்கு அப்படி என்று கூறலாம். இலங்கையில் நாட்டியக் கச்சேரிகள் நடப்பது மிகவும் குறைவு. இந்தியா போன்ற ஏனைய நாடுகளை  எடுத்துகொண்டால் மார்கழி மாத காலத்தில் இசை நடன கச்சேரிகள் அதிகமாக நடக்கும்.  ஆனால், இலங்கையில் ஏன் அவ்வாறான நாட்டிய கச்சேரிகள் நடப்பதில்லை. இலங்கையில் எத்தனை நாட்டியசபாக்கள் உள்ளன என்பதே எனது கேள்வி?

இலங்கையை பொறுத்தவரை எத்தனையோ பரதக்கலைஞர்கள் உள்ளனர். ஒரு நாட்டிய கச்சேரியை ஏற்படுத்தி தொடர்ந்து 10 நாட்கள் நடத்தி இவ்வாறன பரதகலைஞர்களுக்கு வாயப்புகளை வழங்கலாம்தானே? இதனை அரசாங்கம் செய்ய வேண்டுமா? அல்லது பரதகலைஞர்கள் செய்ய வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. இந்திய கலைஞர்களை போல இலங்கைக் கலைஞர்களும் எந்தவித்ததிலும் சளைத்தவர்கள் இல்லை.
இலங்கையில் இருக்கும் கணக்கற்ற நாட்டியமணிகளுக்கு என்று ஏன் ஒரு சங்கம் இல்லை. சிங்கப்பூரை எடுத்துகொண்டால் 'தேசிய கலை பேரவை' என ஓர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது கலைசார் விடயங்களுக்கு மிகவும் உதவும் அமைப்பாக காணப்படுகின்றது.


கேள்வி:- இவ்வாறான அமைப்புகள் இல்லாமைக்கு காரணம் என்ன?


பதில்:- இலங்கை சாஸ்திரிய நடனம் 'கண்டிய நடனம்' என்றாலும் நடனக்கலையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கருதுகிறேன். அதற்கான வழிகளாக நாட்டிய சபைகளை உருவாக்க வேண்டும். நாட்டிய நிகழ்வுகளை நடத்த வேண்டும். பொதுவாகவே எல்லா கலைஞர்களுக்கும் வாய்ப்புக்கிடைப்பதில்லை. வெளிநாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி அனைத்து கலைஞர்களுக்கும் எல்லா மேடைகளும் வாய்த்துவிடுவதில்லை. எனவே இவ்வாறான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு பல மேடைகள் உருவாக்கப்படவேண்டும்.

கேள்வி:- அப்படியே அரசாங்கத்தால் ஒரு சபை உருவாக்கப்பட்டு கொடுத்தாலும் அந்த சபை ஒற்றுமையுடன் வழிநடத்திச்செல்லப்படுமா? சிங்கள கலைஞர்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை என்பது தமிழ் கலைஞர்களிடம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதைபற்றி கூறமுடியுமா?

பதில்:- இலங்கையிலிருந்து அதிகமான கலைஞர்கள் இந்தியாவிற்கு சென்று நடனத்தை கற்றுகொண்டு வருகின்றனர். இந்தியாவின் கலாஷேஷ்த்திராவில் படித்த அதிகமானோர் இலங்கையில் இருக்கின்றனர். இவ்வாறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நடனத்துறை சார்ந்த பட்டப்படிப்புகளை மேற்கொண்டுவரும் பல கலைஞர்களை அருஸ்ரீ கலையகம் உள்வாங்கிக்கொண்டு சிறப்பான கலையாற்றுகைகளை அரங்கேற்றி வருகின்றது.

அருஸ்ரீ கலையகத்தை இயக்கிவரும் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் என்ற தனி ஒரு பெண்மணியால் இவ்வாறான கலைக்கூடத்தில் பல திறமைமிக்க கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்க முடியுமென்றால் ஏன் அரசாங்கத்தால் இவ்வாறான சந்தர்ப்பங்களை தமிழ்கலைஞர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியாது.

இதற்கு ஒற்றுமை என்பதைவிட நமது நாட்டு கலைஞர்களுக்கு நம் நாட்டு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
ஒரு கலைஞனை உருவாக்க வேண்டும் என்ற குறிகோள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். இந்தியாவில் ரமாவைத்தியநாதன், ஷோபனா என பலரின் பெயரை உதாரணத்திற்கு கூறுகிறோம். ஆனால், இலங்கையில் ஏன் இன்னும் யாரும் யாரையும் பற்றியும் பேசுவதில்லை.  


கேள்வி:-  இந்தியாவில் சென்று கற்ற சந்தர்ப்பத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்ததா?

பதில்:- மலையாள திரைப்படமொன்றில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால், அதற்கு நான் விரும்பவில்லை. சினிமா என்றால் அதிகமான முதலீடு செய்யவேண்டும். நான் சாதிக்க வேண்டும் என்று நினைத்தது நடனத்துறையில்.

கேள்வி:- பரதத்தில் இன்னும் சாதிக்க நினைத்திருக்கும் விடயங்கள் குறித்து கூறுங்கள்?

பதில்:- நடனத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள வேண்டும். நான் வைத்தியராக வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு. அது நிறைவேறவில்லை. ஆனால், பரதத்தில் டாக்டர் பட்டம்பெற்று எனது தந்தையின் கனவை நிறைவேற்ற உள்ளேன்.

நான் கற்றுள்ள நடனக்கலையை வைத்துகொண்டு அதிகமான நடன நிகழ்வுகளை இலங்கையில் மேற்கொள்வது எனது திட்டமாகும். நடனத்துறையில் அதிகமான மாணவர்களை உருவாக்க வேண்டும். வெறுமனே அவர்களுக்கு நடனமாக அதனை வழங்காமல் அதனை ஒரு வாழ்க்கையாகவே அவர்களுக்கு கற்றுகொடுக்க விரும்புகிறேன். 

நடனம் என்பது ஒரு ஆத்மாவை இன்னொரு ஆத்மாவிற்கு கொடுப்பது போன்றது. இந்த கலையினூடாக வாழ வேண்டும். வாழவேண்டும் என்பது கற்றுகொடுத்து காசை பெறுவதாக அர்த்தப்படாது. இந்த கலையை ஒரு வியாபாரமாக பார்க்காமல் ஒருவர் வழங்கும் சன்மானத்திற்கு இரண்டு மடங்கு உழைக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

கேள்வி:- இந்த கலையை தேர்ந்தெடுத்தபோது நீங்கள் பெற்றுகொண்ட கசப்பான அனுபவங்களை கூறமுடியுமா?

பதில்:- ஆரம்பகாலத்தில் இதனை பயிலும்போது அதிகமான எதிர்ப்புகள் காணப்பட்டன. ' என்ன உங்கள் மூத்த பையன் நடனத்தை பயில்கிறான்' என எனது தாய் தந்தையிடம் பலர் வினவியுள்ளனர். இதனால் எனது தாய், தந்தை தலைகுனிந்த சந்தப்பங்களை நான் அருகில் இருந்து அவதானித்துள்ளேன்.

'அவர்கள் என்னிடம் வந்து கட்டாயம் இதனை பயின்றுதான் ஆகவேண்டுமா?' என்றும் கேட்டுள்ளனர்;. ஆனால், இந்தியாவிற்கு சென்று அங்கு பல பட்டங்களை பெற்று எனது பெயர் ஊடகங்களில் வந்த பிறகு அநேகமானோர் என்னை தேடி வந்து வாழ்;த்துக்களை தெரிவித்தனர்.

ஒரு வெற்றி கண்டு வியக்கின்ற சமுதாயம் ஏன் ஒரு மனிதனை ஊக்குவிக்ககூடாது? என்பதே எனது கேள்வி.  ஒருவனுக்கு கலை சார்ந்து உள்ள திறமையை ஊக்குவித்து அதனூடாக வெற்றிகண்டால் அதனையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம்.

ஆனால், இதனை ஊக்குவிக்காமல் அவர்கள் வளர்ச்சியடைந்து வெற்றிகண்டவுடன் வந்து வாழ்த்து தெரிவிப்பது சமுதாயத்தின் இயல்பு. நல்ல திறமையுள்ள கலைஞனை சமுதாயம் ஊக்குவிக்க வேண்டும்.


கேள்வி: உங்களை போன்று எதிர்காலத்தில் உருவாக நினைத்துள்ள இளம் கலைஞர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?


பதில்:- இதற்கு ஒரு உதாரணத்தை கூறவேண்டும். பரத்ததில்  வர்ணம் என்ற ஒரு பகுதி காணப்படுகின்றது. அதனை குறைந்தது 30 நிமிடத்தில் ஆடி முடிக்க வேண்டும். பாரதாஸன் பல்கலைக்கழமானது தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடத்திய பரதம் சார் போட்டி ஒன்றில் இதனை 10 நிமிடங்கள் ஆடவேண்டும் என போட்டி விதி ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.

இதனை  10 நிமிடத்தில் ஆடி முடிப்பதென்றால் ஒரு சிறிய இடைவெளியேனும் இருக்காது. அந்த 10 நிமிட நடனத்தை எனது குரு எனக்கு கற்றுகொடுத்தார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நடனக்கல்லூரிகளும் பங்குபெறும்.

கடுமையான போட்டிகள் நிலவும். இந்த போட்டியில் எமது கல்லூரியில் இருந்து பங்குபெற்றுபவர்கள் முதலிடத்தை பெறவேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்வர்.

அதனால், இந்த போட்டியில் நானும் பங்குபெற்று வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டேன். எனது ஆசிரியர்களும் எனது பயிற்சியை பார்த்து கட்டாயம் நான் வெற்றிபெருவேன் என கூறினர்.

அதேபோல் எனக்கு அந்த போட்டியில் முதலிடம் கிடைத்தது. நான் முதலிடத்தை பெற்ற அந்த வருடத்தில் 'தனி நடன விருது' என்ற ஒரு விருதை வழங்குவதற்கு ஆரம்பித்தனர். எதிர்காலத்தில் இப்போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெறவுள்ள மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்போது எனது பெயரின் பின்னாலேயே வழங்கப்படும். 

நான் இந்த போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றது என்பது ஒருவகை மகிழ்ச்சிதான். ஆனால், எதிர்பாராத விதமாக   இனிவரும் காலங்களில் எனது பெயரின் பின்னால் அந்த விருது வழங்கப்படும் என்பது  எனது திறமைக்கு கிடைத்த ஒரு வெகுமதி. இதை தவிற ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வெகுமதி கிடைக்க வேண்டும்.

இதனூடாக நான் கூறவருது, நாம் ஒருவிடயத்திற்காக அரப்பணிப்புடன் நூறுவீதம் உழைத்தால் அதற்கான வெகுமதி 500 வீதமாக கிடைக்கும். ஆரம்பத்தில் வரும் தடைகளை மனதில் கொண்டு சோர்ந்துவிட்டால் அதற்கு பின் எம்மால் எழுந்துவிடவே முடியாது. எந்த விடயத்தை நாம் தெரிவு செய்தாலும் அதற்கு தடைகள் என்பது அலைபோல வந்துகொண்டுதான் இருக்கும். அதை தாண்டி பயணித்து கரை சேர வேண்டும். அப்போதுதான் வாழ்வின் எல்லையை அடையமுடியும்.

என்னிடம் ஒரு மாணவன் வந்து இந்ததுறை குறித்து கேட்டால், ' நீ தேர்ந்தெடுத்திருக்கும் இந்த துறையானது சவால்மிக்கது. கடுமையாக உழைத்தால் சவால்களை தகர்த்தெறிந்து தடம்பதிக்க முடியும்' என்று கூறுவேன். இதுவே, என்னிடமிருந்து அந்த மாணவன் பெற்றுகொள்ளும் பதிலாக இருக்கும்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:- சமந்தபெரேரா


You May Also Like

  Comments - 0

  • Markandu Devarajah Saturday, 02 March 2013 08:03 PM

    இலங்கையில் அரசியல் நாட்டியசபாவே உள்ளது. நீங்கள் தாளத்திற்கு ஆடுவீர்கள், அரசியல் நாட்டியத்தில் திருகு தாளத்திற்கும் ஆடலாம்.இது தெரியாமலா இருக்குறீர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X