2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'தமிழர்களின் அழிவுகளுக்கும் வெற்றிக்கும் புலம்பெயர்ந்தோரே காரணம்'

Kogilavani   / 2013 ஜனவரி 02 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன்.

இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது  'இனி அவன்'.

கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அவ்வப்போது எமது இருப்பை வெளிபடுத்த ஒரு சில தமிழ் திரைப்படங்கள் வெளிவரத்தான் செய்தன. ஆனாலும் பெயர்சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை பெரிதாக பேசப்படவில்லை.


செத்துபோன எமது இலங்கை தமிழ் திரைத்துறைக்கு 'இனி அவன்' உயிரோட்டத்தை கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
புனர்வாழ்வு பெற்ற போராளி ஒருவன் - சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை இனி அவனில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் அசோக ஹந்தகம.
ஜெகதா வெலவற்ற மற்றும் அனுரா பெர்னாண்டோவால் தயாரிக்கப்பட்ட 'இனி அவன்' திரைப்படத்திற்கான இசையை கபிலா பூகோலராச்சி வழங்கியுள்ளார்.

அசோக ஹண்டகமவின் இயக்கத்திலும் வதீஸ் வருணனின் உதவி இயக்கத்திலும் இன்று உலக அரங்கில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக தர்சன் தர்மராஜ், கதாநாயகிகளாக சுபாசினி பாலசுப்பிரமணியம், நிறஞ்சனி சண்முகராஜா மற்றும் ராஜா கணேசன், கிங் ரட்ணம், மல்கம் மக்கடோ, திரு, திருமதி தைரியநாதன், ஜி.பி.பெர்மினஸ், மகேஸ்வரி ரட்ணம் ஆகியோர் கதாபாத்திரங்களாக பங்கேற்றுள்ளனர்.

இதன் ஒளிப்பதிவு இயக்குநராக சன்ன தேசப்பிரிய மற்றும் கலை இயக்குநராக சுனில் விஜேரட்ண ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.
டுபாய், டொரன்டோ, எடின்பெறோ போன்ற இடங்களில் இடம்பெற்ற மூன்று அனைத்துலக திரைப்பட விழாவில் வரவேற்பையும் விருதையும் இத்திரைப்படம் பெற்றுக் கொண்டது.

இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் டொரன்டோ மற்றும் டுபாய் போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் வதீஸ் வருணன் மற்றும் கதாநாயகனான தர்சன் தர்மராஜ், உதவி வில்லன் பாத்திரத்தில் நடித்த கிங் தேவசாந்தன் ஆகியோரை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்டவை... 

கேள்வி:- இந்த திரைப்படத்தில் பணியாற்றியபோது நீங்கள் பெற்றுகொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: வதீஸ்:- அமல் அல்விஸ் என்பவரே என்னை அசோக ஹந்தகமவிடம் அறிமுகம் செய்துவைத்தார். ஹந்தகம – 'இனி அவன்' இத்திரைப்படம் குறித்து என்னுடன் உரையாடினார். காட்சியமைப்புகள் குறித்து கூறினார். இதன்போது எனக்கு இத்திரைப்படம் மிகவும் பிடித்துபோனது. செத்துபோயுள்ள இலங்கை தமிழ் சினிமாவுக்கு விதையொன்று போடப்பட்டுள்ளது. அவ்வாறான முதல் திரைப்படத்தில் எனக்கு பணியாற்ற கிடைத்தது நல்லதொரு அனுபவமாகவே கருதுகிறேன்.

நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவன். இதில் பணியாற்றிய கலைஞர்கள் இலங்கையின் பலபாகங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களை யாழிற்கு அழைத்துச் சென்று அந்த சூழலை காண்பித்து அதற்கேற்றால்போல் மாற்ற வேண்டிய தேவை இருந்தது. அதேபோல் எல்லோருக்கும் விளங்கக்கூடிய தமிழை கொண்டுவரவேண்டும். தனி யாழ்ப்பாண தமிழை கொண்டு வரமுடியாது. அவ்வாறு கொண்டு வந்தால் குறிப்பிட்ட குழுவினரே அதனை பார்ப்பார்கள். அதனால், இவ்வாறான விடயங்களை கவனத்தில் எடுத்துச்செய்வது ஒரு சவலாகவே இருந்தது.

அதனால், நாங்கள் முதலில் இந்த விடயங்களை எழுத்துருவில் கொண்டு வந்தோம். எழுத்துரு எழுதப்படுவதற்கு முன்பாக நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று அந்த சூழலை உள்வாங்கிகொண்டோம். பின்பு இயக்குநர் எழுத்துருவை எழுதினார். சகோதர மொழியில் எழுதப்பட்ட எழுத்துருவை நாங்கள் தமிழ்மொழிக்கு மொழிமாற்றம் செய்தோம். அந்த மொழிமாற்றத்தை பின்பு உரையாடலாக மாற்றினோம். இந்த எழுத்துரு மொழிமாற்றத்துக்கு வங்கி ஒன்றில் தொழில்புரியும் மற்றுமொரு நண்பியும் உதவி புரிந்தார்.

எழுத்துருவை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போதே இலங்கையில் காணப்பட்ட மொழி வழக்கை நாம்  உடைத்துவிட்டோம். 10 நாட்களில் முடிக்க வேண்டிய படம் என்பதால் எங்களால் முடிந்ததை மட்டும் முயற்சி செய்தோம். இதில் நல்லதொரு அனுபவம் கிடைத்தது.

தர்ஷன்

நான் ஏற்னவே சகோதர மொழி சின்னத்திரை நாடகங்களில் அதிகமாக நடித்துள்ளேன். அதேபோல் பல சிங்கள திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். இருந்தபோதிலும் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்ட திரைப்படமொன்றில் நடிப்பதற்கு வாய்;ப்பு வந்தபோது அது மிகவும் ஆனந்தமான அனுபவமாக இருந்தது.

அசோக ஹந்தகம, கலைஞர்களின் திறமையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றால்போல் சந்தர்ப்பம் வழங்கக்கூடிய இயக்குநர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எந்த கலைஞரிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டும் என்ற நுட்பம் இயக்குநருக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே அவருடன் நான் பணியாற்றியுள்ளதால் இப்படத்தில் என்னிடம் எதனை அவர் எதிர்பார்க்கிறார் என்பதை இலகுவாக எனக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

இத்திரைப்படத்தில் இரண்டு புதிய நடிகைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே சின்னத்திரை அறிவிப்பாளர்களான அறிமுகமானபோதிலும் வெள்ளித்திரை அனுபவம் என்பது புதிதானது. இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் மிகவும் அழகாக நடித்திருந்தார்கள். 

கிங்

அசோக ஹந்தகமவுக்கு உதவி இயக்குநராக நான் இதற்குமுன் கடமையாற்றியுள்ளேன். அந்த நட்பின் காரணமாக 'ஒரு புலம்பெயர் பாத்திரமொன்றை நான் எழுதியுள்ளேன். கட்டாயமாக அதனை நீதான் செய்ய வேண்டும்' என இயக்குநர் என்னிடம் கேட்டுகொண்டார்.
'புலம்பெயர் தமிழர்' எனும்போது வெளிநாட்டில் 5 வருடங்கள் வாழ்ந்த அனுபவமும் இருந்ததால் இப்பாத்திரத்தினை நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். 

1972ஆம் ஆண்டு எனது தாத்தா குத்துவிளக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு பின்னர் 3 தசாப்தங்களுக்கு பிறகும் எங்களுடைய அப்பாவின் காலத்திற்கு பின்பும் எனக்கு இத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது பெரியதொரு மகிழ்ச்சி என்றே கூறவேண்டும்.


கேள்வி:- உதவி இயக்குநர் என்ற முறையில் நீங்கள் இத்திரைப்படத்தில் பணிபுரியும் போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறுங்கள் வதீஸ்?


பதில்:- முதலில் இயக்குநருடன் எழுத்துரு வாசிப்பை செய்தோம். இயக்குநர் பல விடயங்களை எனக்கு கூறினார். உரையாடல் என்றால் இவ்வாறுதான் வரவேண்டும். வேறு கருத்து வரக்கூடாது போன்ற பல விடயங்களை இயக்குநர் எம்முடன் உரையாடினார்.

அதனால், சகோதர மொழியில் எழுதியிருக்கும் உரையாடலின் கருத்து சரியாக தமிழ் மொழியில் வரவேண்டும் என்பதற்காக மிகவும் அவதானத்துடன் செயற்பட்டேன்.


கேள்வி:- நீங்கள் பார்த்த அளவில் இயக்குநர் இத்திரைப்படத்தின் கதையை அனுபவித்து எழுதினாரா அல்லது பிறர் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு எழுதினாரா?


பதில்:- யுத்தத்தின் பின் யாழ். சமூகத்தை பார்க்க வேண்டிய தேவையொன்று அவரிடம் இருந்தது. அதன் பின் அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். அந்த சூழலை நன்கு அவதானித்தார். முன்னாள் விடுதலை புலிகள் இயக்க போராளிகள் மற்றும் பலரை சந்தித்து கலந்துரையாடினார்;. இவ்வாறு யாழ். சமூகத்தை உள்வாங்கிக்கொண்டுதான் இந்த கதையை அவர் எழுதினார்.

இவ்விடத்தில் ஓர் உதாரணத்தை கூறவேண்டும். இத் திரைப்படத்தின் 20 ஆயிரம் ரூபா சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த ஒரு காட்சி வரும். இயக்குநர் யாழிற்கு சென்றபோது முன்னாள் போராளிகள் சுமார் 15 பேரிடம் உரையாடினார். இதன்போது அப்போராளிகளிடம் 'இதற்குபின் நீங்கள் என்ன செய்யபோகின்றீர்கள்' என்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர், 'எனக்கு டிரைவிங் மட்டும்தான் தெரியும். டிரைவிங்க லைசன் எடுக்க 20,000 ரூபாய் தேவைப்படுகிறது' என்றார். அவர் கூறிய அந்த வசனம்தான் 20,000 ரூபாய் காட்சியாக மாறியுள்ளது.

இவ்வாறு யாழில் பார்த்து உள்வாங்கிய சின்னச் சின்ன விடயங்கள்தான் சற்று மெருகேற்றம் செய்யப்பட்டு திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.


கேள்வி: இந்த திரைப்படத்தின் கருவானது தனிப்பட்ட ரீதியில் தமிழர்களுக்கு தமிழர்களாலேதான் பிரச்சினை என்ற மாயையை வேறு உலகுக்கு காட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதா? ஒரு தமிழ் உதவி இயக்குநர் என்ற முறையில் அவருடைய இந்த எழுத்துரு மற்றும் திரைக்கதை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?


பதில்:- இந்த எழுத்துரு மொழிபெயர்ப்பு செய்து முதலில் வாசித்த போது எனக்கு அதனது கதை பிடித்துபோனது. இத்திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நான் யாழைச் சேர்ந்தவன். கடந்த 2007ஆம் ஆண்டு வரை நான் யாழில் இருந்தேன். 1996 முதல் 2002ஆம் ஆண்டு வரை புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்து இருந்தேன். அதனால் யாழ். சமூகம் குறித்து ஆழமாகவே தெரியும். எமது தமிழ் சமூகத்தை அவர் வெளியில் இருந்து பார்த்து உள்வாங்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவரது அரசியல் பார்வை வேறாக இருக்கலாம். ஆனால், இப்படிதான் யாழ்ப்பாணம் என்று எல்லோராலும் பொதுவாக பார்க்கப்பட்ட ஒரு விடயத்தை அவர் ஆழமாக ஊடுறுவிச் சென்று பார்;த்த முதல் நபர் என்ற முறையில் எனக்கு இந்த திரைப்படம் பிடித்திருந்தது.

இக்கதைக்கருவில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், யதார்த்தம் பல இருக்கிறது என்பதே உண்மை. இதனை சமூக நீரோட்டத்தில் இருப்பவர்கள் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.


கேள்வி: யாதார்த்த வாதி வெகுஜன விரோதி. நீங்கள் இன்னும் யாழ். சமூகத்தில் இருந்துகொண்டு இருக்கின்றீர்கள். இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக உங்களுக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

பதில்:-  வலைத்தளம், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்துடையோர் இருப்பதால் அவற்றில் பல மாறுப்பட்ட கருத்துகள் வந்தன. ஆடு, மாடுகள்போல் தலையாட்டும் தமிழர்களுக்கு நீ உதாரணமாக இருக்கலாம். எங்களால் அவ்வாறு இருக்க முடியாது, துரோகி என்ற கருத்துக்கள் வந்துசேர்ந்தன. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எமக்கு இந்திய சினிமா தேவை இல்லை. செத்துபோயிருக்கும் இலங்கை தமிழ் திரைப்பட துறைக்கு இப்படி ஒரு யதார்த்தமான படம்தான் தேவைப்படுகின்றது.

கேள்வி:- இத்திரைப்படத்தில் திணிக்கபட்ட தமிழ் என்ற ஒரு கருத்து நிலவுகிறது? இதற்கு காரணம் என்ன?

பதில்:- இதற்கு காரணம் இருக்கிறது. என்னைபொறுத்தமட்டில் தனி யாழ்ப்பாணம் எனக் கூறி இனி ஒன்றையும் செய்ய முடியாது. இனி யாழ்பாணத்தை மட்டும் குறிப்பிட்டு எதனையும் செய்ய முடியாது. தமிழர்கள் அனைவரும் இலங்கை முழுதும் பரந்து வாழ்கின்றார்கள். இந்நிலையில், இத்திரைப்படத்தில் யாழ்ப்பாண மொழியை புகுத்தினால் அது யாழ். மக்களுக்கு மட்டுமே விளங்கும்.

கேள்வி:- நீங்கள் கூறுவது உண்மை. அப்படியென்றால் நீங்கள் யாழ்ப்பாண தமிழை முற்றாக தவிர்த்திருக்க வேண்டும். இதில் யாழ்ப்பாண தமிழும் உள்ளது. அதேநேரத்தில் திணிக்கப்பட்ட தமிழும் உள்ளது. இது எதற்காக?

பதில்:- 10 நாட்களில் திரைப்படத்தை முடிக்க வேண்டும். அதேநேரத்தில் டப்பிங்கும் இதில் உள்வாங்கப்படவில்லை. இந்நிலையில், இது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது இயல்பாக ஏற்பட்ட ஒன்று. நாங்கள் ஒரு தமிழை இதில் திணிக்கவில்லை. ஏனெனில் சில பாத்திரங்கள் யாழ்;. பாத்திரங்கள், சில பாத்திரங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்த பாத்திரங்கள். எனவே மொழிப் பிரயோகத்திலும் சவாலொன்று இருக்கவே செய்தது. ஆனால், இது பெரிய விடயமாக கவனத்தில்கொள்ளப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:- தயாரிப்பு, குறுந்திரைப்படம் இயக்குதல் என நீங்கள் ஒரு துறைசார்ந்தவராக காணப்படுகின்றீர்கள் கிங். ஆனால், இந்த திரைப்படத்தில் நடித்தபோது நீங்கள் கற்றுகொண்ட விடயம் அல்லது நீங்கள் உணர்ந்துகொண்ட விடயம் என்ன?


பதில்:- இலங்கை தமிழ் சினிமா உலக சினிமாவை ஒத்த பாணியையே கையாள்கிறது. தென்னிந்திய திரைப்படங்களாக இருந்தாலும்கூட அது எம்மை ஈர்க்கவில்லை. விசேடமாக ஹந்தகம போன்ற இயக்குநர்கள் அவ்வாறான உலக தரம்வாய்ந்த திரைப்படங்களை செய்யும்போது அது தமிழ் திரைப்படத்துறைக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

எங்களுக்கே உரிய விடயத்தை கூறும் அழகு ஒன்று உள்ளது. உதாரணத்திற்கு யாழ்ப்பாணம் என்றால் யாழ்பாணத்தை கூறும் விதம் உள்ளது. அதனை இந்தப்படம் காட்டியுள்ளதாக நான் நினைக்கிறேன். எம்மை போல இனிவரப்போகும் திரைப்பட இயக்குநர்களுக்கு இது ஒரு சாவால்தான்.
'சமுதாயம்' திரைப்படத்தை இயற்றியதும் ஹென்றி சந்திரவன்ஸ சிங்கள இயக்குநர்;, 50 வருடங்களுக்கு பின்பு 'இனி அவனை' இயற்றியதும் அசோக ஹந்தகம சிங்கள இயக்குநர் என்றால் அது எமது பிழை. நாட்டில் இருந்த சூழ்நிலை காரணமாக நாம் நம்மை இந்த துறையில் வளரத்துகொள்ள தவறிவிட்டோம்.

இனிவரும் காலங்களில் நாமே திரைப்படம் இயக்க வேண்டும். எமது பிரச்சினைகளை நாமே வெளிகொணர வேண்டும். அவ்வாறு கொண்டு வரும்போது நீங்கள் பார்க்கும் அரசியல் பார்வைகூட வேறாக இருக்கும். இன்னும் எமது சமூகத்தை நாம் நெருக்கமாக தெரிந்திருப்போம். எல்லாம் மீறி 'கடந்த யுத்தம்' என்ற பெயரில் இன்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அசோக ஹந்தகம இந்த முயற்சியை எடுத்துகொண்டது பெரிய விடயம்தான்.

கேள்வி: இத்திரைப்படத்தின் தொழில்நுட்ப பிழைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. நீங்களும் ஒரு இயக்குநர் என்ற முறையில் இதில் கண்ட நல்ல, பிழையான விடயங்கள்..?

பதில்:- எல்லா திரைப்படங்களும் இயக்குநர் பார்வையில்தான் காணப்படுகின்றது. நான் இயக்கும் விதமும் அவர் இயக்கும் விதத்திலும் வித்தியாசம் காணப்படுகின்றது. அவரது எடிட்டிங் பக்கத்தில் நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. அவர் காட்சிகளை உருவாக்கிய விதம் போன்றவற்றில் விமர்சனங்கள் உள்ளன. அது அவருக்குரிய பாணி. தொழில்நுட்பத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி பார்க்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது.


கேள்வி:  நீங்களும் வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்ற முறையில் நீங்கள் இந்த கதையை கேட்கும்போது எவ்வாறு இருந்தது?


பதில்:- இந்த திரைப்படத்தை நான் முழுமனதுடன்தான் செய்தேன். இதிலிருந்து என்னுடைய கருத்தை உங்களால் ஊகித்துகொள்ள முடியும். அவர் கூறிய எல்லாவிடயத்தையும் நான் ஆமோதிப்பதாக அர்த்தம் இல்லை. அந்த முயற்சிக்கு நாங்கள் கைகொடுக்க வேண்டும். அவர் கூறிய விடயங்களில் உண்மை சார்ந்த விடயங்களும் உள்ளன, கற்பனை விடயங்களும் உள்ளன. கற்பனை சார்ந்த விடயங்களை அவர் திரைப்படத்தில் உள்வாங்கியது அவரது சுதந்திரம். அதில் சரி, பிழை பார்க்க வேண்டியது விமர்சகர்கள்.

அவர் கற்பனை சார்ந்து பல விடயங்களை கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடத்தல் இருக்கின்றதா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி, விபசாரம், வேலை இன்மை பிரச்சினை இருக்கின்றதா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. இவை அவருடைய கற்பனை சார்ந்த எண்ணங்கள். இதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. நானும்; ஓர் இயக்குநர் என்ற முறையில் இவ்விடயங்களை பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்தோரை பாரத்து சில தமிழ் மக்கள் கேள்விகேட்க அச்சப்படுகிறார்கள்;. ஆனால் அவர் அச்சமில்லாமல்; கேள்விகேட்கிறார்.


கேள்வி:- புலம்பெயர்ந்தோர்  பார்வையில் 'இனி அவன்' பார்வை சரி என நீங்கள் ஒத்துகொள்கின்றீர்களா?


பதில்:- நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது.

அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன். கனடா ரொரன்டோ திரைப்பட விழாவில் அதிகமாக கனேடியர்கள் இத்திரைப்படத்திற்கு விமர்சனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் நல்லா ஆமோதித்தும் உள்ளனர்.


கேள்வி: 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் இதனை வேறுகோணத்தில் பார்ப்பதற்கான காரணம் என்ன?


பதில்:- சினிமாவை பார்வையிடுவது என்பது ஒரு புத்தகத்தை வாசிப்பதை போன்று. புத்தகத்தில் நான் இன்று சாப்பிடவில்லை என்று ஒரு வரி இருந்தால் அந்த வரியை மட்டுமே வாசிப்போம். ஏன், சாப்பிடவில்லை, வறுமை காரணமாக இருக்கலாமா? என்ற பின் வாசிப்பு எம்மிடம் இல்லை.
உதாரணத்திற்கு இந்த திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை கூறலாம். 

இந்த படத்தில் காண்பிக்கப்படும் சிறிய சிறிய நுணுக்கமான விடயங்கள் அதாவது, நிரஞ்சனியை அழைத்துகொண்டு வரும்போது செருப்பு இரண்டை அங்கே வைத்திருப்பார். அந்த செருப்பு குலோசபாக காண்பிக்கப்பட்டிருக்கும். அதை திருப்பி வைத்து தர்ஷன் அணிந்துகொள்வார். இதில் உள்ளர்த்தம் இருக்கு.

அதேபோல் பைக் முதலில் ஸ்டாட் ஆகாது. பின்பு ஸ்டாட் ஆகி செலுத்துவார்கள். இவை திரைப்படத்தின் வாசிப்பு என்று கூறவேண்டும். இந்தளவு எமது மக்கள் ஒரு திரைப்படத்தை வாசிப்பு செய்கின்றார்களா என்பது கேள்விக்குறி. நான் அவர்களை குறைத்து கூறவில்லை. ஆனால் அதுதான் உண்மை. அசோக ஹந்தகம என்ற இயக்குநரின் லேயர்ஸை எம்மால் விளங்கிகொள்ள முடியவில்லை. ஆனால், சர்வதேச ரீதியாக அவரை விளங்கிக்கொள்கின்றனர்.

கேள்வி:- தர்ஷனை பொறுத்தவரை உங்களுக்கு இந்த திரைப்படம் சோர்வை ஏற்படுத்தவில்லையா?


பதில்:- இல்லை. ஏனெனில் முன்னாள் போராளியின் கதை எனும்போது நான் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்ட நடிகனாகதான் இருந்தேன். அதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் பாத்திரத்தில் இருந்து விடுபட்டு நல்லதொரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும். மக்கள் மத்தியில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்டகாலமாகவே இருந்தது. ஆனால், அது தொடர்பில் நான் இயக்குநரிடம் கேட்கவில்லை.

இதுதான் கதை என்று கூறினார். சரி எனக்கு அமைந்த பாத்திரம் இதுதான் என தீர்மானித்தேன். ஏனெனில் இங்கு தமிழ் சினிமா இல்லை என்பதால், சகோதர மொழியில் நான் ஒரு தமிழ் கலைஞனாக காணப்படுவதால் எனது வெற்றியை தக்கவைத்துகொள்ள நான் படம் நடித்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய தொழில். நான் பணம் பெற்றால்தான் எனது வயிற்றை நிரப்பமுடியும். இவ்வாறான ஒரு வட்டத்துக்குள் நான் நடித்தே ஆகவேண்டும்.

அதேவேளை, எல்.ரீ.ரீ.ஈ பாத்திரத்திலிருந்து நான் விடுப்பட வேண்டும். நல்ல உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அத்தகையொரு ஸ்கிரிப்டுக்காக நான் காத்துகொண்டிருந்தேன். அவ்வாறானதொரு சூழலில்தான் எனக்கு இந்த பாத்திரம் கிடைத்தது.

இங்கு ஒரு விடயத்தை கூறி ஆகவேண்டும். என்னை கெட்ட எல்.ரீ.ரீ.ஈ ஆக அனைத்து திரைப்படங்களிலும் காண்பித்துவிட்டார்கள். இயக்கம் என்றால் கெட்டவன், கெட்டவன் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் வந்துவிட்டது. அதனால், இனி அவன் திரைப்படத்திற்கு பிறகு சகோதர மொழி மக்கள் மத்தியில் காணப்படும் இந்த நிலைப்பாடு மாறும். அதனால்தான் இந்த படத்திற்கு இனி அவன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் இனிமையானவன் என்று அர்த்தம்.

கேள்வி: இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நீங்கள் எடுத்துகொண்ட முயற்சிகள் குறித்து கூறுங்கள்?

பதில்:- நான் நன்கு மெலிய வேண்டும் என்று இயக்குநர் கூறினார். சுத்தமான யாழ்ப்பாண தமிழ் பேச வேண்டும் என்று கூறினார். எனக்கு யாழ்ப்பாண தமிழ் பேச வரும். ஆனால் அவ்வளவு என்று இல்லை. மற்றும்படி வளமையான பயிற்சிகள்தான். வழமையாக ஆயுத பயிற்சி இருக்கும். சிறிய பயிற்சிகள் இருக்கும். இதில் அவ்வாறு இல்லை. எழுத்துரு கிடைத்து ஒரு மாதம்கூட செல்லவில்லை. திடீரென படபிடிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மற்றும்படி நடிகைகள் இருவரும் புதிது என்பதால் சிறிய பயிற்கள் இருந்தது. அவ்வளவுதான். பெரிதாக பயிற்சிகள் என்று இல்லை.


கேள்வி:- ஆத்ம ரீதியான ஆதரவு என்ற ஒரு விடயம் உள்ளது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை உங்களது உணர்வு என்ன?


பதில்:- ஒரு சிறிய குறை உள்ளது. நான் இந்த திரைப்படத்தில் முறையாகவே தமிழ் பேசியிருக்கலாம். என்குரலுக்கு வேறொருவர் டப்பிங் செய்திருக்கலாம் என்ற கருத்தும் இருந்தது. அதில் எனக்கு உடன்பாடில்லை. எவ்வளவு உணர்ந்து நடித்தாலும் நாங்கள்தான் டப் பண்ணியாக வேண்டும். இந்தக்குறை இனி இருக்க கூடாது. இது நல்லதொரு வாய்ப்பு. இவ்வாறான வாய்;ப்புகள் வரும்போது சிறு சிறு குறைகளை விடக்கூடாது என நினைக்கிறேன்.

கேள்வி:- இத்திரைப்படத்திற்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பு?

பதில்:- தமிழ் சினிமா என்றால் நல்ல கலர்புல்லா, பைட் இருக்கனும், டான்ஸ் இருக்கனும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்திய சினிமாவில் மூழ்கியிருப்பதால் எமது படைப்புக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும். இன்று நாம் எவ்வாறு இராசயன கலவை மிக்க உணவை உண்டு பழகிவிட்டோமோ அதேபோல்தான் இராசாயனம் கலந்த தென்னிந்திய திரைப்படத்தில் ஊறிவிட்டோம். இது காலபோக்கில் மாறவேண்டும். இனி அவனை போல 15 இனி அவன்கள் வரவேண்டும்.

எமது மக்கள் இவ்வாறான திரைப்படங்களை போய் பார்த்து பரிட்சயப்படவில்லை. அது காலபோக்கில் மாறும்.


கேள்வி:- இத்திரைப்படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பை பற்றிக்கூறுங்கள்?


பதில்:- மிகவும் வருத்தத்துக்குரிய விடயம். இந்தத் திரைப்படத்திலும் ஒருவருக்கு ஒருவர் வெட்டிகொண்டுதான் காணப்படுகின்றனர். ஓர் ஊடகம் அனுசரணை தருகிறது. மற்றுமொரு ஊடகம் தராமல் விடுகறது. இதிலும் பெருந்தன்மை என்பது காட்டப்படவில்லை. 50 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகதரம் வாய்ந்த ஒரு திரைப்படம், உலக திரைப்படவிழாவில் பல பாராட்டுதல்களை பெற்றுகொண்ட படம் என்ற விடயம் உணரப்படவில்லை. ஊடகங்கள் ஆதரவு தரவில்லை என்றே கூறவேண்டும். தென்னிந்திய திரைப்படங்களுக்கு கொடுக்கின்ற ஆதரவில் ஐந்து வீதத்தை இதற்கு வழங்கியிருந்தால் இன்னும் இத்திரைப்படம் எங்கோ சென்றிருக்கும்.

நான் நடிப்புத்துறைக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்றன. சகோதர மொழி ஊடகங்கள் தமிழ்சார் கலைஞனாக எனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழ் ஊடகங்கள் கொடுக்கவில்லை.

நான் தேடி தேடிச் சென்று தகவல்களை வழங்க வேண்டி உள்ளது. எமது கலைகளை எமது ஊடகங்களே ஊக்குவிக்காவிட்டால் எமது கலை எவ்வாறு வளரும். இந்த விடயத்தை நாம் கூறியே ஆகவேண்டும்.

கேள்வி:- உங்களது அடுத்த செயற்திட்டம் என்ன?


பதில்:- கிங்: ஒரு நகைச்சுவை நடிகனாக வெளி வரவுள்ளேன்;. இதைத்தவிர பச்சை தங்கம் என்ற பெயரில் மலையக மக்களில் வாழ்வியலை ஒரு ஆவண படமாக தயாரித்துகொண்டுள்ளேன்.

வதீஷ்: இனி அவன் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நான் பணிபுரிந்துவிட்டேன்;. இதேவேளை    மற்றுமொரு கதைiயை எழுதி முடித்துவிட்டேன். இலங்கையில் நல்லதொரு தமிழ் படம் எடுக்கவேண்டுமென்பதற்காக காத்துகொண்டிருக்கிறேன். 

தர்ஷன்:- புதிய சிங்கள தொடரொன்றுக்கான படப்பிடிப்பு இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தென்னிந்திய திரைப்படங்கள் மூன்றிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.


கேள்வி:- இப்படத்தில் புதிதாக இரண்டு நடிகைகளை அறிமுகமாகியுள்ளனர். இவர்களது பங்களிப்பு எவ்வாறு இருந்தது?


பதில்:- படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே நாங்கள் சில காட்சிகளை நடித்துபார்த்துகொள்வோம். எனக்கு ஆதரவு தரும் பாத்திரங்கள் 50:50 என்ற வகையில் அமையவேண்டும். எனது பங்கு அதிகரித்துவிட்டால் எனது நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகிவிடும். அதேபோல் அவர்களது பங்கு அதிகரித்துவிட்டால் அவர்களது நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகிவிடும். எனவே இவற்றை தவிர்த்துக்கொள்வதற்காக இயல்பாகவே நாங்கள் நடித்து பார்த்துகொண்டோம்.

நேர்காணல்:-க.கோகிலவாணி
படங்கள்:-வருண வன்னியாராச்சி


You May Also Like

  Comments - 0

  • Markandu Devarajah Saturday, 02 March 2013 08:07 PM

    நீங்கள் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தும் பயன் இல்லை. இங்கு நுணுக்கமாகக் கவனியுங்கள் ஈழத்தின் பெண்கள் மஞ்சக் கயிறு அணிவதில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .