2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கவிஞர் றாபிக்கின் மறைவு ஈடுசெய்யமுடியாதது: கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

'கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதான கல்வி இணைப்பாளர் கவிஞர் எஸ்.எம்.எம்.றாபிக்கின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்' என்று கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியம் தனது இரங்கல் செய்தில் தெரிவித்துள்ளது.

கவிஞர் எஸ்.எம்.எம்.றாபிக் அவர்களின் மறைவு குறித்து கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.எம்.முக்தார், செயலாளர் செயிட் அஸ்லம் எஸ்.மௌலானா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

'கடந்த புதன்கிழமை இரவு தனது 51 ஆவது வயதில் காலமான கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதான கல்வி இணைப்பாளர் எஸ்.எம்.எம்.றாபிக் ஒரு கல்வி அதிகாரியாக மாத்திரமல்லாமல் ஒரு முற்போக்கு ஊடகவியலாளராகவும் கலை இலக்கியவாதியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த நண்பர் றாபிக்கின் படைப்புகள் அனைத்தும் சமூக சீர்திருத்தங்களை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தன. அது மாத்திரமல்லாமல் தனது பேனா மூலம் தான் மற்றோருக்கு சொல்லும் உபதேசங்களுக்கு ஏற்ப ஒரு முன்மாதிரியாளனாக அவர் திகழ்ந்தார் என்பது அவரிடம் காணப்பட்ட மிகச் சிறந்த குணாம்சமாகும்.

கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் பொருளாளராகவும் பணியாற்றி இப்பகுதியின் ஊடக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய நண்பர் றாபிக், புகவம் கலை இலக்கிய வட்டத்தின் செயலாளராக இருந்து கல்முனைப் பிரதேசத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு அயராது உழைத்துள்ளார்.

தனிப்பட்ட முறையிலும் பொது வாழ்விலும் சகலருடனும் மிக அமைதியுடன் இனிமையாகவும் பண்பாகவும் பழகி வந்த ஓர் உத்தமனை இன்று கல்முனை மண் இழந்து தவிக்கிறது.

உண்மையில் நண்பர் றாபிக்கின் திடீர் மறைவானது எம்மை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு கல்முனைக்கு மாத்திரமல்லாமல் கிழக்கிலங்கையின் கல்விச் சமூகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X