2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

'தேசிய ரீதியான இசை மேடைகளில் பிரபல்யமடைந்த இரண்டு மூத்த கலைஞர்களை மட்டுமே காணமுடியும்'

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


'அரச மேடைகளில் மூத்த கலைஞர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பலரும் அவர்களை மட்டுமே நாடுகின்றனர். தேசிய ரீதியாக நடத்தப்படுகின்ற முக்கிய மேடைகளில்  நன்கு பிரபல்யமடைந்த இரண்டு மூத்த கலைஞர்களை மட்டுமே அதிகம் காணமுடியும். அவர்களை தாண்டி எத்தனையோ கலைஞர்கள் இன்று உள்ளனர். இவர்களுக்கு ஏன் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லையென்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி' என்கிறார் பாடகர் எம்.ஐ.எம். இர்பான்.

20 வருட இசைத்துறை அனுபவத்தில் தனக்கென தனித்துவமான இடத்தை வைத்துக்கொண்டு மூத்த கலைஞராகவும் அதேவேளை இன்னும் வளர்ந்து வரும் கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பாடகர் இர்பான் - 'மேஸ்ட்ரோ' என்ற இசைக்குழுவையும் நடத்தி வருகின்றார்.

பாடகர், அறிவிப்பாளர், பாடலாசிரியர், கவிஞர் என பல தளங்களில் இயங்கும் இவர் அநேகமானவர்களிடம் பாடகராகவே அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது குரல் வலிமையால் பல இசை மேடைகளை அலங்கரித்த இவர், தென்னிந்திய பாடகர்கள் பலருடன் இணைந்தும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் இவரை செவ்விகண்டபோது அவர் பகிர்ந்துக்கொண்டவை...


கேள்வி:- நீங்கள் ஒரு நல்ல இசைக்கலைஞனாக மிளிர்வதற்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் பற்றிக் கூறமுடியுமா?


பதில்:- நான் ஒரு நல்ல பாடகனாக வருவதற்கு சிறந்த இசைக்குழுக்களே காரணம். தரம் 6 முதல் க.பொ.த. உயர்தரம் வரை இசையை முறையாக கற்றுக்கொண்டேன். அதனால் பாடுவதில் எந்த சங்கடங்களையும் எதிர்கொள்ளவில்லை. பலர் என்னை ஒரு நல்ல கலைஞனாகவே பார்த்தார்கள். என்னைக்கொண்டு அதிகமான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதி இசைத்துறையில் நல்ல சந்தர்ப்பங்களை வழங்கினார்கள்.

இசைத்துறையில் வளர்ந்து வரும் நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அனுபவம் எனக்கும் வாய்த்தது. என்னதான் அங்கீகரிக்கப்பட்ட கலைஞனாக இருந்தாலும் அங்கீகாரத்திற்கு அடையாளமான அரச விருதுகளுக்கு என்னைப்போன்ற பல கலைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை எனும்போது அது மிகவும் வேதனையான விடயம். அதேபோல் அரச மேடைகளில் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை அல்லது இடம்தருவது குறைவு என்ற நிலையை நாம் எதிர்நோக்கும்போது அதுவும் மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகவே நான் பார்க்கிறேன்.

கேள்வி:- இவ்வாறான நிலைமைக்கு எது காரணமாக அமையலாம் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்:- அரச மேடைகளில் மூத்த கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பலரும் அவர்களை மட்டுமே நாடுகின்றனர். தேசிய ரீதியாக நடத்தப்படுகின்ற முக்கிய மேடைகளில் நன்கு பிரபல்யமடைந்த இரண்டு மூத்த கலைஞர்களை மட்டுமே அதிகம் காணமுடியும். அவர்களை தாண்டி எத்தனையோ கலைஞர்கள் இன்று உள்ளனர். இவர்களுக்கு ஏன் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லையென்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.


கேள்வி:- உங்களது திறமையை வெளிப்படுத்தும்  பாடல்கள் இதுவரை எத்தனைப் பாடியுள்ளீர்கள்?


பதில்:- நான் வளர்ந்து வரும் கலைஞன் என்ற ரீதியில் எனது சொந்த முயற்சியில் குறிப்பிட்ட சில பாடல்களைதான் பாடியுள்ளேன். இந்த இடத்தில் நான் எதிர்கொண்ட ஒரு துர்பாக்கிய சந்தர்ப்பத்தை நினைவுப்படுத்தியே ஆகவேண்டும். நான் இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசக்கூடிய வகையில் சுயமாக ஒரு பாட்டை தயாரித்தேன். அந்த பாட்டு ஊடகங்களில் ஒலிபரப்பப்பட்டிருந்தால் பாரியளவில் வரவேற்பை பெற்றிருக்கும்.

இசைத்துறை சார்ந்து எனக்குள் இருக்கும் பல திறமைகள் பலருக்கு அறியக் கூடிய வாய்ப்புகள் கிட்டியிருக்கும். ஆனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நான் தயாரித்த அந்த முயற்சியானது ஒலிபரப்பப்படாமலே போனது. அந்த பாடலும் அழிந்தே போய்விட்டது. இது உண்மையில் எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம்.

இதைத் தவிர அதிகமான இசை அல்பங்களுக்கு நான் பாடல்களை பாடியுள்ளேன். சொந்தப் பாடல்களை பாடுவதற்கான வாய்ப்புகள் பெரிதாக வாய்க்கவில்லை. அப்படியே வாய்த்தாலும் அதை பிரபல்யமானவர்கள் பாடுவதற்கே வாய்ப்புகள் கிட்டுகின்றன.

இதேவேளை அதிகமான நிலைய குறியிசைகளை பாடியிருக்கிறேன். இதேவேளை, சக்தி வானொலி ஒழுங்கு செய்திருந்த இசை நிகழ்வொன்றில்
அதிகமான இந்திய பாடகர்களுடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதேபோல் பல மேடைகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.


கேள்வி:- இந்திய பாடகர்களுடன் பாடிய சந்தர்ப்பத்தை எவ்வாறு உணர்கின்றீர்கள்?


பதில்:- இந்திய பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, அனுராதா ஸ்ரீராம், இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா, மதுமிதா, கார்த்திக், திப்பு, தேவன், ஸ்ரீனிவாஸ், ஹரிஸ்ராகவேந்திரா, உன்னிமேனன், வசுந்தராதாஸ், காயல் ஷேக் மொஹமட், சுஜித்ரா, மாதங்கி, மஹாலட்சுமி ஐயர், உன்னிகிருஷ்ணன், செல்வக்குமார் உட்பட்ட 50 இற்கும் மேற்பட்ட இந்திய இசைக்கலைஞர்களுடன் பாடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம். இவர்களுடன் இணைந்து பாடும்போது நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் என்தை அனுபவபூர்வமாக அறிந்துகொள்ள முடியும். எம்மை நிர்ணயித்துக்கொள்ள முடியும். உயிரைக் கொடுத்து பாடுவதாக நாம் நினைப்பதுண்டு. ஆனால், அவர்களுடன் பாடும்போது நாம் விடும் பிழைகளை திருத்திக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

இதுமட்டுமல்ல, இலங்கையில் உள்ள மூத்த, இளைய இசைக்கலைஞர்களுடனும் பல மேடைகளில் பாடிய அனுபவங்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது.

கேள்வி:- தற்போதைய புதிய இசை படைப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்:- வரவேற்கப்பட வேண்டும். இத்தகைய புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பானது இசைக்கலைஞர்களின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. இதற்கான ஆதரவுகளை ஒலி, ஒளிபரப்புத்தாபனங்கள் வழங்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கான காட்சிகளை ஒளிபரப்பு தாபனங்கள் தாமாக முன்வந்து காட்சிப்படுத்தவேண்டும். அல்லது தயாரித்துக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கப்படும் வரவேற்பில்தான் அவர்களது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், புதிய முயற்சிகளானது தனிப்பட்டு ஒருசாராருக்கு போய்ச்சேரக்கூடிய படைப்பாக இருக்கக் கூடாது. ஒருவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உருவாக்கும் படைப்பானது அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரக்கூடியதாக இருக்கும் அதேவேளை நீண்டு நிலைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு இளைஞனின் புதிய முயற்சியானது எப்போதும் பேசப்படக் கூடியதாக இருக்க வேண்டும். பல பக்கங்களையும் கருத்திற்கொண்டு அவனது திறமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். தனி ஒரு சாரரை மட்டும் கருத்திற்கொண்டு உருவாக்கப்படும் எந்த திறமை சார் படைப்புகளும் ஒருக்கட்டம் வரை மட்டுமே நிலைத்திருக்கும்.

பழைய பாடல்களும் இடைக்காலப் பாடல்களும் இன்றும் பேசப்படும் வகையில் இருக்கும்போது ஏன் தற்போதைய புதிய முயற்சிகளும் அவ்வாறு பேசப்படக்கூடாது என்பதே எனது கேள்வி?


கேள்வி:- உங்களது இசைக்குழு குறித்து கூறுங்கள்
?

பதில்:-'மேஸ்ட்ரோ' என்ற இசைக்குழுவை நடத்தி வருகின்றேன். ஓர் இசை நிகழ்வொன்றின் போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்னா இந்த 'மேஸ்ட்ரோ' என்ற பெயரை தெரிவு செய்ததை நான் இவ்விடத்தில் நினைவுகூர்ந்தே ஆகவேண்டும்.

வர்த்தக ரீதியாக பல இசை மேடைகளை எனது இசைக்குழு அலங்கரித்துள்ளது. படிப்படியாக வளர்ந்து வரும் இசைக்குழு. நல்ல இசைக்கலைஞர்களை கொண்டதாக காணப்படுகின்றது. அவர்களும் நல்ல வருமானத்தை எனது இசைக்குழுவினூடக பெற்றுக்கொள்கின்றனர்.
கிங்ஸ்டன், பரணிதரன், ஜரால்ட், பிரேங்கோ, திபாணி, பிரசாந்தினி  மயில்வாகனம், கமலநாதன், பாஸில்  ஆகியோர் எனது இசைக்குழுவை அலங்கரிக்கும் இசைக்கலைஞர்களாக தொழிற்பட்டு வருகின்றனர்.


கேள்வி:- வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கலைஞர்களுக்கு மூத்த கலைஞர் என்ற வகையில் எவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்கப் போகின்றீர்கள்?


பதில்:- இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் கடந்த எட்டு வருட காலமாக நான் ஓர் அறிவிப்பாளராக கடமையாற்றி வருகின்றேன். இங்கு 'பொன்மாலை' பொழுது என்ற நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நான் வழங்கி வருகின்றேன். இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்கள் அவர்களுடன் இணைந்து புதிய பாடல்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள்.

இதைவிட, கடின முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட காத்திரமான படைப்புகளை பட்டி, தொட்டி முதல் அனைத்து இடங்களிலும் ஒலிக்கச் செய்வதற்கு சந்தர்ப்பம் எதிர்பார்த்திருக்கும் அனைத்து கலைஞர்களும் என்னை நாடுங்கள். நீண்டகாலம் கேட்கக் கூடிய பாடல்களை உருவாக்குதற்கு என்னால் ஊக்குவிக்க முடியும். அந்த ஆற்றலை இறைவன் எனக்கு அருளியுள்ளார்.

நல்லதொரு இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் உருவாக முடியாது. ஒருவர் தன்னிச்சையாக இயங்கும் போது அவரது முயற்சி நீண்டகாலம் நிலைத்திருக்காது. நல்ல படைப்புகளை ஒலிபரப்ப ஊடகங்கள் தயாராகவே உள்ளன. ஆனால், காத்திரமான படைப்புகளாக இல்லாமல் சாதாரண அளவில் காணப்படும் ஒரு படைப்பை ஒரு தடவை மாத்திரம் ஒலிபரப்பு செய்துவிட்டு பின் அதனை மறந்து விடுவார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். தன்னிச்சையாக இல்லாமல் கூட்டு முயற்சியில் பலரது கருத்துக்களை செவிமடுத்து சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு நான் எப்போதும் ஊக்குவிப்பாக அமைவேன்.

இந்தத் துறையில் போட்டி இருக்க வேண்டும். பொறாமை இருக்கக் கூடாது. கலைஞர்கள் என்பவர்கள் பொறுமையானவர்கள். நான் இந்த இடத்திற்கு மட்டுமான கலைஞன் இல்லை. அனைத்துக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு பொதுவாக வாழ்கின்ற கலைஞன்.  

கேள்வி:- கலைஞர்களுக்கு இடையில் நிகழும் போட்டி மிகுந்த சூழலானது ஆரோக்கியமிக்கதா?

பதில்:- பல கலைஞர்கள் தம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களால் திசையழிந்து போகின்றனர். இது கலைஞர்களுக்கான ஒரு துர்ப்பாக்கிய நிலைமை. இறைவனால் கொடுக்கப்பட்ட குரல் வளத்தை சிலர் தமது தீய பழக்கவழக்கங்;களால் இல்லாமல் செய்கின்றனர். இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அனேகமான கலைஞர்கள் அதனை போட்டியாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் கலைஞர்களுக்கு இடையில் போட்டி நிலை உருவாகின்றது. இது ஆரோக்கியமானதல்ல.

இசை என்பது இலங்கை கலைஞர்களுக்கு முழுநேர கலையாக இல்லாததன் காரணமாகவும் போட்டி நிகழ்கின்றது. ஒரு நல்லதொரு வாய்;ப்பு வரும் போது அந்த வாய்ப்பை தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அனைவரும் நினைக்கின்றனர்.

கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமானால் போட்டி நிலைமை என்பது இருக்காது. யுத்தம் நிறைவடைந்த சூழலில் அதிகமான மேடை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த போதும் தற்போது அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.


கேள்வி:- இணைய வானொலிகள், ஐபேர்ட் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வருகையானது வானொலியின் வளர்ச்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தப்போகின்றது. இதைப்பற்றிய உங்கள் கருத்து?


பதில்:-  இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு என்ற வகையில் அனைவரினது கைகளிலும் இணையதள வசதியோ அல்லது ஐபேர்ட் வசதி என்பதோ இல்லை என்றே கூறவேண்டும். செல்வந்தர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிட்டினாலும் கிராமத்தவர்கள் இன்னும் வானொலிகளையே நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

வயல்வெளிகள், பெட்டிக்கடைகள், பஸ்கள் என பட்டி, தொட்டி தோறும் வானொலியின் மவுசு குறையவில்லை. இவ்வாறான இடங்களுக்குச் சென்று இணைய வானொலி, ஐபேர்ட் என்றால் அது அவர்களுக்கு புதிய வார்த்தையாக இருக்கும்.

அனைவரினதும் கைகளிலும் இணையத்தள வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் வந்துசேரும்போது வானொலிகள் இல்லாமல் போகலாம். இலங்கையில் அத்தகையதொரு நிலைமை வருவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

இதேவேளை செலவு என்பது அனைத்து விடயங்களையும் ஆதிக்கம் செலுத்தும். அந்த வகையில் தொலைபேசியூடாக இணையத்தளத்திற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்காக அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால், வானொலி என்பதற்கு அவ்வாறு செலவு செய்ய தேவையில்லை. நாம் எந்த அலைவரிசையை கேட்க விரும்புகின்றோமோ அதற்கு டியுன் செய்தால் போதும். விரும்பியவாறு கேட்டுக்கொள்ளலாம்.

கேள்வி:- இலங்கையைச் சார்ந்த இளம் இசைக் கலைஞர்களுக்கு நீங்கள் கூறப்போவது..?

பதில்:- நவீன யுகத்தில் இருப்பதால் இலங்கையிலுள்ள இளம் கலைஞர்களுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தை போல் மிகவும் கடினப்பட்டு வாய்ப்புகளை தேடியலைய வேண்டியதொரு நிர்ப்பந்தம் என்பது தற்போதைய இளம் கலைஞர்களுக்கு இல்லை. கைமேல் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்திக்கொள்வது அவர்களில் கைகளிலே தங்கியுள்ளது.

இன்னும் பலர் தமது படைப்புகளை வர்த்தக ரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறான படைப்புகள் நீண்ட காலம் வாழக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.


கேள்வி:- உங்களது 20 வருட இசை வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்கள் குறித்து கூறுங்கள்?


பதில்:- 20 வருட இசைத்துறை அனுபவத்தில் பல்வேறு விடயங்கள் இருந்தாலும்கூட எனது இசைத்துறையின் ஆரம்பமான பாடசாலையில் இருந்து இந்த கலையை தட்டிக்கொடுத்து ஊக்குவித்து என்னை வளர்த்துவிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை இவ் இடத்தில் கூறியே ஆகவேண்டும். முதலில் எனது தாய், தந்தையர்.

அதேபோல் இலங்கையின் மிகப் பிரபல்யமான இசைக்குழுக்களான பஸாலின் ஆஷ்வரி,  மோகன்ராஜின் அப்சராஸ், சிவக்குமாரின் அக்னி, ரவிச்சந்திரனின் தர்ஷனாஸ், பயாஸ் ஸவாஹரின் சுப்பர்சன்ஸ், மெல்வினின் சூர்யா,  சேகரின் சித்தாரா  உட்பட அனைத்து இசைக் குழுக்களிலும் நான் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.

தென்னிந்திய பாடகர்களுடன் பாடுவதற்கு அதிகமான சந்தர்ப்பங்களை வழங்கிய மோகன்ராஜ் அவர்களை நினைவுகூர்வது கட்டாயமானது. மிகவும் பிரமாண்டமான ஓர் இசை நிகழ்வில் தென்னிந்திய பாடகி அனுராதா ஸ்ரீராமுடன் 15 பாடல்களை பாடுவதற்கு சந்தர்ப்பங்களை மோகன்ராஜ் வழங்கியுள்ளார்.

என்னை வளர்த்துக்கொள்வதற்கு கரம் கொடுத்த, கொடுக்கும் மேடைகளான பாட்டுக்குபாட்டு, சிம்பனி, சக்தி சூப்பர் ஸ்டார், புது வசந்தம் போன்ற மேடைகளுக்கு நான் நன்றியை இவ்வேளை கூறவேண்டும்.

ஒரு கலைஞன் வெளிக்கொணரப்படுவதென்றால் அது ஊடகங்களினால்தான். அந்த வகையில் என்னை ஒரு கலைஞனாக அடையாளப்படுத்தி என்னை ஊக்குவித்த அனைத்து அரச, தனியார் ஊடகங்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

இலங்கை கலைஞர்களை வளர்ப்பதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிசெய்துகொண்டிருக்கும் மறக்க முடியாத நண்பர்களான சிம்பனி தயாரிப்பாளர் ஜாபீர்,  வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் குலேந்திரன், அபர்ணா சுதன், லோஷன், நவநீதன், மதன், காண்டீபன், வீரகேசரி செந்தில், புதுவசந்தம் தயாரிப்பாளர் கோணேஷ் உற்பட பலருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்- கித்சிறி டீ மெல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .