Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஜூன் 22 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பெண்கள் தங்கள் உரிமைக்காக கவிதைகளின் மூலம் குரல் கொடுக்கிறார்கள். கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இச்சூழல் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக லண்டாய் நூலில் விரிவாக எழுதி இருக்கிறேன். கவிதையைத் தன் கருத்தைத் தெரிவிக்கிற ஊடகமாகப் பயன்படுத்துகின்றனர்' - ச.விசயலட்சுமி
கே: மலையகப் பெண்களும் ஊடறுவும் நடத்திய பெண்நிலைச் சந்திப்பும், பெண்ணிய உரையாடலும் நிகழ்வில் 'போர்காலச் சூழலில் பெண்' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தீர்கள். போரால் பாதித்த பெண்களைச் சந்தித்தீர்களா?
ஆம்‚ சந்தித்திருக்கிறேன். நானாக அவர்களைத்தேடிச் செல்லும் முன்பாக அவர்களாக என் வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சியில் என்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். இரத்தமும் சதையும் வெடித்துச் சிதறும்படியான காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் கல்கி இதழில் வெளியான என் கவிதை ஒன்று நடுக்கூடத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துக் கொண்டே உணவருந்தி இரவு குடும்பத்தினர் உறங்கப் படுக்கை விரிக்கும் காட்சியை விவரித்திருப்பேன்.
போரின் அத்தனை அவலங்களையும் கொத்துக்குண்டுகளின் தாக்குதல்களையும் பெண்களுக்கு நடத்தப்பட்ட, நடத்தப்படுகிற அனைத்தையும் இன்று ஊடகங்கள் „யூ டியூப்... இணையம் நமக்கு வீட்டுக்;குள்ளேயே கொண்டு வந்து காண்பிக்கின்றன. போரால் பாதிக்கப்பட்ட பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. ஆனால், இன்று விளையாட்டு முதல் போர்ச்சூழல் வரை அனைத்தையும் தொலைக்காட்சிகளில், இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது.
செல்வி சிவரமணி கவிதைகள், காப்டன் வானதியின் கவிதைகள் 2001ஆம் ஆண்டே வாசித்திருக்கிறேன். „பெயல் மணக்கும் பொழுது... தொகுப்பின் பல கவிதைகள் என சூழலை எழுத்தால் நெருங்கி உணரமுடியும். சமர் என்ற இதழையும் சிங்கப்பூரிலிருந்து வந்த சில இதழ்களையும் வாசித்தபோதும் சமர்க்களக் காட்சிகளை உணர்ந்திருக்கிறேன்.
போரால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வளையத்துக்குள் சென்று தாக்குதல் நடத்தப்பட்டபின் தப்பி முகாமில் தங்கியிருந்து மீண்ட முதியவரைத் தோழி ரஞ்சி அறிமுகப்படுத்தினார். அவரோடு போர்குறித்து அந்த சூழல் குறித்து பேச நினைத்தபோதும் ஊடகங்களில் நான் பார்த்த காட்சிகள் மனக்கண்ணுக்குள் தோன்ற பேசாமல் இருப்பதே அவர் ஆன்மாவுக்கு செய்யும் உதவியாக இருக்குமென்று அது தவிர்ந்த மற்றவற்றைப் பேசினோம். வாய்ப்பு ஏற்படுமானால், போரால் பாதித்த பெண்களை நேரில் சந்தித்து உரையாடுவேன்.
கே:போர்க்காலத்தில் பெண்கள் பெற்றிருந்த, பெற்றிராத சுதந்திரங்கள் என்னென்ன?
போர் என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி போன்றதல்ல. மக்கள் வழிநின்று பார்த்தால், சூழல் போரிட வேண்டிய கட்டாயத்தை தீர்மானிக்கிறது. சுதந்திரம் என்பது பொருந்தாது. உரிமை என்பது சரியான வார்த்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.
குடும்பம் தனிச்சொத்து என்பதற்கு பயன்படும் கருவியாக மட்டுமே பெண் இருப்பது ஆரோக்கியமானது இல்லை. பெண் சமூகப் பொறுப்புகளில் பங்கெடுப்பது அவசியம். பெண்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப தன் குழந்தைகளையும் குழுக்களையும் காக்கும் தலைமைப் பண்பை இயற்கையிலேயே பெற்றவள். ஆண்களைக் காட்டிலும் குறைந்த கலோரி அளவே இவளுக்கு போதுமானது. அதிலும் தாய்மை சார்ந்த உடலியல் மாற்றங்களை அனுபவித்தாலும் (உடல், உள்ளம்) எதிர்கொள்ளும் மன உறுதி வாய்ந்தவள்.
போர்க்காலங்களில் போர்க்குழுக்களில் சிறுசிறு தலைமைப் பதவிகள் கிடைத்திருக்கின்றன. முன்னணியில் இருந்து போராடியிருக்கிறார்கள். படையினரை வழி நடத்தி இருக்கிறார்கள். அனைத்துவிதமான ஆயுதங்களையும் பாவிக்கிறார்கள்.
போர் என்பதில் நான் இரு தரப்புப் பெண்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன். இரு நாடுகள், இரு குழுக்கள் என்றாலும் அவர்கள் சார்ந்த கருத்தியலால் எல்லையால் பிரிகிறார்களே தவிர போர்ச் சூழல் பொது வானது. குறிப்பாக ஈழப்போரில் படையின் முன்னணியினராக பெண்கள் வழிநடத்தி இருக்கிறார்கள். தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கப்டன் வானதியின் கவிதையில் சயனைட் குப்பியே தாலி என எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.
பெற்றிராத சுதந்திரம் என்பதை பெண் என்பதனால் பெறும் அடக்குமுறை என்பதாகக் கொள்கிறேன். எல்லா போர்ச்சூழலும் பண்டைய மன்னர் காலம் முதல் தற்காலம் வரை பெண்களைச் சூறையாடுவதைச் செய்கிறது. நிலவுடமைக் கூறுகளில் ஒன்றாக பெண் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் இனம் அழிப்பு என்கிற இடத்தில் முதலில் பாதிக்கப்படுகிறவள் பெண். அவளது கருப்பாதை வல்லாங்கு செய்யப்படுதல், அவளது கருப்பாதைக்குள் வெடிவைத்து சிதைத்தல் மற்றும் இனக்கலப்பை ஏற்படுத்த பெண்ணை கருவியாக்கி அவள் விருப்பமின்றி நிகழ்த்துகிற கொடுமை வார்த்தைகளற்றது.
சமீபத்தில் நான் படித்த புஷ்பராணியின் „அகாலம்..., சிறையில் அடைபட்ட நிலையிலும் ஆண் கைதிகளின் போக்கு பெண் கைதிகளுக்கு உறுப்புகளைக் காட்டி கெக்கலித்தது குறித்து பேசுகிறது. பெண் என்பதால் மட்டுமே அனுபவிக்கும் இத்தகு கோரம் எல்லைகள், இனப்பிரிவு என்ற வரையறைக்குள் அடங்காது. உலகம் முழுமைக்கும் பொதுவானதாகும்.
கே: ஆப்கான்ய பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை முதன் முதலாக தமிழுக்குக் கொண்டு வந்தவர் நீங்கள். அந்த தொகுதி பற்றி கூறுங்கள்?
ஆப்கான் பெண்களின் வாழ்நிலை குறித்து கல்லூரிக் காலங்களில் சட்டக்கல்லூரியில் பயின்ற தோழியோடு உரையாடியிருக்கிறேன். நான் முதுகலை படிக்கும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஈழத் தோழிகளோடு பேசும்போதும் பகிர்ந்திருக்கிறேன் (ஈழத்தோழியர் இப்போது இல்லை). தாலிபான் காலத்தில் ஆப்கான் பெண்கள் அனுபவித்ததை ஊடகம் வாயிலாக அறிந்திருந்தாலும் அப்பெண்களின் எழுத்து எனக்கு வாசிக்கக் கிடைக்காமல் இருந்தது. இணையம் அந்தக் குறையை நீக்குமென அவ்வப்போது தேடியிருக்கிறேன், பல ஆண்டுகளுக்குப் பின்னதாக சில இணையத் தளங்களில் தொடர்ந்து கவிதைகள் வாசிக்கக் கிடைத்ததும் மகிழ்ந்தேன்.
குறிப்பாக லண்டாய் எனும் கவிதை வடிவம் பஷ்டூன் மொழியினரின் வாய்மொழிப் பாடல்கள். அவை மிகுந்த ஆழமும் அடர்த்தியும் சொற்செறிவும் கொண்டவை. எலிசா கிறிஸ்வேல்ட் என்கிற அமெரிக்கப் பத்திரிகையாளரின் ஆப்கான் பயணம்தான் இப்பாடல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்திருக்கிறது. அவரைப் பின் தொடர்ந்து தேடினேன். அவரிடம் ஒரு நேர்காணலைப் பெற முயன்றோம். அவரிடமிருந்து பதிலில்லை.
இப்புத்தகம் உருவாக ஆரம்பத்தில் வலசைக்காக நண்பர் நேசமித்திரன், பனுவலுக்காக நண்பர் அமுதரசன் இவர்களோடு நிகழ்த்திய உரையாடலும் என் மொழிபெயர்ப்பை வாசித்த உடன் நூலாக கொண்டுவரலாம் என கருத்துத் தெரிவித்த பிரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கரின் கருத்தும் காரணம்.
நான் வாசித்து பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமெனும் உணர்வும் கவிதை என்பது போகிற போக்கில் எழுதுவதோ, இன்று இளைஞர்களின் பொதுப் புத்தியில் காதலைத் தெரிவிக்கிற வடிவமாக கருதப்படுவது போலவோ, பெண்களின் கவிதையைப் பாலியல் கவிதை என சுருக்கிப் பார்க்கிற மனநிலைக்கு பதில் சொல்வதாகவும் லண்டாய் இருக்கிறது.
கே: ஆப்கான் பெண் கவிஞர்களின் கவிதை இயக்கம் பற்றிக் கூறுங்கள்?
ஆப்கன் பெண்களின் எழுத்தே இயக்கம்தான். அவர்களது கவிதையே ஆயுதம் தான். அங்கு அரசியல் மிக மோசமானது. வல்லரசு நாடுகளின் தலையீடுகள் அந்நாட்டவரின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. மத அடிப்படைவாதம் பண்பாட்டு நிலையில் பெண்களை மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. இவை இரண்டுக்குமிடையில் பெண்கள் தங்கள் உரிமைக்காகக் கவிதைகளின் மூலம் குரல் கொடுக்கிறார்கள். கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இச்சூழல் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக லண்டாய் நூலில் விரிவாக எழுதி இருக்கிறேன். ஆப்கன் பெண் கவிஞர்கள் கவிதையைக் கலைக்காக எழுதவில்லை. கவிதையைத் தன் கருத்தைத் தெரிவிக்கிற ஊடகமாகப் பயன்படுத்துகின்றனர். கவிதைக்காக ஒன்றுகூடுகிற விமர்சிக்கிற சூழல் ஆங்கே இல்லாத தாலிபன் ஆட்சியின்போதும் சரி, தற்போதைய ஆட்சிகளிலும் மத அடிப்படைவாதம் அவர்கள் எழுத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது. அங்குள்ள பெண் கவிஞர்கள் எழுத்தை இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள். கவிதைகள் மூலம் மதத்தை, அரசியலை, வல்லரசுகளின் தலையீட்டை விமர்சிக்கிறார்கள். எனது லண்டாய் எனும் நூலில் மிகவிரிவாக சொல்லியிருப்பேன். அவர்களின் வாய்மொழிவடிவமான லண்டாயிலும், எழுத்துவடிவமான சமகால பெண் கவிஞர்களின் நெடுங்கவிதைகளிலும் இவர்கள் எழுத்து வீச்சுமிக்கதாக இருக்கிறது. 'மிர்மன் பஹிர்' என்கிற அமைப்பு இவர்களின் எழுத்து இயக்கமாவதற்கு தன்பங்களிப்பைச் செய்துவருகிறது. மேலும் இவர்களது கவிதைகளை இவர்கள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தொலைபேசியில் பகிர்ந்துகொள்கிறார்கள். காதல் கவிதையை தொலைபேசியில் வாசித்துக்கொண்டிருந்தபோது வீட்டினர் பார்த்துவிட காதலனுக்குதான் பேசுகிறாள் என நினைத்து தண்டித்து அவளது உயிரைப் பறிக்கும் வரை போயிருக்கிறது. கவிதை எழுதுவதை நிறுத்தாமல் செய்தால் என்கிற காரணத்தாலேயே, பெண் கவிஞர்களைக் கொன்றதும் ஆங்கே நிகழ்ந்திருக்கிறது. நம் நாட்டிலுல்ல முஸ்லிம் பெண்களைப் போல வெளிப்படையாக எழுத இயலாத சூழலிலும் அவர்கள் பேசும் அரசியல் வீரியம் மிக்கது.
கே: இத் தொகுதியும் தாங்களின் 'எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை' தொகுதியும் பெரும்பாலும் பாலியல் விடுதலை சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என கூறலாமா?
லண்டாய் எனும் ஆப்கன் பெண்களின் மொழிபெயர்ப்பு நூலையும் என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுதியான எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை என்பதையும் ஒப்பிட்டு பாலியல் விடுதலை சிந்தனை இருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி இது. அடிப்படையில் பாலியல் விடுதலை எனும் சொல்லாடல் பொருந்தாது. பாலியல் உரிமை என்பதே சரியான வார்த்தையாகும். அடிப்படை உரிமைக்காகவே போராடிக்கொண்டிருக்கிற நிலத்தில் பாலியல் விடுதலையைப் பேசுவது என்கிற பதம் தேவையற்றது. பாலியல் ஒடுக்குமுறையைப் பேசுகிற கவிதைகள் தான் அதிகம் எழுதப்படும்.
நேர்கண்டவர்: வே.தினகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago