2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வடமோடிக் கூத்தின் அரங்கேற்றவிழா

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


 கே.எல்.ரி.யுதாஜித்

 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில், மகாபாரதத்தில் வருமொரு கிளைக்கதையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட குருக்கேத்திரன் போர் வடமோடிக்கூத்தின் அரங்கேற்றம், சனிக்கிழமை (03) மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் நடைபெற்றது.

இக்கூத்தில் கூத்தர்களாக கட்டியங்காரன் : செல்வன் ர.கேசியன், குருக்கேத்திரன் :எஸ்.சந்திரகுமார், சித்திரரேகை : செல்வன் நி.கேமக்ஷன், கிருஷ்ணர் : இ.வேல்சிவம், பரமசிவன் : இ.மதன், தருமர் : ம.புவி, அருச்சுணன் : த.ரவி, வீமன் : யோ.ரோகிலன், நகுலன்: செ.சுகிலன், சகாதேவன் :சா.ரவீந்திரராஜா, திரௌபதி : ப.சந்திரசிவம், இந்திரன்/நாரதர் :அ.ரேனுஜன், துரியோதனன் : கா.அற்புதன், கர்ணன்/எமன் : வே.லோகிதன், சகுனி/மந்திரி : ப.இராஜதிலகன், பெருந்திருவாள் : இ.முத்துலிங்கம், நாட்டியப் பெண்கள்/தோழிமார் : ஜெ.பிரவீன் மற்றும் செல்வன்.ர.கேசியன் தமது கூத்துத் திறமையை வெளிப்படுத்தினர்.

 குருக்கேத்திரன் போர் என்பது மகாபாரதத்தில் வருமொரு கிளைக்கதையை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு கூத்தாகும். குருக்கேத்திரன் என்னும் மன்னன் பகவான் கிருஷ்ணருக்கு குற்றம் இழைப்பதும், குற்றமிழைத்த குருக்கேத்திரனை கிருஷ்ணர் கொலை செய்வதற்காகத் துரத்துவதும் அவன் தன்னுயிரை பாதுகாப்பதற்காக சிவன், எமன், இந்திரன் ஆகியோரை தஞ்சமடைவதும் அவர்கள் காக்க மறுக்க, குருக்கேத்திரனுக்கு இறுதியாக அருச்சுணனிடம் தஞ்மடைவதும், அருச்சுணன் தஞ்சம் கொடுத்ததற்காக கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்களுடன் துரியோதனன் படைகளின் உதவியுடன் போர் தொடுப்பதும், இறுதியில் கிருஷ்ணரும் அருச்சுணனும் சமாதானமாவதும், பஞ்சபாண்டவர்களுடனான யுத்தத்துக்கு கிருஷ்ணருக்கு உதவியாக இருந்த  துரியோதனன் கிருஷ்ணரால் விரட்டப்படுவதும் இக்கூத்தின் கதைப்பொருளாகும்.

இக்கதைச்சித்திரிப்பானது, பஞ்சபாண்டவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் கிருஷ்ணர் மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் துரியோதனனின் படைபலத்தை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட யுத்தமாகவே இப்போர் நடத்தப்பட்டதாகக் கற்பிதம் செய்யப்படுகின்றது. இன்னொரு விதத்தில் கூறுவதாயின் பாண்டவர்களின் வெற்றியை நோக்கிய கிருஷ்ணரின் தந்திரோபாயத் திட்ட நகர்வாக இக்கதை அமைந்திருந்தது.

பாண்டவர்களின் காவலனாக எப்போதும் சித்திரிக்கப்படும் கிருஷ்ணர் குருக்கேத்திரன் செய்த சிறு குற்றத்தை பயன்படுத்தி, பாண்டவர்களை பகைவர்களாக்கி கபடநாடகமாடி துரியோதனனை சண்டைக்கு இழுக்கும் செயற்பாடும், அவன் அவமானப்படுத்தப்படுவதும், ஏமாற்றப்படுவதும் எமது சமகால சமூக, அரசியல் நிலவரங்களுடன் பொருத்திப் பார்க்கப்படக் கூடியதாகவே உள்ளது. பலம் பொருந்திய ஒருவன் சிறந்த அரசியல் சாணக்கியம் இல்லாததால், எதிர்நோக்கிய வீழ்ச்சியின் ஒரு பகுதியை படிப்பினையையே குருக்கேத்திரன் போர் எமக்கு உணர்த்தியுள்ளது.

இக்கூத்தில் முன்னரைப்பகுதியில் குருக்கேத்திரன் தஞ்சங்கோரி சிவன், எமன், இந்திரன் என்போரை நாடியலையும் சம்பவம் சித்திரிக்கப்பட பின்னரைப் பகுதியில் பஞ்சபாண்டவர்கள் துரியோதனன், சகுனி, கர்ணன், கிருஷ்ணர் ஆகியோருக்கிடையேயான யுத்தம் சித்திரிக்கப்படுகிறது. கூத்தில் இறுதியாக இடம்பெறும் கிருஷ்ணருக்கும் அருச்சுணனுக்கும் இடையேயான யுத்தம், குருக்கேத்திரன் திரௌபதிக்கிடையேயான சம்பாசனை என்பன குறிப்பாகச் சுட்டிக்காட்டத்தக்கதாக பகுதிகளாக இடம்பெறுகின்றன. இப்பகுதியில் இடம்பெறும் பாடல்களும் அவற்றின் அர்த்தப் பொலிவும் இடம்பெறுகின்றன.

கூத்துக்கலை மக்களின் கலையாகும். மக்களின் பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடனும் பின்னிப்பிணைந்த கலைவடிவம். கூத்து பழகுவது, அரங்கேற்றுவது, பல்வேறு பிரதேசகளிலும் மீள்களரியேற்றம் செய்வது என்பது யாவும் அதன் சமூகத் தொடர்பாடலுடன் தொடர்புடையவை.

ஒரு கிராமத்தில் கூத்துச்செயற்பாடு இடம்பெறுகிறது என்றால், அதன் பயிற்சிக்காலத்தில் இருந்து குறித்த ஊர்மக்கள், அயல் கிராமத்தவர், கூத்துடன் தொடர்புடைய குறித்த பிராந்தியத்தைச்  சேர்ந்தமக்கள் யாவரும் இணைந்து கொள்வதுடன் அவர்களின் முழுப் பங்களிப்பையும் வழங்குவார்கள். ஏனைய கலைகளுக்கு இல்லாத சிறப்பு,  கூத்தில் காணப்படுகின்றது. இத்தன்மையே  கூத்தின் அழகியல் அடிப்படைகள் தங்கியுள்ளது.

கூத்துக்கட்டும் கலைஞர்கள், அவர்கள் வாழ்வியல் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான ஒரு வருமான ஈட்ட மூலமாக கூத்தை பயில்வதுமில்லை, ஆடுவதுமில்லை. கூத்து செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது அவர்களின் வாழ்வியல் செயற்பாடுகளில் ஒருபகுதியாகவே கருதுகின்றனர். மக்களின் அழகியல் தேவை கூத்தின் மூலம் பெறப்படுகிறது. கூத்துத்தானது பல கிராமத்தவர்களும் இணைக்கும் பாலமாக அமைகின்றது.

சமூகங்களின் ஒற்றுமை, கூட்டிணை உள்ளவரையில் கூத்து உயிர்வாழும். கூத்தின் தொடர் உயிர்ப்புக்கான பின்புலத்தை வழங்குவதே கூத்துடன் தொடர்புடையவர்களின் கூத்து தொடர்பாக சிந்திப்பவர்களின் பணியாக இருக்கவேண்டும். ஏனெனின், கூத்து ஒரு சமூக ஒருமைப்பாட்டிற்கான கலையாகும் என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வினை, கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் இக்கூத்து அண்ணாவியார் வே.தம்பிமுத்து பயிற்றுவிக்கப்பட்டு, இவருக்கு உதவி அண்ணாவியாராக சீ.அலெக்ஸ்சாண்டர் செயற்பட்டார். கொப்பியாசிரியராக  வி.கோடீஸ்வரன் விளங்கினார். கூத்தர்களாக குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைந் சேர்ந்த சிலரும் விளங்கினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X