2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

'அன்பில் மலர்ந்த அமர காவியம்'

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான 'அன்பில் மலர்ந்த அமர காவியம்' திருப்பாடுகளின் காட்சி, நாளை 29ஆம் திகதி வரை யாழ். திருமறைக் கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இந்த அரங்க ஆற்றுகை நடைபெற்று வருகின்றது.

கலைக்கான பணியில் பொன்விழா ஆண்டில்; கால்பதித்துள்ள திருமறைக் கலாமன்றம், தனது தோற்றத்துக்கு காரணமாக அமைந்த திருப்பாடுகளின் காட்சியை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேடையேற்றி வருகின்றது.

இறைமகன் இயேசுவின் பாடுகளின் வரலாற்றை காலத்துக்கேற்ற சிந்தனைகளை உள்வாங்கி புதிய கோணங்களில் மேடையேற்றி வந்துள்ள திருமறைக் கலாமன்றம், இவ்வாண்டில் ஆரம்ப காலங்களில் மன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவிலும் நெறியாள்கையிலும் மேடையேற்றப்பட்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்த அன்பில் மலர்ந்த அமர காவியத்தை புதிய மாற்றங்களுடன் மீண்டும் மேடையேற்றியுள்ளது.

முதல் முதலாக 1969ஆம் ஆண்டில் உரும்பிராயிலும்இ 1971ஆம் ஆண்டு யாழ். கோட்டை பெரும் மதில் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு முற்ற வெளியிலும்இ பின்னர் 1995 ஆம் ஆண்டில் யாழ். திருமறைக் கலாமன்ற அரங்கிலும் 'அன்பில் மலர்ந்த அமர காவியம்' மேடையேற்றப்பட்டது.

இவ்வாற்றுகை 1971ஆம் ஆண்டில் வரலாறு காணாத சனத்திரளுடன் மேடையேற்றப்பட்டதும், பல்வேறு வரலாற்று சம்பவங்களை பதிவாக்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களுடன் மேடையேற்றப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சி, இலங்கையில் இடம்பெறுகின்ற மிகப்பெரிய அரங்க ஆற்றுகையாக அமைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தும் வருகின்றது.

இம்முறை அன்பில் மலர்ந்த அமர காவியம் திருப்பாடுகளின் காட்சிக்கான நெறியாள்கையை மன்றக் கலைஞரான இரத்தினசிங்கம் ஜெயகாந்தன் மேற்கொண்டுள்ளார்.  

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அதன் இலக்கணமாக இலக்கியமாக - இலட்சியமாக விளங்குகின்றது. இறைமகன் கிறிஸ்துவின் நிறைவான வாழ்க்கை, தந்தை மடியில் அன்பின் ஒளியாகத் இருந்தவர், வாழ்வின் படியில் அன்பின் வழியாகத் திகழ்ந்தவர், சாவின் பிடியில் அன்பின் பழியாக இறந்தவர், அன்பின் வடிவில் அன்பின் மொழியையே மலர்ந்தார்.

சத்தியத்தின் அருட்சாரம், சகவாழ்வின் திருச்சாரம், நித்தியத்தின் பொருட்சாரம் நிதம் அன்புக் குணச்சாரம் ஆவார்.
இன்பப் பெருக்காம் இறைவன் அன்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், அன்பின் வடிவம். அன்பேமயம். அவரது வாழ்வுதான் அன்பில் மலர்ந்த அமர காவியமாக மேடையேற்றப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X