2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

'வரலாறு என்பது அரசுகளின் வரலாற்றை பேசுவதாகவே நோக்கப்படுகின்றது'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


'சரித்திரம் அல்லது வரலாறு என்பது அரசுகளின் அல்லது ஆட்சியாளர்களின் வரலாற்றை பேசுவதாகவே நோக்கப்படுகின்றது. அது சான்றாதாரம்மிக்க வரலாற்று ஆவணமாகவும் பார்க்கப்படுகின்றது. ஆனால், உண்மையில் வரலாறு என்பது அதனை மாத்திரம் உள்ளடக்குவதல்ல. அது ஒட்டுமொத்த மக்களின்  அனுபவங்களைப் பற்றிய தொகுதியாகும். அங்கு வாழ்கின்ற மக்களின் செய்திகளையும்  நம்பிக்கைகளையும் புலப்படுத்துவது. அதனூடே வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த வரலாறு காத்திரமானதாக அமையும்' என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர்; கலாநிதி றமீஸ் அப்துல்லா தனது நூல் ஆய்வுரையில் தெரிவித்தார்.

சம்மாந்துறை கலாபிவிருத்திக் கழகத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூஷணம் எஸ்.எச்.எம்.முஸ்தபா எழுதிய 'சரித்திரம் கூறும் சம்மாந்துறை' வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்ட விழா இன்று (21)  ஞாயிற்றுக்கிழமை  சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'சம்மாந்துறையின் வரலாறு இன்னும் உருப்படியாக உருப்படவில்லை. ஆங்காங்கே உதிரியாக சில கட்டுரைகளும், தொகுப்புக்களும் சம்மாந்துறையின் வரலாற்றின் வெட்டுமுகத்தை வெளிப்படுத்துகின்றன.

2007 அன்று அமைச்சராக இருந்த மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல்  சம்மாந்துறையின் வரலாற்றை நூலுருப்படுத்த அயராது முயன்றார். அவரது திடீர் மரணத்தைத் தொடர்ந்து அம்முயற்சி கைகூடவில்லை. ஆனால் சம்மாந்துறை வரலாறு ஏதோ ஒரு வடிவில் வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் அது முழுமை பெறவேண்டும்.

அறுவடை, அன்னை, வெண்முத்து, அத்தப்லீக், ஈழத்தின் இன்னுமொரு மூலை, சாம்பலாக்கப்பட்ட சம்மாந்துறை, பிளம்பு, இனப்பிரச்சினை தொடர்பான இதழ், எம்.ஏ.அப்துல் மஜீட் நினைவு மலர், ஈழமேகத்தின் நினைவுச் சுவடுகள், ஏ.எச்.எம்.அப்துல்லாவின் நினைவு மலர், அறவழிக்கீதம், சென்னல் கிராம குடிநீர்திட்ட நினைவு மலர், ஹிஜ்றா பொதுச் சந்தை திறப்ப விழா சிறப்பு மலர், அம்பாறை மாவட்ட வரலாறு, அன்சாரிகள் இன்னும், கலைமுரசு, புதுப்பாதை, முள், கலைக்குரல், சம்மாந்துறை குடி வழிமுறை, சம்மாந்துறை அரசியல் வரலாறு, சம்மாந்துறை இடப் பெயர், பட்டறை, போன்ற நூல்களும் கட்டுரைகளும் இதுவரை வெளிவந்துள்ளன.

நூலாசிரியர் எஸ்.எச்.எம்.முஸ்தபா எழுதிய 'சரித்திரம் கூறும் சம்மாந்துறை' வரலாற்று ஆய்வு நூல் பலவழிகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. மிகச் சுருக்கமாக சம்மாந்துறையை அறிமுகப்படுத்துகின்ற இந்நூலில் இவ்வூரின் சிறப்புக்களும் நினைவுகளும் இழப்புக்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்க்கைமுறை, களியாட்டங்கள், விளையாட்டுக்கள் முதலானவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், ஷியாரங்கள், பாடசாலை வரலாறுகள் நோக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நூலின் மிகச் சிறப்பம்சம் விவசாய வரலாறும், உணவு முறையுமே விவசாய சொல்லாட்சி பாரம்பரியம் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

பொதுவாக 1950க்கு முற்பட்ட தகவல்களை இந்நூல் கொண்டுள்ளதால் சமகாலத் தகவல்களை சேர்க்காததால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க உதவியுள்ளது எனவும் நூலாசிரியர் எஸ்.எச்.எம்.முஸ்தபாவின் இந்தச் சேவை பாராட்டத்தக்க செயற்பாடாகும்' எனவும் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .