2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

முதலாம் ஆண்டு நிறைவில் தமிழ் எப்.எம். வானொலி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 2ஆம் திகதி வடக்கு, கிழக்குக்கான தனது அலைவரிசைகளின் ஒலிபரப்போடு ஆரம்பித்த தமிழ் எப்.எம் வானொலி, தனது முதலாவது வருடத்தைப் பூர்த்தி செய்து இரண்டாமாண்டில் காலடி எடுத்துவைக்கிறது. 
 
வன்னியில் 99.5, யாழ்ப்பாணத்தில் 99.7 அலைவரிசைகளில் தமிழ்.எப்.எம். முதல் ஒலிபரப்பை ஆரம்பித்தது. மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு சரியானதொரு தெரிவாக தமிழ்.எப்.எம். அமைந்தது. காதுகளை உறுத்தாத, நோகடிக்காத, இரசனைக்குரிய பாடல் தெரிவுகளோடு பரீட்சார்த்த ஒலிபரப்பில் ஆரம்பித்து, அடுத்து நிகழ்ச்சிகளையும் தரத்தொடங்கி வேகமாக மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை நிலை நிறுத்தியிருக்கிறது தமிழ்.எப்.எம். தற்போது 107.8 அலைவரிசையில் நாடு முழுவதுக்குமான அலைவரிசை விரிவாக்கம் நடைபெற்றுவருகிறது. இணையத்தளத்தில் www.tamilfm.lk எனும் முகவரியில் தமிழ்.எப்.எம். இன் ஒலிபரப்பைக் கேட்கமுடியும். 
 
காலை 5 மணிக்கு மணியோசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, சிகரம், சிநேகமுடன், விருந்தோம்பல், ஆறாம் அறிவு, அந்திவானம், பொக்கிஷம், ஆனந்தராகம் என்றவாறு வாரநாள் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. வார இறுதி நாள் நிகழ்ச்சிகளாக நேர்பட ஒழுகு, மக்கள் மன்றம், வணிகவளாகம், பொன்னூஞ்சல், ஆடுகளம், நெற்றிக்கண், இசை இருபது, நந்தவனம், சங்கமம், பூங்காற்று, ஒய்யாரவேளை, தாரகைத் தடாகம் ஆகியவை அமைவதோடு, வார இறுதிநாளில் அரை மணிநேர சிறப்பு நிகழ்ச்சிகளாக நூலகம், அக்கினிப்பார்வை என்பனவும் ஒலிபரப்பாகின்றன. தினமும் இரவு எட்டு மணிக்கு விளையாட்டுக்களின் தொகுப்பாக வரும் விளையாட்டு வலயம் ஒலிபரப்பாகிறது. தமிழ் எப்.எம். இன் பிரதான செய்தி தினமும் காலை 6.30, மதியம் 12 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 8.30 ஆகிய நேரங்களில் ஒலிபரப்பாகின்றது.
அனுபவம் வாய்ந்த ஒலிபரப்பாளரான பரணியின் தலைமையில் அனுபவமிக்க மற்றும் புதிய இளம் ஒலிபரப்பாளர்களோடு தனது நிகழ்ச்சிகளை வழங்கிவரும் தமிழ் எப்.எம். வெறுமனே பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிகளை மாத்திரம் வழங்காது, 'அறிவுசார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்' என்ற நோக்கோடு அத்தனை நிகழ்ச்சிகளிலும் மக்களுக்குப் பயன்தரக்கூடிய பல்வேறு விடயங்களையும் இணைத்து, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும் தன்னுள் உள்வாங்கி நிகழ்ச்சிகளை வடிவமைத்து. அவ்வப்போது மாற்றங்களையும் புதிய விடயங்களையும் உட்புகுத்தி வருவதால் தமிழ் எப்.எம் இன் நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சியான 'மக்கள் மன்றம்' மற்றும் சமகாலச் செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்படும் 'அக்கினிப் பார்வை' போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. 
 
நிகழ்ச்சிகளின் பெயரில் மட்டும் தமிழைக் கொண்டிராமல், கூடுமானவரையில் அழகிய தமிழில் அத்தனை ஒலிபரப்பாளர்களும் இயல்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்குவது தமிழ் எப்.எம் முக்கிய சிறப்பாகும். 
 
சகல வயதினரையும் கவரக்கூடிய விதத்தில் பழைய பாடல்களிலிருந்து புத்தம்புதிய பாடல்கள் வரை அத்தனை காலகட்டத்திலும் வெளிவந்த தமிழ்த்திரை இசைப்பாடல்களோடு, நம் நாட்டவர்களது பாடல்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை முக்கியமானது. அது மட்டுமல்லாமல், இலங்கைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் எந்தவொரு படைப்புக்கும் உடனடியாகவே களம் அமைத்து அவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதிலும் தமிழ் எப்.எம் தனித்துவமாகச் செயலாற்றிவருகிறது. 
 
பக்கச் சார்பற்ற, நடுநிலையான தமிழ் பேசும் மக்களுக்கு அத்தியாவசியமான செய்திகளை வழங்குவதோடு, இலங்கையின் அனைத்துப் பிரதேசத்து மக்களினதும் குரல்களையும் பிரதிபலிக்கும் களமாக தமிழ் எப்.எம் இன் செய்தி ஒலிபரப்பாகின்றது. 
 
ஒலிபரப்பை ஆரம்பித்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கும் தமிழ் எப்.எம், எமது மக்களுக்குத் தேவையான விடயங்களை அவதானத்தோடு வழங்கி எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளையும் படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.​











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .