2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும்: விமல் குணரத்ன

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் புரழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி, அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதைசொல்தல் கலை வளர்க்கின்றது. கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்றுவருகின்றது என மேல்மாகாணக் கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவித்தார். 
 
களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான 'ஆக்க பூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான ஆறுமாதச் செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் அண்மையில் அவரது காரியாலையத்தில் இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்படித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதில் 30 தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல இளம் மாணவ எழுத்தாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். தெரிவுசெய்யப்படும் மாணவ எழுத்தாளர்களுக்கான ஆறுநாள் நிபுணத்துவப் பயிற்சி செப்டெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறும். இலவசமாக இடம்பெறவுள்ள இப்பயிற்சிநெறி முடிவில் 30 கதைகள் தெரிவு செய்யப்பட்டு, அவை புத்தகமாக வெளியிடப்படும். 
 
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கல்விப் பணிப்பாளர் ' சமூக மாற்றம் தொடர்பான வித்தியாசமான கருத்துநிலைகளை மாணவச் சமூகம் கொண்டுள்ளது. துரதிஷ்டவசமாக அவை பெரும்பாலும் கருத்திற்கொள்ளப்படுவது குவைவு. உறுதியாக பாத்திரவார்ப்பு, கதைக் கருவாக்கம், கள உருவாக்கம், காட்சிப்படுத்தல் மொழிவெளிப்பாடு, பிரச்சினைகளை அடையாளங்காணுதல், முரண்பாடு மற்றும் முரண்பாட்டு நிலைமாற்றம் தொடர்பான பொறிமுறைகளை எழுத்தில் கொண்டுவருதல் போன்ற பல்வேறு அம்சங்களில் கரிசனை காட்டும் இப்பயிற்சி நெறியில் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட வளங்குறைந்த பாடசாலை மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். மாணவர்களை பெறுனர்கள் என்ற நிலையிலிருந்து மாற்றி கர்த்தாக்களாக ஊக்கப்டுத்தும் இத்தகைய செயற்றிட்டங்களுக்கு நாம் எப்பேதும் ஆதரவளிப்போம்' என்றார். 
 
செயற்றிடத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தமது கதைகளை கலந்தாலோசிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். செயற்றிட்ட முடிவில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விஷேட சாற்றுப்பத்திரங்களும் வழங்கப்படும். 
 
இச்செயற்றிட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தமது பாடசாலை அதிபரின் அத்தாட்சிப் படுத்தலுடனும், பெற்றோரின் விருப்ப வெளிப்படுத்தலுடனும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். 
எழுதற்றல், சிறுகதையாக்கம், கவிதையாக்கம் மற்றும் மொழித்திறன் ஆகியதுறைகளில் திறமைகளை ஏற்கெனவே வெளிப்படுத்திய மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 
விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட வேண்டும். விண்ணப்ப முகவரி -  ஆக்க பூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் பயிற்சி நெறி, தமிழ் பிரிவு, மாகாணக் கல்விப் பணிப்பாளர், மேல்மாகாணக் கல்வித் திணைக்களம், இலக்கம் 76, ஆனந்த குமார சுவாமி மாவத்த, க்ரீன் பாத், கொழும்பு 7. மேலதிக விபரங்களுக்கு 0776653694 எனும் இலக்கத்துடன் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .