2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கலை பண்பாட்டினை பேணுதல் தொடர்பாக நியதிச்சட்டம் உருவாக்கப்படும்

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கலை பண்பாட்டினை பேணுதல் தொடர்பாக வடமாகாண சபையினால் நியதிச் சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா புதன்கிழமை (21) தெரிவித்தார்.

வடமாகாண கலைஞர்களுடனான கலை, கலாசாரம் தொடர்பிலான கலந்துரையாடல் வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் புதன்கிழமை (21) காலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலை, பண்பாட்டு விடயங்களினை மேம்படுத்துவது தொடர்பாக  கலைஞர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன. 

அதாவது, ஆவணக்காப்பகம், கலைஞர்களுக்கு விருது வழங்கல், நாடகங்களை மேடையேற்றுதல், அண்ணாவிமார்கள் உருவாக்கம், மன்னார் பேசாலை பிரதேச உடக்குபாஸ் கூத்தினை பேணுதல், வாத்தியக்கலைஞர்களின் உருவாக்கம்  அறநெறிப்பாடசாலைகளின் உருவாக்கம், ஈழத்து தமிழ் ஆடல் வடிவத்தினை உருவாக்குதல், கலாசார மாதிரிக்கிராமம் உருவாக்கம், கவிதைத்தெகுப்பு வெளியிடுதல், உடுக்குக் கலையினை பேணுதல், இன்னியம் இசைக்குழுவினை உருவாக்குதல், ஆடிப்பிறப்பினை தேசிய விழாவாக கொண்டாடுதல், புத்தாக்க பாடலினை உருவாக்குதல், நடனம், பொம்மலாட்டம், காவடி, கரகம், குதிரையாட்டம் போன்ற கலை வடிவங்களினைப் பேணுதல், பாடசாலைகள் தோறும் மன்றங்களை உருவாக்குதல், மாவட்ட கலாசார கிளைகளின்  உருவாக்கம், கலாசார பேரவை அமைத்தல், அடையாயாள அட்டை கலைஞர்களுக்கு வழங்குதல், மாகாண கலைஞர் கௌரவிப்பு, கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம், ஓய்வூதியம்,  யோகக் கலையை பேணுதல் என்பன தொடர்பாக கலந்துகொண்ட கலைஞர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர்,

'கலை பண்பாட்டினை பேணுதல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக நியதிச்சட்டம் ஒன்று வடமாகாண சபையினால் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முயற்சியாக வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டப் பண்பாட்டுப்பேரவை உருவாக்கப்படும். 

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், தலா 5 கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மூலம் பண்பாட்டுப் பேரவைக்குரிய யாப்பு விதிகள் உருவாக்கப்படவுள்ளது.

இக்குழுவினூடாக எதிர்காலத்தில் மாவட்ட பண்பாட்டுப்பேரவை  அமைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கலாசார  திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி உஷா சுபலிங்கம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X