2024 நவம்பர் 02, சனிக்கிழமை

நாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்

Super User   / 2014 மார்ச் 26 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்
நாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்றது. நாடகமானது அந்த அந்தக் கால கருத்தியலுக்கு அமைவாக வெளிப்பாடடையும் தன்மையினை கொண்டு விளங்குகின்றது. கலை என்பது காலத்தின் கண்ணாடி என்னும் வகையில் நாடகமும் அதன் காலத்தை பிரதிபலிக்கும் கலைவடிவமாக விளங்குகின்றது. காலத்தினை பிரதிபலிக்கும் வகையில் வெளிப்பாடடைகின்ற கலைவடிவங்கள் காலத்தால் நீடித்து வாழ்கின்றன. அவ்வகையில் நாடகக் கலையும் தன் பங்கினை தேவை கருதி ஆற்றுகின்ற கலைவடிவமாக விளங்குகின்றது.

நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப்பிணைந்துள்ள கலைவடிவமாகும் இயற்கையிலிருந்து இயற்கையின் சூட்சுமங்களை தேடல் செய்து அவற்றுக்கிடையிலான காரணகாரியத் தொடர்புகளை விளக்கிக்கொண்டு மனிதகுல மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிற துறைகளைப் போல நாடகக் கலையும் உயிர்த்துடிப்புள்ள மனித உரு மூலம் மனிதனது உணர்வுகளுக்கு அவன் சார் நடத்தைகளுக்குமான தொடர்புகளை சரியாக புடம் போட்டு அவன் வாழ்கின்ற சமூகத்தின் பின்புலத்தினை உள்வாங்கிக் கொண்டு கலைக்குரிய வளர்ச்சியோடு அதனை விளக்கியும் வியாக்கியானித்தும் மனித குலத்தை வளர்ச்சி பெறச்செய்கின்றது.


மனிதனை மனித உரு மூலம் விளங்கிக் கொள்வதற்கு இக்கலை பயன்படுவதனால் பிற கலைகளை விட நாடகக்கலையானது மனிதர்களோடு மிக நெருங்கிய இறுக்கமான ஊடாட்டமுள்ள கலைவடிவமாக விளங்குகின்றது. இவ் நாடகக் கலைமூலம் சமுதாய விழிப்புணர்வு சார் செயற்பாடுகள் சமூக மகிழ்வழிப்பு செயற்பாடுகள் போன்றவற்றினை பயனுள்ள வகையில் சமூகப்பயன்பாடுடையதாக ஆற்றமுடிகின்றது. இக்கலைவடிவமானது மிகவும் சக்கி மிக்க கலைவடிவமாக விளங்குகின்றது. பிரதேசம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அவற்றினுடைய பண்பாட்டு பின்புலங்களினை பிரதிபலிக்கின்ற வகைளிலும் சமூகத்தினுடைய தேவையினை நிறைவு செய்கின்ற வகையிலும் நாடகக் கலையானது பல்வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது.


சக்தி மிக்க கலைவடிவமான நாடகக் கலையின் சிறப்புக்கருதி வருடாந்தம் பங்குனி மாதம் 27 ஆம் நாள் உலக நாடக தினமானது  சிறப்பாக பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக நாடக தினமானது ஏன் ஆரம்பிக்கப்பட்டது அதன் நோக்கம் என்ன என்பது பற்றி சிந்தித்தல் ஒவ்வொரு அரங்காளிகளினதும் முக்கிய கடனாக விளங்குகின்றது. இவ் உலக நாடக தினத்தின் நோக்கம் கருதி சிந்தித்தல் வேண்டும்.


1961 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் சர்வதேச அரங்க அமைப்பின் 9 வது ஒன்று கூடலாக கெல்சிங், வியன்னா ஆகிய இடங்களில் சர்வதேச அரங்கத்திட்டம் உருவாக்கப்பட்டது. சர்வதேச அரங்கத்திட்டம் என்னும் சொல்லுக்கு மாற்றீடாக அர்விகிவிமா (யுசஎமைiஎiஅயய) என்பவரால் உலக நாடக தினம் என்பது முன்மொழியப்பட்டது. எனினும் 1962 இல் பரிசில் பங்குனி 27 ஆம் திகதியே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நூற்றிற்கு மேற்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இவ் உலக நாடக தினமானது மக்களிடையே சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆற்றுகைக் கலைகளின் சக்தியை மக்கள் முன்னிலையில் வெளிக்கொண்டு வருவதற்கு அரங்கக் கலைஞர்களாலும் மக்களாலும் இவ் உலக நாடக தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக நாடக தினமானது உருவாக்கப்பட்டதன் நோக்கினை நிறைவு செய்யும் வகையில் சர்வதேச ரீதியில் இவ்விழாவானது முக்கியத்துவம் கருதி கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக நாடக தினமானது நடைபெறுவதன் நோக்கமாக பின்வரும் அம்சங்களினை குறிப்பிடலாம்

1.   ஆற்றுகைக்கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பயில்வையும் சர்வதேச ரீதியில் பரிமாறிக்கொள்ளவும் ஊக்குவித்தல்

2.   அரங்கக்கலைஞர்களுக்கு இடையில் கூட்டுணர்வை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் ஆக்கத்திறன் மீதான அக்கறையை விருத்தி செய்தல்

3.   இக்கலைப்படைப்பு மீதான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வுடன் உருவாக்குதல்

4.   இந்நிகழ்வில் பங்கு கொள்வதன் மூலம் மக்களிடையே ஆழமான புரிந்துணர்வுக்கும் பங்கு கொள்ளலை வலுப்பெறச்செய்வதற்கும் முனைப்பூட்டுதல் ஆகிய அம்சங்களினை கொண்டுள்ளது.

கால தேச செய்திப்பரிமாற்றம் பொது விடயங்களை கலந்து ஆலோசிப்பதற்கான பேச்சு வழக்கு முறை, வட்ட மேசை மாநாடு போன்ற வேறுபட்ட முயற்ச்சிகளுக்காக சர்வதேச விழாவாக ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் வரை இவ்விழா கொண்டாடப்படுகின்றது. இதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் சான்று பகர்கின்றன.

இவ்வகையில் அரங்க ஆர்வலர்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற உலக நாடக தினமானது எமது நாட்டைப் பொறுத்த வரையில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வலி.தெற்கு பிரதேசசபையின் சுன்னாகம் பொது நூலகமானது 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உலக நாடக தினத்தை வருடாந்தம் சிறப்பாக கொண்டாடிவருகின்றது.  புத்தாக்க அரங்க இயக்கம் திருமறைக்கலாமன்றம் போன்ற நிறுவனங்களும் நாடகதினத்தினை கொண்டாடிவருகின்றன. இதே போன்று சமூக நிறுவனங்கள் அரங்கு சார் நிறுவனங்கள் பாடசாலைகள் போன்றனவும் தமது இயலளவிற்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் இவ் உலக நாடக தினத்தை சிறப்பாக கொண்டாடிவருகின்றன. இவ் உலக நாடகதின நிகழ்வுகளின் ஊடாக பிரதேச நாடக வடிவங்கள் பேணப்படுவதுடன் சமூகத்தின் தேவைகருதிய விழிப்புணர்வு செயற்பாடுகளையும் நாடகம் என்கின்ற கலைவடிவத்தின் ஊடாக அரங்க நிறுவனங்களும் அரங்காளிகளும் மேற்கொண்டு வருகின்றமை காலத்தின் தேவைகருதிய சிறப்பிற்குரிய விடயமாக விளங்குகின்றது.

சமுதாய வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் கலை வடிவமான நாடகக்கலையின் சிறப்பினை உணர்த்தும் தினமாக உலக நாடக தினமானது அமைகின்றது. இவ்வகையில் எமது பிரதேசத்தைப் பொறுத்தவரை சிறப்பாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த தினமாக உலக நாடக தினமானது விளங்குகின்றது. இதனடிப்படையில் நாடகக்கலையின் வளர்ச்சி கருதியும் தொடர் இயங்குதலின் அடிப்படை கருதியும் ஆற்றுகைக் கலைஞர்களாலும் அரங்க ஆர்;வலர்களாலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய முக்கிய தினமாக உலக நாடக தினமானது அமைகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .