2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

மலையக தேசிய அரங்கிற்கான பயணம் 'மடையில்' ஆரம்பம்

Kanagaraj   / 2013 நவம்பர் 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


மனித சாரத்தின் அடையாளங்களில் பாரம்பரிய கலைவடிவங்களுக்குரிய இடம் தவிர்க்க முடியாது என்பது சமூகவியலாளர்களின் பிரதான கருதுகோளாக்கமாகும்.

மக்களின் வாழ்வியல் ஆதாரமாக துலங்குபவையாகவும் சமகால உலக சவால்களுக்கான தீர்வுப்பொறிமுறையும் அவைதாம் எனும் எண்ணப்படிமத்தின் செயல்வடிவமாய் அண்மையில் இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் நாட்டாரியல் மாநாடு – 2013 திருகோணமலையில் நடைபெற்றது.

திருகோணமலை, சிவானந்தா தபோவனத்தில் கடந்த ஒக்டோபர் 25, 26 மற்றும் 27 திகதிகளில் மடை எனும் மகுட வாசகத்தில் பாரம்பரிய கலைகளின் கொண்டாட்டமும் ஆற்றுகையும் காட்சிப்படுத்தல்களும் காத்திரமான உரையாடல்களும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், புத்தளம், அம்பாறை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் சுமார் 200 மேற்பட்ட கலைஞர்கள் வருகைதந்திருந்தனர்.

 பாரம்பரிய ஆற்றுகைகளாக மகிடிகூத்து,பறைமேளக்கூத்து, கப்பிறிஞ்ஞா, வேடுவர் சடங்கு, பப்பிரவாகன்கூத்து,  கோவலன்கூத்து, வடபாங்கு, தென்பாங்கு, வாசாப்பு தென்மோடி, சிலம்பாட்டம், களிகம்பு என்பவற்றை வெளிப்படுத்தினர்.  இதன் சிறப்பம்சமாக மலையகத்தை அடையாளப்படுத்தும் விதமாக கூத்தியல் கலைக்குழு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

மலையக தேசிய கலை வடிவங்களான காமன்கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர்சங்கர், கெங்கையம்மன், நல்லதங்காள், கரகாட்டம், கும்மி, கோலாட்டம், மலையக நாட்டார் பாடல்கள், கோடாங்கி, தப்பாட்டம் மற்றும் சமய கரணங்கள் என்பவற்றை நிகழ்த்திக்காட்டினர்.

மலையகத்தின் பல பாகங்களிலும் இருந்தும் கலைஞர்கள் கூத்தியல் கலைக்குழுவில் உள்வாங்கப்பட்டு அனுபவமிக்க ஆளுமைகளின் வழிநடத்தலுடன் மலையகத்தின் தேசிய அரங்கிற்கான குரலாக ஒலிப்பது அதன் இலட்சியமாகும்.

மடை பாரம்பரியக் கலைகளின் கொண்டாட்ட நிகழ்வின் முதல் நாளான  25 ஆம் திகதியன்று இந்து சமய கலாசார திணைக்கள ஆராய்ச்சி அலுவலகர் திருமதி தேவகுமாரி ஹரன் தலைமையில் பிரதம அதிதியாக தமிழ் நாடு மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலை துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இதனையடுத்து பிரதம அதிதிகளின் கருத்துக்களும் கலைஞர் கௌரவிப்பும் அறிமுக நிகழ்வும் இடம் பெற்றது.கலைஞர் இடையே அர்த்தமுள்ள கற்றலும் பெற்றலுமான பகிர்தல் முக்கிய அம்சம் இதில் மலையகத்தை அடையாளப்படுத்தும் கூத்தியல் கலைக்குழுவின் மூத்த கலைஞர் கௌரவிப்பில் உள்ளம் நெகிழும் சம்பவமாக தலைமுறையாக மக்களை மகிழ்வித்து கலை பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தவர்களை பொதுநிலைப்பட்ட மேடையில் கௌரவிக்கப்பட்டமையானது தமக்கான தேசிய மட்டத்திலான அங்கிகாரமாக உளமார நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து பாரம்பரிய கலைஞர்களுகிடையிலான அனுபவங்கள் நிபுணத்துவங்களின் பகிர்தலும் ஆற்றுகைகளும் இடம்பெற்றன.மாலை 5.00 மணிக்கு பிறகு திருமலை ஓசில் மைதானத்தில் மட்டக்களப்பு சந்திவெளி கலைஞர்களின் மகிடி கூத்தும் ஆற்றுகையும் நகர கடற்கரையில் பாரம்பரிய பறை வாத்திய இசை களிகம்பு கபறிஞ்ஞா நிகழ்வுகளும் தபோவன திறந்த அரங்கில் மலையக மக்களின் சடங்கு நிலை கூத்தான காமன் கூத்து சு.முருகேசு வழிநடத்தலில் இடம்பெற்றது.


கரகாட்டம், மலையக நாட்டாறியல் பாடல்கள், கும்மி, கோடாங்கி என்பன பலரின் பெரும் வரவேற்பை பெற்றது.முல்லைத்தீவின் கோவலன் கூத்து யாழ்ப்பாணத்திலிருந்து பப்பிரவாகன் கூத்தும் தொடர்ந்து இரவு 11.30 வரை நிகழ்ந்தமை குறிப்பிடதக்கது.

இரண்டாம் நாள 26 ஆம் திகதி நிகழ்வு காலை 9.30 தொடக்கம் 12.30 வரை கலைப்பயில்வுகளும் சவால்களும் எதிர்கொள்ளல்களும் எனும் தலைப்பில் முதல் அமர்வு இடம்பெற்றது.இரண்டாம் அமர்வு மு.ப 1.30 தொடக்கம் 4.00 மணி வரை  பாரம்பரியக்கலைகள் பயில்வுகளும் புத்தாக்கங்களும் தொடர்பாக கலைஞர்களிடையே பகிர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.மாலை 5.00 தொடக்கம் 6.30 வரை பிரதேச மட்டத்திலான ஆற்றுகை இடம்பெற்றன.மாலை 7.00 தொடக்கம் 9.00 வரை மலையகத்தின் பாரம்பரிய கலை ஆற்றுகைளான அருச்சுனன்தபசு பி.கோபாலின் வழிநடத்தலில் இடம்பெற்றது.

தொடர்ந்து நல்லதங்காள் மற்றும் சு.நவனீதனின் கோடாங்கி அத்துடன் மலையக நாட்டார் பாடலின் விளைவாக எழுந்த வீதிப்பாடல்கள் இடம் பெற்றமை முக்கிய அம்சமாகும்.மேலும் கும்மி கெங்கையம்மன் பாடல்கள் மலையக சமய கரண நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.


கூத்தியல் செய்தித்தாள் வெளியீடு

மூன்றாம் நாள் நிகழ்வில் 27.10.2013 காலை 9.30 தொடக்கம் 12.30 வரை முதல் அமர்வில் சடங்குகள்,பத்தாசிகள், கலைகள் தொடர்பாகவும் இரண்டாம் அமர்வில் அண்ணாவியம்.பனுவலாக்கம்.வாத்தியகருவிகள் ஏற்றுதல் இணக்குதல் மற்றும் ஆடை,அணிகள்,ஒப்பனை,அலங்காரங்கள் தொடரபான கருத்தாடல்களை மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன் தலைமையில் இடம்பெற்றது.

மதியம் 2.00 மணியளவில் தபோவனத்தின் தாமரை தடாகத்தின் மத்தியில் அமைந்த பாரம்பரிய கண்காட்சி கூட அரங்கில் மலையக கலை இலக்கியத்தின் வரலாற்று பெறுமதிமிக்க நிகழ்வு மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன்  மற்றும் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் கூத்தியல் செய்தித்தாள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கலைக்குழு உறுப்பினர் வே.உதயசேகர் தொகுத்து வழங்க வே இராமர் நிகழ்வின் அறிமுகத்தை வழங்க அதன் திருமதி இ.ஜெயநந்தினி ஆங்கில மொழியாக்கம் செய்தார்.


மலையக இணைப்பாளரான சு.பிரேம்குமார் தமது கருத்துரையில்

கூத்தியல் கலைக்குழு மற்றும் கூத்தியல் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் தமிழ் நாட்டாரியல் நிகழ்வின் மலையக இணைப்பாளரான சு.பிரேம்குமார் தமது கருத்துரையில்...

இன்றைய நுகர்வு கலாசாரத்தின் தாக்கமானது பாரம்பரிய தேசிய கலை வடிவங்களை வர்த்தக கலை பண்டமாக மீள் உற்பத்தி செய்து நவ உலகமயமாதலுக்கு ஏற்ற சமூக கட்டமைப்பினை உருவாக்கி ,தேசிய இனக்குழுமத்தின் பண்பாடு, பொருண்மியம், மொழி என்று சகல பொக்கிசங்களையும் தவிடு பொடியாக்குவது அதன் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு ஆகும்.

மலையக தமிழ் தேசிய கட்டுமானத்தில் அதன் பிணைப்புக்குரிய வாழ்வியலின் பாரம்பரிய கலை வடிவம் மூலமே விடுதலைக்கான பொறிமுறைகளையும் இருப்புக்கான கூறுகளையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. தேசிய இனங்களின் கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம் அத்தகைய வெற்றியடைந்த மரபுகளை கட்டமைக்கலாம் என்பது கூத்தியல் கலைக்கழுவின் மறுக்க முடியாத நம்பிக்கை.தமிழ் நாட்டாரியல் மாநாட்டினை அதற்கான சிறந்த களமாக கொண்டு நம்பிக்கை தரும் முயற்சிகளில் பங்காளிகளாக மாறுவோம்.என்றும் கூத்தியல் செய்தித்தாள் மலையக கலை இலக்கியத்தில் மட்டுமல்லாது உலகார்ந்த மக்கள் கலை இலக்கியத்தின் கலை இலக்கிய ஆயுதமாக செயற்படும் எனவும் எதிர்காலத்தில் கலாசார நிருபர்களை கொண்டு கூத்தியல் செய்தித்தாளினை புதிய பரிமாணத்திற்கு வடிவமைத்தல் தொடர்பாக  பதிவு செய்தார்.

தொடர்ந்து கூத்தியல் செய்தித்தாளினை மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன் உத்தியோக ரீதியாக வெளியிட்டு வைத்தார்.முதல் பிரதியை கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் பேராசிரியரிடம் பெற்றுக்கொண்டார் தொடர்ந்து பிரதிகளை அரங்க செயற்பாட்டாளர் து.கௌரீஸ்வரன், மன்னார் அரங்க  செயற்பாட்டாளர் சு.உதயன் , ஓவியர் சு.நிர்மலவாசன், கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் செல்வி எஸ்.கலைமகள்  மற்றும் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு அம்பாறை கலைஞர்கள் சார்பிலும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.


பேராசிரியர் பி.டி நஜிமுதீன் கருத்துரை

மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன் தமது கருத்துரையில் கூத்தியல் செய்தித்தாள் முயற்சி சிறப்பானது என்றும் இப்பதிவு இணையத்தின் ஊடாக உலகளாவிய மக்கள் கலை இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் என்று மனதார பாரட்டினார் கூத்தியல் குழுவின் நன்றி பாரட்டுதலுடன் நிகழ்வின் நிறைவு வைபவம் மாலை 5.00 மணிக்கு தபோவனத்தில் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தினி நாவுக்கரசன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் பி.டி நஜிமுதீன் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் கலாசார உத்தியோகத்தர்கள் கலைஞர் பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பின் மகிடிகூத்து பறைமேளக்கூத்து பறங்கியர் கபறிஞ்ஞா பத்தாசிகள் சடங்கு வேடுவர் சடங்கு மன்னார் கலைஞர்களின் வடபாங்கு தென்பாங்கு வாசாப்பு உள்ளிட்ட மன்னார் மாலை ஆற்றுகையும் முல்லைத்தீவு கலைஞர்களின் கோவலன் கூத்தும் மற்றும் சிலம்பாட்டம் இறக்காமத்தின் களிகம்பு மலையகத்தின் தப்பிசை கரகாட்டம், உடுக்கடி மற்றும் அ.பழனியாண்டி வே.உதயசேகர் வழிநடத்தலில் மலையக மக்கள் கலைகளின் மணிமகுடமான காமன்கூத்து இடம் பெற்றது.


மன்மதனாக  ந.சாம்பசிவமூர்த்தி ரதியாக வே.சித்திரசேகர் தூதனாக ப.விஜயகோபால் குறத்தியாக ப.கோபால், குறவனாக க.ஜோர்ஜ் மற்றும் தப்பிசை கலைஞர்களாக வே.இராமர்,சு.கிட்ணன் கூத்தியல் கலைக்குழுவின் ஏற்பாட்டாளர் சு.பிரேம்குமார் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்போடு அரங்கு நிறைந்த கரகோசம் பாரட்டுதல்களுடன் ஆற்றுகை செய்யப்பட்டது.

பிரதம அதிதிகளின் பிரசன்னத்தில் கருத்துரைகளில் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தினி நாவுக்கரசன் மடை என்னும் பாரம்பரிய கலைகளின் திருவிழா நிகழ்விற்கான எண்ணப்படிமத்தின் முதன்மையானவர் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கரை விதந்துப்பாரட்டினார்.அத்துடன் அனைத்து பிரதேச கலை செல்வங்களையும் பாதுகாக்கும் கலைஞர் பணியை போற்றினார்.குறிப்பாக மலையகத்தின் காமன்கூத்து தம்மை வியக்க வைத்து விட்டது என பாராட்டினார்.


மடை சிறப்பு மலர்

தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் திரு.பி.டி நஜிமுதீன் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் கலாசார உத்தியோகத்தர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.தொடர்ந்து மடை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தினி நாவுக்கரசன் வெளியிட்டு வைத்து அதன் பிரதிகளை  மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டாரியல் துறை பேராசிரியர் திரு.பி.டி நஜிமுதீன் கிழக்கு பல்கலைகழகத்தின் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச ரீதியிலான இணைப்பாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கினார்.மடை எனும் பதிவில் நிகழ்விற்கான எண்ணம் இந்து கலாசார திணைக்களத்தின் செய்தி நிகழ்விற்கான நிகழ்ச்சி நிரல் கலைஞர் விபரத்திரட்டு பாரம்பரிய கலைகள் தொடர்பிலான அறிமுக குறிப்பு இடம்பெற்றிருந்தன.

இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் மலையக வரலாற்றில் கலைஞர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுதல் பதிவுகள் இல்லாத சந்தர்ப்பத்தில் கலாசார திணைக்களத்தின் கீழ் மடை எனும் மலரில் மலையக கலைஞர் பதிவு இடம் பெற்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடமாகும் இதன் அனைத்து பெருமையும் கூத்தியல் கலைக்குழுவை சாரும்.மலையக  வரலாற்றில் எத்தனையோ கலைப்பயணங்கள் அது எத்தனையோ நோக்கங்களை கொண்டது சிலர் பொருளாதார நோக்கம் சிலர் தம்மை வெளிப்படுத்த கலைஞர் மேல் சவாரி செய்ய பயன்படுத்தல் என்பவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் கலையை நேசிக்கும் தரப்பினரை கொண்டு மடை என்னும் பாரம்பரியங்களின் திருவிழாவானது இன்றைய உலகமயமாதல் சூழலில் பல சவால்களுக்கு மத்தியில் முன்னேடுத்த நிகழ்வில் பங்களிப்பு வழங்கி மலையக தேசிய அரங்கிற்கான புதிய உத்வேகத்தையும் இளம் இரத்தத்தையும் பாய்ச்சியது என்பது அனுபவமிக்க உண்மையாகும் வரலாற்றுமிக்க இந் நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மலையக கலைஞர்களையும் வரலாறு என்றும் நினைவு கூறும்.

கலைப்பயணத்தின் தொடர் நிகழ்வாக அண்மையில் 09.11.2013 அன்று கவரவில பாடசாலை மண்டபத்தில் கூத்தியல் கலைக்குழுவின் ஏற்பாட்டில் கலைப்பயண அனுபவ பகிர்வும் விருந்துபசார நிகழ்வும் இனிதே இடம் பெற்று நிறைவடைந்தது.




You May Also Like

  Comments - 0

  • சு.பிரேம்குமார் Tuesday, 26 November 2013 04:46 PM

    மலையக தேசிய அரங்கிற்கான ஆரோக்கியமான கருத்துக்கள் எதிர்பார்கின்றோம்.
    நன்றி
    கூத்தியல் ஆசிரியர் குழு .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X