2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலவச வானொலி நாடகப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தல், வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளுக்குரிய தீர்வாக வன்முறையைக் கையாழும் கலாசாரத்தை இல்லாதொழித்து உரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல் மற்றும் சகவாழ்வை மேலோங்கச் செய்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்ட வானொலி நாடகப் பயிற்சி நெறியொன்றை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

மேடை மற்றும் வானொலி நாடகப் பிரதியாக்கம், நடிப்பு, சமூக உரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் வன்முறைக்கு எதிரான கருத்தாக்கங்களை கலைத்துவமாக வெளிப்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகள் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பமாகவுள்ள இப்பயிற்சிநெறி முற்றிலும் இலவசமானது. தமிழ், சிங்களம், மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 12 இளைஞர் யுவதிகள் மாத்திரம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தகுதிவாய்ந்த 35 வயதக்குக் குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு தெரிவின் போது முன்னுரிமை வழங்கப்டும்.

வன்முறைக் கலாசாரத்தை இல்லாதொழித்து இனங்களுக்கிடையில் சகவாழ்வையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும் 20 நாடகப் பிரதிகள்; இப்பயிற்சிநெறியின் போது எழுதப்படும். அவற்றில் பத்து அம்பாறை மாவட்டத்திலும் ஏனைய பத்து நாடகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் நடித்துக் காட்டப்படும். தெரிவு செய்யப்படும் கிராமங்களில் நடமாடும் கலையகங்களும் ஆற்றுகை தளங்களும் தயாரிக்கப்படும்.

கலையகத்துக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வானொலி நாடகத்தை மக்கள் வாழும் சமூகத்திற்குக் கொண்டு சென்று, அவர்கள் மத்தியில் அதனை நடித்துக்காட்டி, குறித்த நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பினை மக்களுக்கும் உருவாக்கிக் கொடுப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் நாடகங்கள் இடம்பெறும் போது அதன் உள்ளடக்கம் மற்றும் நாடகத்தில் இடம்பெறும் வாழ்வியல் அனுபவம் என்பன தொடர்பாக உரையாடும் சந்தர்ப்பமும் மக்களுக்கு வழங்கப்படும்.

அம்பாறை மாவட்டத்தையில் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சென்றல் கேம்ப், நிந்தவூர், பொத்துவில், வீரமுனை, நாவிதன்வெளி, திருக்கோயில், ஆலையடி வேம்பு, வைக்காலை, பதியதளாவை ஆகிய கிராமங்களில் அளிக்கைகள் இடம்பெறும். அதேநேரம், மட்டக்களப்பு மவாட்டத்தில் ஏறாவூர், ஓட்டமாவடி, செம்மண், மீராவோடை, காத்தான்குடி, உன்னிச்சை, வாகரை, களுதாவெளி, வாழச்சேனை, கல்குடா, கருவாக்கேனி மற்றும் கிராண் ஆகிய கிராமங்களிலும் நாடக அளிக்கைகள் இடம்பெறும். 

தெரிவு செய்யப்பட்ட 12 இளைஞர் யுவதிகள் கிராமங்கள் தோறும் சென்று நடிக்கும் போது அவரக்ளுக்குரிய தங்குமிடம், போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவற்றுக்கான செலவினங்களை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ஏற்றுக்கொள்ளும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் தகுதிவாய்ந்த இளைஞர் யுவதிகள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிப்போர் info@ldjf.orgஎன்ற முகவரியை பயன்படுத்தலாம்.

தபால் மூலம் விண்ணப்பிப்போர் செயற்றிட்ட அதிகாரி, கிழக்கு நாடகச் செயற்றிட்டம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம், இலக்கம் 8/5, லியனகே மாவத்த, நாவல என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம். தொலைபேசி அழைப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .