2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு: ஒரு சுருக்கமான வாசிப்புக் குறிப்புக்கள்

A.P.Mathan   / 2013 மே 19 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம். சி. ரஸ்மின் 
 
தனது சிறுகதைகளை தொகுத்து முஸ்டீன் அண்மையில் ஹராங்குட்டி எனும் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்களின் அண்மைக்காலத் தொகுப்புக்களில் இது தனித்துவமான ஒன்று. இது முஸ்டீனின் முதலாவது சிறுகதை தொகுப்பு முயற்சி. மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் எனும் தன்னுடைய கவிதைத் தொகுப்பினை அடுத்து வெளிவந்துள்ளது. இதில் மொத்தமாக 12 கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் பேசுபொருள் தொடர்பாக எனது அவதானத்தை பதிவு செய்வதாகவே இக்குறிப்பு அமைகின்றது. மாறாக, இது விமர்சனமோ அல்லது அறிமுகமோ அல்ல. ஒரு தொகுதி என்ற அடிப்படையில், பேசுபொருளாலும் அது பேசப்பட்ட முறையாலும் முக்கியத்துவம் பெறும் தொகுதியாகவே நான் ஹராங்குட்டியைப் பார்க்கின்றேன். 
 
மற்றுமொரு சிறுகதையாளனின் பிரவேசம் என்பதற்கு அப்பால் இந்தத் தொகுப்பு, முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார இருப்பினை தனித்துவமான பார்வையுடனும் தர்க்கரீதியான சிந்தனையுடனும் நோக்குவதற்கு ஒருவன் வெளிக்கிளம்பியிருக்கின்றான் என்ற நம்பிக்கையை தருகின்ற தொகுப்பாக நோக்கலாம். சிறுகதையின் அங்கலட்சணங்களை ஒப்புவித்து கதை எழுத முற்படும் ஒருவன் என்றில்லாம், ஒரு குறிப்பிட்ட அரசியல் யுகத்தில் ஒரு சமூகம் எவ்வாறு அழுததோ, எவ்வாறு தவித்ததோ, எவ்வாறு போராடியதோ மற்றும் எவ்வாறு நசுங்குண்டு போனதோ அதை அப்படியே சித்திரிக்கின்ற ஒரு எழுத்தாளனாக முஸ்டீன் பார்கப்படலாம்.
 
தான் பார்த்தவற்றையும் பதிவு செய்தவற்றையும் அவ்வாறே கதையாக்கியுள்ளார். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை வெவ்வேறு தளங்களில் பேசப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை யாரும் தரிசிக்காத ஒரு கோணத்தில் பிரதிபலித்துள்ளார் முஸ்டீன். 
 
சமூகத்தின் விடிவுக்காக போராட நினைக்கும் உண்மையான ஆனால் சமானியத் தலைவர்கள், சமூகத்தின் நற்பெயரை முதலீடாக்கி, அதில் வாழ்வு நடத்தும் வேறு சிலர், ஓர் அரசியல் பொருளாதார மற்றும் சமூகச் சிறையிலிருந்து தடைச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு சுயாதிபத்தியத்துடன் வெளிப்பட்டு நிற்கத் துடிக்கும் ஒரு சமூகம், சமயப் பணியினை ஒரு சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளும் மற்றும் சிலர் மற்றும் எனது சமூதத்தின் குரல்வளையோரம் மண்டியிட்டு அது நசிபடும் சத்தத்தைக் கூட நான் ஒலிப்பதிவு செய்வேன் என்று பிடிவாதமாக நிற்கும் ஓர் இளைஞன் போன்றோரைச் சூழவே இத்தொகுப்பு பின்னப்பட்டுள்ளது. 
 
ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று சமூகத்தின் விடிவின் மீது உண்மையான நாட்டம் கொண்ட அடிநிலை அல்லது சாமானிய தலைவர்களை கதைமாந்தர்களாக முன்னிறுத்துவதாகும். காட்டிக்கொடுத்தவன் (முஸ்தபா கொமைனி), பேயன் (ரபாய்), கேணலின் வாக்குமூலம் (கேணல் லத்தீப்), புஹாரி (புஹாரி), முகத்துக்கு முகம் (சித்தீக்) போன்ற கதைகளை இத்தகைய பண்புக்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்வியறிவால் குறைந்தாலும், சமூகமயமாதலில் முதிர்ச்சியற்றவர்களாக இருந்தாலும், சமூக கலாசாரா போக்குகளுடன் சமரசம் செய்துகொள்ளும் இயலுமையில் குறைந்தவர்களாக இருந்தாலும் சமூகத்திற்காக வாழ வேண்டும் என்று கருதுகின்ற புதுமையான தலைவர்களை இந்த நூல் முன்னிறுத்துகின்றது. கதைகளை வாசிக்கின்றபோது, முஸ்லிம் சமூகத்தின் இன்றையத் தலைமைத்துவத்தை சூழ்ந்திருக்கின்ற சுயநலவாத தாகம் மிகவும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்றால் என்ன, சமூகத்தை நேசிப்பதற்கான அரசியல் என்றால் என்ன என்பதை மறுபடி மறுபடி விசாரிக்கத் தூண்டுவதாக இத்தகைய கதைகள் அமைகின்றன. இது ஹராங்குட்டி தொகுப்பில் தொகுப்புக்கான முக்கிய சிறம்பம்சங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு. 
 
சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற உளப்பூர்வமான பிரக்ஞை இத்தகைய தலைவர்களை ஆற்றல் குன்றாதவர்களாக போராட்ட உத்தி மிக்கவர்களாக, மனிதாபிமானத்தின்  நம்பிக்கையுடையவர்களாக காட்டியிருப்பது ஓர் ஒடுக்கப்பட்ட வரலாற்று புருசர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பதாக அமைகின்றது. கேணல் லத்தீப் முகத்துக்கு முகம் போன்ற கதைகளை ஒரு சமூகம் அதன் முன்னேற்றத்தின் பேரில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் மௌனித்திருப்பதால் ஒடுக்கப்பட்ட வரலாற்றை இலக்கியமாக் காட்டும் கதைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். 
 
கிழக்கிலங்கையில் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று உயிரை கையில் எடுத்துக்கொண்டு உழைத்த மேற்சொன்ன தலைவர்கள் குற்றமிழைத்து விட்டோம் என்று வருந்துவதையும் அவர்களின் இலட்சியத்தை முதலீடு செய்து பிரதேச அரசியல் வாதிகளும் மேற்தட்டு முதலாளிமார்களும் தமது இருப்பினை முன்னிறுத்த முன்பட்டதையும் அனேகமான கதைகள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கதைகள் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பான வினாக்களை மேலோங்கச் செய்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் நிலையான மௌத்தின் ஆணிவேர் எந்த மூலத்தில் இருந்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சமூகம் சுயநலத்திலிருந்து மீண்டு பொதுநலத்தை ஏற்றுக்கொள்ள எவ்வளவு போராடுகின்றது என்பதை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாக இவை அமைகின்றன. மக்கள் சமூகத்தின் காவலாளிகளை இம்சிப்பதும் அவர்கள் வேதனையில் வெந்து போகுமாக அமையும் கதைகள் ஒரு சுயவிசாரணையை வேண்டி நிற்கின்றன. 
 
அனேகமான கதைகளில் வரும் கதைமாந்தர்கள் மணரத்தை வீரத்துடன் எதிர்கொள்ள சற்றும் அஞ்சாதவர்கள். பேயன் மற்றும் புஹாரி கதைகள் இத்தகைய பண்புக்கு உதாரணமாக் கொள்ளலாம். ஆயுதக் கலாசாரம் மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிப் போன சூழலைக் களமாக கொண்டு இயங்கும் இக்கதைகள் இலங்கை முரண்பாட்டின் முற்றுப் புள்ளி ஆயுதப் போராட்டத்தில் இல்லை என்பதைத் தீர்க்கதரிசனத்துடன் கூறுகின்றன. இது ஒரு பிரக்ஞை பூர்வமான கருத்தியல் தரிசனமாகவே எனக்குத் தோன்றுகின்றது. முஸ்டீனிடம் வெளியில் தெரியும் வேகத்துடனும் துடிப்புடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த நிதானம் அவரின் தகுதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே உள்ளது. இது ஒரு கூர்மையான நோக்கு நிலையில் வெளிப்பாடாகும். மனமாற்றம் என்கின்ற கதை இத்தகைய கருத்திலை எடுத்துக்கூற முற்படுகின்றது. 
 
விடுதலைப் புலிகளும் இந்திய இராணுவமும் கிழக்கில் முஸ்லிம்களை எவ்வாறு பந்தாடினார்கள் என்பதையும், சமூக போராட்ட சிந்தனையால் கவரப்பட்டு தமிழர் விடுதலை இயக்கங்களுடன் இணைந்த முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு தீர்த்துக் கட்டப்பட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டும். காட்டிக்கொடுத்தவன் போன்ற கதைகளில் அகன்ற சமூகப்பார்வையைக் காணமுடிகின்றது. கிழக்கில் வெறும் ஆய்வியில் வரலாறுகளுக்குள் புதையுண்டு போன ஒரு காலகட்டத்தின் வாழ்வியல் போராட்டத்தை தோண்டி எடுப்பதாக இத்தொகுதியில் இடம்பெறும் காட்டிக்கொடுத்தவன், மையத்துப் பெருநாள் மற்றும் நினையாத ஒன்று ஆகிய கதைகள் இடம்பெறுகின்றன. 
 
இலக்கியத்தின் இயல்பான தன்மைமை, ஒரு காலகட்டத்தின் வரலாற்று, கதைசொல்லும் ஆசிரியன் இத்தொகுதியினூடாக வெளிக்கொணர முற்படும் தனது கருத்தியல் அரசியல் ஆகிய மூன்று தளங்களில் இருந்து இயங்குதல் மிகவும் இலகுவானதல்ல. அத்தகைய ஒரு போராட்ட நிலையில் நின்று எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகவும் ஹராங்குட்டியைப் பாரக்கலாம். கிழக்கிலங்கை சிறுகதைகளைப் பொருத்தவரை இத்தகையை ஒரு போக்கு போராட்டத்துக்கு பின்னரான சிறுகதைகளில் முனைப்புப் பெற்றுவருகின்றது. 
 
எந்த ஓர் உண்மையான போராட்ட நிலையின் நியாயத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்தவோ அல்லது உத்தமமாகக் காட்டவோ கஸ்டமில்லாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. மனிதஉரிமை மீறல்கள், அடக்குமுறைகள், சட்டவிரோதம், அராஜகம் என அத்தனை நாசகாரச் செயல்களையும் உள்ளே வைத்துக்கொண்டு மேலால் மினுக்கமாக ஒரு முலாம் பூசுவார்கள். அதுதான் ஜனநாயம் என நிஹ்லிசம் பற்றிப் பேசுபவர்கள் சொல்வர்கள். தெற்காசியாவின் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அருன்செமியேன் இது பற்றி அதிகம் எழுதியுள்ளார். இந்தக் கருத்தியலின் காட்சிவடிவமாக இத்தொகுப்பின் பல கதைகள் அமைந்திருந்திருக்கின்றன. சில முகமூடிகள் காரசாரமாக கிழித்தெறியப்படுகின்றன. இத்தகைய ஒரு சாத்வீகமான ஒரு முகத்திரைக் கிழிப்பினை குப்பைவாளி மற்றும் நினையாத என்று போன்ற கதைகள் செய்கின்றன. இக்கதைகள் முஸ்டீனின் பதிவுகள் என்றாலும் அதற்குள் வெளிப்படும் இத்தகைய அர்த்தங்களை சொல்வற்குத் தயங்கவேண்டியதில்லை. 
 
1980 தொடக்கம் 2012 வரையிலான கிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையின் ஒரு பதிவாகவும் இந்தத் தொகுப்பினை பார்க்க இடமுண்டு. ஆரம்பகாலங்களில் தமிழ் விடுதலைப் போராட்டத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் கவரப்பட்டதையும் அத்தகைய போராட்டத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டதால் கதியற்றுப் போனதையும் உருக்கமாகவே இத்தொகுப்புப் பேசுகின்றது. இலங்கையின் ஆரம்பகால போராட்டம் கிழக்கு மாகாணத்தையொட்டி அதன் நகர்வு, அதில் சிறுபான்மைச் சமூகம் சிக்குண்டு போன விதம் என்பனவற்றை ஒரு நாவலைப் போல விரித்துக்கொண்டு செல்லும் இத்தொகுப்பில் தோணிக்காரண், மனமாற்றம் மற்றும் மையத்துப் பெருநாள் என்பன ஒரு முப்பரிமான வெட்டுமுகத்தோற்றத்தை காட்டுகின்றன. இதன் காத்திரமான தொடர் அறுபட்டுப் போவதாகவே இதில் இடம்பெறும் ஹராங்குட்டி கதையில் அமைவினை நான் பாக்கின்றேன். இந்தக் கதையின் அமைவு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தால், நேரடியாகவே இது வராலாற்று ஆவமாகப் பாரப்பது இன்னும் இலகுவாக இருக்கும்.  
 
போராட்ட வர்க்கத்தின் கெடுபிடிகளால் பாமரச் சமூகம் எவ்வாறு விலைகொடுத்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு தனியான நோக்குநிலையும் இத்தொகுதியில் பல இடங்களில் இடம்பெறுகின்றன. தோணிக்காரன் என்கின்ற கதையினை இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். ஒரு கதையாளனுக்கு இருக்கவேண்டியதாகக் கருதப்படும் சமூகத்தின் மீதான பார்வை மெச்சும் விதத்தில் நிறைந்திருக்கின்ற ஒரு கதையான இதனை நான் காண்கின்றேன். அனிபா எனும் கதை மாந்தரின் கடல்வாழ்கையை ஒட்டு மொத்த மீனவர்களின் கதையாகக் காட்டுகின்றார். யுத்தம் எப்படி பொதுமக்களின் நல்வாழ்கையின் அன்றாட உரிமைகளைக் கூட மாசுபடுத்தியது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது. கடலுக்குச் சென்ற முஸ்லிம் தொழிலாளிள் சடலாமாக மீட்டெடுக்கப்பட்டதை தைரியமாக சித்திரித்து நிற்கின்றது. முஸ்டீனின் வெற்றிகரமா பாத்திர வார்ப்புகள் ஒருசிலவற்றுள் தோணிக்காரன் கதையில் வரும் அனிபாவும் ஒன்று. தப்பிவரும் தருணத்தில் கூட ஒருவேளைக்கு கஞ்சி கிடைக்கின்றது என்றால் மரணத்துடனும் சீண்டி விளையாடும் அசட்டு தைரியம் உள்ள கதைமாந்தர்களை இக்கதையில் காண முடிகின்றது. 
 
ஹராங்குடி என்ற கதையும் அதில் பேசப்படும் விடயம் பற்றியும் எனக்குத் தனியான அபிப்பிராயம் உண்டு. ஓர் இஸ்லாமியச் சமயப் போதகர் எவ்வாறு தனது மாணவர்களை தன்னினச் சேர்க்கைக்கு உட்படுத்துகின்றார்கள் என்பதை இக்கதை பேசுகின்றது. இத்தகைய ஒரு பேசு பொருளை முஸ்டீன் தெரிவு செய்ததில் எந்தவிதமான பிழையும் இருப்பதாககத் தெரியவில்லை. ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவருக்கு இத்தகைய ஒரு கருவினைக் கையாழும் முழுச் சுதந்திரமும் உண்டு. இதனை ஒரு பிரச்சினைக்குரிய பேசு பொருளாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு முஸ்லிம் இந்தத் தவறை செய்தார் என்பதற்காக இதனை பேசினால் இஸ்லாத்தின் புனிதம் கெட்டு விடும் என்று நினைப்பது மாமரத்தனம். ஒரு தவறு இடம்பெறும்போது தவறைச் செய்தவர் முஸ்லிம் என்பதற்காக தவறை மௌமாகப் பேச வேண்டும் என்பது யோக்கியத்தனம் அல்ல. இத்தகைய விமர்சனம் தவறு செய்கின்றவர்களையன்றி இஸ்லாத்தை ஒருபோதும் விமர்ச்சிக்கவில்லை. அத்தோடு, எந்த ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதையும் முஸ்டீன் தயக்கமின்றி குறிப்பிடுகின்றார். ஒருவகையில் இதனை பொதுமைப்படுத்தியும் இருக்கின்றார். பௌத்த, கத்தோலிக்க மற்றும் கிருஸ்தவ சமயத் தலைவர்களும் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன ஆங்கிலச் சிறுகதைகளில் பால் நிலைசார் சிறுபான்மையினர் (Sexual minorities) தனியான துறையே வளர்ந்து வருகின்றது. இதனை எல்.ஜீ.பீ.ரீ.கியு கதைகள் என்பார்கள். எவ்வாறாயினும் இக்கதையின் தரம் மற்றும் தொகுதியில் இது பெறும் அமைவிடம் பற்றி எனக்கு வேறு கருத்துக்கள் உள்ளன. இக்கதையின் அமைவிடம் ஹராங்குட்டியின் பேசுபொருள் ஒழுங்கிணையும் கால ஒழுங்கினையும் பேணிவந்த தொகுப்பு முறைக்கு சவாலாக அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 
 
எனக்கு இயல் மற்றும் இலக்கியக் கட்டுமானங்கள் தொடர்பாக முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் ஓர் இலக்கியத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்புத் தொடர்பாக சற்று அக்கறை உள்ளது. அந்த அடிப்படையில், இத்தொகுப்பில் இடம்பெறும் சில கதைகள் அவற்றின் உள்ளடக்கத் தரத்திற்கு அப்பால் காவியப்பாங்கானவை என்பது எனது அபிப்பிராயம். காவியப்பாங்கானது என்பது கதையின் தரத்தைப் பாதிப்பதில்லை. அது பெரும்பாலும் உருவம் பற்றியது உரையாடல். கேணல் புகாரி என்கின்ற கதையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கதைகளில் காவியப்பாங்கான தன்மையிடம் பெறுவது கதையில் பேசப்படும் விதத்தையோ பேசப்பட்ட முறையையோ அதிகம் பாதிக்கவும் இல்லை. ஆனால், இத்தகைய கதைகளை சிறுகதை என்ற பெயரில் பார்க்கும் போது சிலவேளை பிரச்சினைகள் உண்டு. இது சிறுகதை என்ற பெயரில் வெளிவந்திருப்பதால் வேறு பெயரில் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. இவற்றை ஒரு நெடுங்கதையாகவோ, குறுநாவலாகவோ பார்த்தால் இது ஒரு பிரச்சினையல்ல. இது முற்றிலும் என்னுடைய சொந்த அபிப்பிராயம் என்பதால் வேறு கருத்துக்களுக்கு அதிக இடமுண்டு. 
 
முஸ்டீன் இந்த தொகுப்பில் பல இடங்களில் வெளிப்பட்டு மறைகின்றார். அவருடைய நடமாட்டம் மிகவும் தெளிவாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. முஸ்டீன் ஒரு வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியையும் பல இடங்களில் மேற்கொள்கின்றார். உண்மைச் சம்பவங்களின் அதிகமான கோவைகளை அவர் வைத்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தநிலையில் இத்தகைய தரவுகளை இலக்கியமாக்கும் போது இலக்கியத்தரத்தினை பேணிக்கொள்வதில் அதிக அக்கறையும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமாக ஒரு செயல். இதனை அதிக சிரமத்துடன் முஸ்டீன் செய்திருக்கின்றார். இந்த முழுத்தொகுதியையும் அவதானமாக வாசிக்கும் போது இந்த போராட்டம் தெரிகின்றது. இந்த நிலை இலக்கியத்துக்கும் உண்மைச் சம்வங்களுக்குமிடையிலான சமரசத்தன்மையை தோற்றுவித்துள்ளது. இது பல இடங்களில் அழகாக இருக்கின்றது. சில இடங்களில் மாத்திரம் இது கைகூடவில்லை என்று தோன்றுகின்றது. 
 
இத்தொகுதியில் கையாளப்பட்டுள்ள மொழி தொடர்பாக எனக்கு நிறைய அபிப்பிராயங்கள் உண்டு. அவற்றை தனியாகப் பேசவேண்டும். இறுதியாக மேலே குறிப்பிடப்பட்டவை முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்பதால் இவற்றை பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X