2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன்; ஓராண்டு நினைவு கூரல் நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ..கமலநாதனின் ஓராண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் செ.யோகராசா, சுவாமி விபுராலனந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேமகுமார், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், லயன் அ.செல்வேந்திரன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் சி.மௌனகுரு,

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன் - மட்டக்களப்பின் தமிழ் அறிஞர் வரிசையில் மிகமுக்கியமானவர். மட்டகளப்பு பூர்வ சரித்திரம், பாரத அம்மானை போன்ற மட்டக்களப்பின் சரித்திர ஆவணங்களை ஏட்டிலிருந்து அச்சுக்கு மாற்றி மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்தவர்.

அத்துடன், பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்புக் கூத்துக்களை வெளியுலகுகின் பார்வைக்குக் கொணர்ந்த போதும், அதனடியாக புதிய நாடகங்களான கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் ஆகிய நாடகங்களைத் தயாரித்த போதும் அவருக்கு வலது கரமாக நின்று செயற்பட்டு மட்டக்களப்பு கூத்துக்கலையை வெளியுலகறிய வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பெருந்தகையை நாம் மட்டக்களப்பு மறந்துவிடக் கூடாது. இலக்கிய கலாநிதி  வித்துவான் கமலநாதனின் பணிகளை நாங்கள் அவருடைய அரசியல் வாழ்க்கை, அவருடைய சமூக வாழ்க்கை, கல்வி, கலை, ஆராய்ச்சித் துறைக்கு அவருடைய பங்களிப்பு என பல துறைகளில் ஆராயலாம்.

அரசியல் துறைக்கு என்ன பங்கு என்று பார்த்தால் மாறுபட்ட அரசியல் போக்கு கொண்டவர்கள் பலருடனும் பழகியவராக இருந்தாலும் முழுக்க முழுக்க தமிழ் தேசிய தன்மையான அரசியலை கொண்டிருந்தவர். மட்டக்களப்பின் அரசியல் 60 களில் நிலப்பிரபுத்துவத் தன்மையானதாக இருந்த போது அதனை எதிர்கொண்டு சாதாரணமானவர்களை வெளிக் கொணர்ந்தவர். சமூக அக்கறைச் செயற்பாடு குறித்துப் பேசுவதாக இருந்தால் பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட புரட்சிகர சிந்தனை கொண்ட குழுவில் முக்கியஸ்தராக செயற்பட்டிருக்கிறார்.

தமிழ் பணியின் நோக்கினால், பயிற்றப்பட்ட ஆசிரியர், பேராதனைப் பல்கலைகழகத்தில் வித்துவான் கற்கை கற்று வந்தவர். அத்துடன் மட்டக்களப்பில் பெருந்தொகையான வெளிவாரிப் பட்டங்களைப் பெற்றவர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.

ஆராய்ச்சித் துறையைப் பார்த்தால் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், பாரத அம்மானை உள்ளிட்ட இரண்டு நூல்களை வெளிக் கொணர்ந்தார். அத்துடன் விபுலானந்தரின் எழுத்துக்களை 5 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். இவை வெளிக்கொண்டுவரும் தகவல்கள் வரலாற்றாளர்களுக்கு முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

கலைத்துறையை நோக்கினால் பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்புக்கு வர காணமாக இருந்தவர் வித்துவான் கமலநாதன் தான். வித்தியானந்தனைப் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மட்டக்களப்பின் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பினை யாரும் மறந்துவிடக்கூடாது. அவர் மட்டக்களப்பின் கூத்துக்கலையாக எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. வித்தியானந்தன் தயாரித்த நாடகங்களில் கூட கமலநாதன் நடித்தும் இருக்கிறார்.

அதேவேளை மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரியின் அதிபராக இருந்திருக்கிறார். அத்துடன் வித்துவான் கமலநாதனின் மனைவியும் அதிபராக இருந்திருக்கிறார். வித்துவான் கமலநாதனின் குடும்பத்தினால் சுமார் 23 வருடங்களுக்கும் மேல் புனித மிக்கேல் கல்லூரி வழிநடத்தப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பல கல்வியாளர்களை கமலநாதன் உருவாக்கியிருக்கிறார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X