2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

A.P.Mathan   / 2013 ஜனவரி 14 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று என்பது இன்றைய வரலாறு ஆகுதல் போல இன்று என்பது நாளைய வரலாறு ஆகுதல் உறுதி. நமது சமூகங்களின் கடந்த காலத்தோடு நிகழ்காலத்தையும் பதிவுசெய்தல் என்பது முக்கியமானது. இழந்தவைகளைத் தேடிப்பெறலும் இருப்பவைகளைத் தக்கவைத்தலும் இன்றியமையாதன என்பதை வரலாறு நமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கின்றது.

ஆய்வுகளைச் செய்தலும் ஆவணப்படுத்தலும் நமது சமூகத்தில் நத்தையின் வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. தொழினுட்ப வளர்ச்சியை துணையாகக் கொண்டு ஆய்வுகளையும் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் கடமை நம் முன் கிடக்கின்றது. நமது அடையாளங்கள் மீதும் பண்பாட்டுக்கூறுகள் மீதும் மிக நுண்மையாக கவனத்தைச் செலுத்த வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம்.

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2013ஆம் ஆண்டிலிருந்து ”நூலகம்” எனும் ஆய்விதழை தொடர்ச்சியாக வெளியிடவுள்ளது. நமது சமூகங்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்தலையும் அவற்றை விரைவாக்கலையும் செய்யவிருக்கின்ற “நூலகம்” ஆய்விதழானது, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை சீரிய முறையில் பரிசீலித்து வெளியிடலை தனது பிரதான செயற்பாடாகக் கொண்டுள்ளது. இலங்கையில் தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்து வெளிவரக்கூடிய உயர்தரம் வாய்ந்த ஆய்விதழ்கள் இல்லாத வெறுமை வெளியினை நீக்கும் வண்ணம், “நூலகம்” ஆய்விதழ் வெளிவரவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

2013ம் ஆண்டிற்கான ”நூலகம்” ஆய்விதழின் முதன்மை ஆசிரியராக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவின் தலைவரான பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களும் இணை ஆசிரியராக, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழிப்பிரிவின் முதுநிலை விரிவுரையாளரான க.ரகுபரன் அவர்களும் செயற்படுகின்றனர். இவ் ஆய்விதழின் நிர்வாக ஆசிரியராக வி.விமலாதித்தனும் தயாரிப்பு ஆசிரியராக சி.மயூரனும் ஆய்விதழ் ஆலோசகர்களாக க.சசீவன், தி.கோபிநாத் மற்றும் அ.சம்பந்தன் ஆகியோரும் இயங்குகின்றனர். இவ்விதழ் ஆண்டுக்கு இருதடவை வெளியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இதை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சிறந்த முகாமைத்துவக் கட்டமைப்புடனும் பல்வகைப்பட்ட வளங்களுடனும் ஆரம்பிக்கப்பட்டு உள்ள “நூலகம்” ஆய்விதழின், தொடர்ச்சியான வெளிவருகையிலும் உள்ளடக்கத்தில் மற்றும் வெளித்தோற்றத்தில் உயர் தரத்தை பேணுகையிலும், நூலக நிறுவனம் தனது கூர்ந்த கவனிப்பை செலுத்துகின்றது.

ஆவணப்படுத்தல் சார் தொழினுட்பங்கள், தகவல் அறிவியல், அறிவுப்பகிர்வு, நூலகவியல் சார்ந்த விடயப்பரப்புகளுடன், இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களிடையே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகக் கருதப்படும் பின்வரும் விடயப்பரப்புகளான ”மதங்களும் பண்பாட்டு நினைவுகளும், கட்டடக்கலையும் வடிவமைப்பும், அறிவியலும் தொழிநுட்பமும், சட்டமும் சமூகமும், வீடும் வாழ்க்கைப் பாணியும், கலைகளும் செயற்பாடுகளும், இனத்திற்குரிய மருத்துவம், சமூகக்கட்டமைப்பு, உறவுசார் பதிவுகள் மற்றும் உறவு நிலைகள், தொல்லியலும் வரலாறும், மொழியியல் மற்றும் இலக்கியம், இனவரைபு மற்றும் இன உறவுமுறைகள், கிராமங்களும் சமூகக்குழுக்களும், அமைப்புகளும் கல்வி நிறுவகங்களும், நிலவடிவம், சூழல் மற்றும் உயிர்ப்பல்வகைமை” ஆகியவற்றை தனது விடயப்பரப்புகளாக “நூலகம்” ஆய்விதழ் கொண்டுள்ளது.

இவ் ஆய்விதழின் முதலாவது வெளியீடு எதிர்வரும் 28ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2013 அன்று நடைபெறவுள்ள நூலக நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவில் இடம்பெறும். மேலேதரப்பட்ட விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள், “நூலகம்” ஆய்விதழின் முதலாவது இதழுக்காக கோரப்படுகின்றன.

இந்த முதலாவது இதழுக்கு அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகள் 15-02-2013இற்கு முன்பாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். சர்வதேசத் தரத்தில் வெளிவரவிருக்கும் இவ் ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரைகள் ஏற்கப்படும் படிமுறைகள், அது சார்ந்த பிற தகவல்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேட்டையும் இது சார்ந்த பிற தகவல்களையும் நூலக நிறுவனத்தின் www.noolahamfoundation.org என்ற இணயத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ”நூலகம்” ஆய்விதழ் தொடர்பான தொடர்பாடலுக்கும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவதற்கும் noolahamjournal@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X