2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'கலந்துரையாடல் நல்ல புரிதல்களுக்கு வழிவகுக்கும்': அஷ்ரஃப் சிஹாப்தீன்

A.P.Mathan   / 2012 ஜூலை 18 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பல்வேறு திறத்தினருடனான சமூகவியல் குறித்த அம்சங்களைக் கலந்துரையாடுவது நல்ல புரிதல்களுக்கு வழிவகுக்கும்' என இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெள்ளவத்தை பிரிள்ஸ் அகடமியில் இடம்பெற்ற இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் மாதாந்த முதலாவது ஒன்றுகூடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

'1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2002ஆம் ஆண்டு; அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை முன்னெடுத்தது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது நூற்றாண்டு விழாவை மருதமுனையில் நடத்தியது.

பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாகச் செயல்படாதிருந்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் அரசியல், இலக்கியம், சமூகம், கல்வி, இன ஒற்றுமை ஆகிய விடயங்கள் குறித்து துறைசார்ந்தோரையும் படைப்பாளிகளையும் இணைத்துக் கொண்டு மாதாந்த ஒன்று கூடலை நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறது. இந்த ஒன்று கூடல்களில் துறைசார்ந்தவர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள். நிகழ்த்தப்படும் உரைகள் பற்றிய சுமுகமான கலந்துரையாடல் உரைகளுக்குப் பின்னர் இடம்பெறும். இந்த ஒன்றுகூடல்களும் கலந்துரையாடல்களும் சிறந்த புரிதல்களுக்கும் திறந்த மனதுடனான நட்புக்கும் வழிவகுக்கும் என்று இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நம்புகிறது.'

இந்தக் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கும் அண்மையில் கூடிய இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெற்ற முதலாவது ஒன்று கூடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.இரகுபரன் முஸ்லிம் தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி கருத்துப் பரிமாறினார். 'மீள்பார்வை' பத்திரிகை ஆசிரியர் சிஷாஜ் மஷ்ஹூர், 'மத்திய கிழக்கு அரசியல் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் புரிதல்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்வில் புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இலக்கியப் படைப்பாளிகள், ஊடகவியல்துறை சார்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இவ்வொன்றுகூடலில் கலந்து கொண்டார்கள்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .