2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

முழுமதி நாளின் கவித்துறை நிகழ்வு "பாடிப்பறை"

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமூக விஞ்ஞான வட்டத்தினரால் மாதந்தோறும் பௌர்ணமி விடுமுறை நாட்களில் நடாத்தப்பட்டு வருகின்ற "பாடிப்பறை" கவித்துறை நிகழ்வானது, வெற்றிகரமாக தனது முதலாம் ஆண்டை நிறைவு செய்து, இரண்டாவது அகவையில் கால் பதித்து நிற்கின்றது. இம்மாதம் 31ஆம் திகதி ஒருவருட நிறைவின் சிறப்புப் பாடிப்பறை இடம்பெறவுள்ளது. பாடிப்பறையின் ஒருவருடத் தொடர்ச்சியை பதிவு செய்யும் முகமாக சிறப்பாக அமைய இருக்கிறது இம்மாதப் பாடிப்பறை. இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக நாட்டின் பலபகுதியிலிருந்தும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

தலைநகரத் தமிழ் மக்களிடையே பல்வேறு நோக்கங்களுடன் நடைபெற்றுவரும் பற்பல இலக்கிய நிகழ்ச்சிகளிடையே, சமூகப்பார்வையுடன் கூடிய கவிதை சார் நிகழ்வுகள் இல்லாத குறையை பாடிப்பறை பூர்த்தி செய்தது. மக்களைப்பாடுகின்ற கவிதைகளை மொழி வேறுபாடு இன்றி, தமிழ்ச்சூழலுக்கு அறிமுகம் செய்ததில் "பாடிப்பறைக்கு" தனி இடம் உண்டு. உரிமைகள், உணர்வுகள் பற்றிய பல்வேறு தலைப்புகளிலான கவியரங்கங்களை நடாத்தி உள்ள "பாடிப்பறை", கவிதைகளின் பல்வேறு விடயப்பரப்புகள் மீதானதும், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுவதானதுமான ஆய்வுரைகளையும் விற்பன்னர்களைக் கொண்டு நடாத்தியது. தலைநகரச்சூழலில் இவ்வகையான முற்போக்கு இலக்கிய நிகழ்வு நடைபெறுவது பலதுறையினரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இம்முறை நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு, திருமதி பிரியா ஜதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றும் இசை ஆற்றுகை, தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ். பிரதேசப் பேரவை வழங்கும் 'ஈனம் இனியும் இல்லை' என்ற ஆற்றுகை, 'தனிமை' என்ற தலைப்பில் அமைந்த மொழிபெயர்ப்புக் கவிதை, 'மலையகத் தலைவர்களும் கொள்கைத் தயாரிப்பும்' என்ற தனி ஆற்றுகை மற்றும் பேராசிரியர் சி.சிவசேகரம் தலைமையில் நடைபெறும் 'சுட்ட சாம்பலின் சுடர்மிக எழுவோம்' என்ற தலைப்பிலமையும் சிறப்புக் கவியரங்கம் என பல சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

"பாடிப்பறையின்" தளராத தொடர்ச்சிக்கும் வெற்றிகரமான சுவடுகளுக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமான மக்களின் ஆதரவு இன்றியமையாதது. உலகளாவிய ரீதியில், சமூக விஞ்ஞான வட்டத்தினரால் நடாத்தப்படும் "பாடிப்பறை" அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று. சமூக வலைத்தளங்களை முற்போக்கு இலக்கிய நிகழ்வுகளை நடாத்துவதற்காக உபயோகித்ததன் மூலமாக, ஈழத்து இலக்கிய ஆர்வலர்களுக்கு புதியபாதையை "பாடிப்பறை" திறந்து காட்டியுள்ளது.

31-08-2012 அன்று மாலை 4.30 மணிக்கு இல-571/15, காலி வீதி, வெள்ளவத்தையில் அமைந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கிறது. உங்கள் அனைவரையும் சமுக விஞ்ஞானக் கற்கை வட்டம் அன்புடன் அழைக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .