2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஷில்போதயம் 2014!

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஷில்போதயம் 2014' தேசிய கைப்பணிக் கண்காட்சி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

கொழும்பில் அமைந்துள்ள திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் மேற்படி கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஆரம்பமாகியது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் 'ஷில்போதயம் 2014' தேசிய கைப்பணிக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் வருடம் தோறும் இடம்பெற்று வருகிறது.

இக்கண்காட்சியில் களிமண், உலோகம், மரம், பிரம்பு, மூங்கில், நாணல், கோரைப்புல், தெங்கு, கித்துள், பனை, கற்கள், துணி, தோல் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் 20 பிரிவுகளிலும், 56 உபபிரிவுகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாகாண மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆக்கப் பொருட்கள் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்படும் பொருட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கப் பொருட்களுக்குப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், நவீன வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வகையான மூலப்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உற்பத்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்பு நிலையம், பனை அபிவிருத்திச் சபை ஆகிய நிறுவனங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்பட்ட பல்வகையான கைவினை, கைப்பணிப் பொருட்கள் கண்ணைக் கவரும் விதத்திலும் மனதிற்கு இதமளிக்கும் வகையிலும் புதிய புதிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூடத்தின் பிரதான வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தங்கம், வெள்ளி விருதுகளையும், பரிசில்களையும் வென்றெடுத்த கைவினை உற்பத்திகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

இன்று ஆரம்பமாகியுள்ள 'ஷில்போதயம் 2014' கைவினைக் கண்காட்சி எதிர்வரும் 31ம் திகதி வரையான நான்கு நாட்களும் நடைபெறவுள்ள நிலையில், பார்வையாளர்கள் நாள்தோறும் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்வையிட முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கண்காட்சியில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மஹிந்த சிந்தனைக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறைகளை நாடளாவிய ரீதியில் நவீனமுறையில் வளர்த்தெடுத்து, அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக இவ்வாண்டும் ஷில்போதயம் 2014 தேசிய கைப்பணிக் கண்காட்சி பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - குஷான் பதிராஜ)
















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .