2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'கலா பொல 2013' – 20ஆவது ஆண்டு நிறைவு கொழும்பில் ஆரம்பமாகின்றது

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கொழும்பின் வருடாந்த ஓவியக் கண்காட்சியான 'கலா பொல 2013'இன் 20ஆவது வருட நிகழ்வு இம்மாதத்தின் கடைசி வாரஇறுதியில் நடைபெறவுள்ளதால், கொழும்பு நெலும் பொக்குண மாவத்தையின் நடைபாதையோரங்கள் மீண்டும் ஒரு தடவை மிக வர்ணமயமானதாக மாற்றமடையவுள்ளது.

தற்போது கொழும்பின் கலாசார நாட்காட்டியில் தவறவிடப்பட முடியாத ஒரு நிகழ்வாக திகழ்கின்ற 'கலா பொல' கண்காட்சி தனது 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இரு நாள் நிகழ்வாக இடம்பெற உள்ளதால் இவ்வருடம் மிகவுன்னத பரிமாணம் ஒன்றை எடுக்கவுள்ளது. 'கலா பொல 2013' ஓவியக் கண்காட்சி ஜனவரி 26ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 8 மணி முதல் மாலை 10 மணி வரையும், ஜனவரி 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 6 மணி வரையும் பார்வையாளர்களுக்கென திறந்திருக்கும். இக்கண்காட்சியானது இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் மேன்மைதங்கிய கிறிஸ்ரைன் ரொபிகொன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

'கலா பொல 2013' கண்காட்சியானது – ஓவிய ஏல விற்பனை (ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.30 முதல் நண்பகல் 12 மணி வரை), ஓவியம் தொடர்பான பொதுமக்களுக்கான விரிவுரை தொடர்கள் (சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை), குழந்தைகளுக்கான ஓவிய பயிற்சிப்பட்டறை (சனிக்கிழமை காலை), கலாசார மகிழ்வூட்டல் நிகழ்வு (சனிக்கிழமை பிற்பகல் 7 மணி தொடக்கம் மாலை 9 மணி வரை) போன்ற புதியதும் மேலதிகமானதுமான பல வசதிகளையும உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். அதுமட்டுமன்றி, இரு நாட்களுக்கு நடைபெறும் இந்த ஓவிய நிகழ்வின்போது மாற்றுத் திறனாளிகளான சிறுவர்கள் சிலரும் தத்தமது சித்திரங்களை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்காகவும், 'கலைச் சூழல்' ஒன்றை கொழும்பில் உருவாக்குவதற்காகவும் 'கலா பொல 2013' கண்காட்சி நடைபெறும் வேளையில் 'உப நிகழ்வுகளை' நடாத்துவது தொடர்பிலும்; ஏற்பாட்டாளர்கள் தனியார் கலையரங்க நிர்வாகங்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

1993ஆம் ஆண்டு தொடக்கம் ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் வழங்கப்பட்டு வரும் 'கலா பொல' கண்காட்சியானது, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருந்தன்மையுள்ள ஆதரவு மற்றும் உறுதிமிக்க பங்காளித்துவம் ஆகியவற்றை கடந்த பல வருடங்களாக தொடர்ந்தும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஊக்குவித்தலுக்கு ஆதரவு வழங்குவதற்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.  

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவரான செட்றிக் டி சில்வா கூறுகையில், 'பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெறும் புகழ்பெற்ற 'மொன்மார்ட்ரே' போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கோடைக்கால திறந்தவெளி ஓவியக் கண்காட்சி கொண்டாட்டங்களின் பக்கம் இலங்கையரின் கவனத்தை திருப்புவதற்காக 1993ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கடந்த இரு தசாப்த காலமாகவும் இலங்கையின் பொதுமக்களிடையே ஓவியம் தொடர்பிலான சிறப்பான மதிப்பினை அதிகரிப்பதற்கான ஒரு வினையூக்கியாக இக் கண்காட்சி திகழ்ந்துள்ளது. சிறந்த ஓவியத்தை உருவாக்குவதையும் அதற்கு மதிப்பு அளிப்பதையும் ஊக்குவிப்பது மட்டுமன்றி, இந்தக் கண்காட்சியில் தமது ஓவியங்களை காட்சிப்படுத்துபவர்களுக்கு இலாபமளிக்கின்ற வருமான மார்க்கமாகவும் அமைகின்றது. கடந்த வருட 'கலா பொல' கண்காட்சியின்போது ஓவியக் கலைஞர்கள் மொத்தமாக சுமார் ரூபா 07 மில்லியனை வருமானமாக உழைத்துக் கொண்டனர். 'கலா பொல' இடம்பெறும் தினங்களில் நெலும் பொக்குண மாவத்தை (முன்னைய கிறீன்பாத்) நடைபாதையோரங்களில் குழுமியிருக்கும் அதிகரித்த எண்ணிக்கையிலான ஓவியர்கள் மற்றும் பார்வையாளர்களின் வரவினை பதிவுசெய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த இரு தசாப்த காலப்பகுதியிலும் எமக்கு பக்கபலமாக இருந்த மிகப் பெரிய ஆதாரமாக ஜோன் கீல்ஸ் குழுமம் செயற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பெறுமதிமிக்க ஆதரவுக்கு நாம் மிகவும் நன்றியுடைவர்களாக இருக்கின்றோம்' என்றார்.

'ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் தமது தொழில்சார் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கும், கட்டி எழுப்புவதற்குமான மிக முக்கியமானதொரு தளமேடையாக 'கலா பொல' காணப்படுகின்றது' என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட தலைமை அதிகாரி செல்வி. நதீஜா தம்பையா கூறினார். மேலும் தெரிவிக்கையில், 'தமது கைவண்ணங்களை அவர்கள் காட்சிப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான தளமேடை ஒன்றை இது உருவாக்குவது மட்டுமல்லாமல், உறுதிமிக்க வாடிக்கையாளர் தளமொன்றை கட்டமைப்பதற்கும் அவர்களுக்கு உதவி புரிகின்றது. அதனூடாக, இலாபம் தரவல்ல வழிமுறையாகவும் தொழில்சார் முன்னெடுப்பாகவும் ஓவியக் கலை மேம்படுத்தப்படுகின்றது. 'கலா பொல' கண்காட்சியானது 'உந்தித்தள்ளும் பலகை' ஒன்றைப்போல திகழ்கின்றமையால், இவர்களுள் அதிகமான ஓவியர்கள் தமது வெற்றிகரமான தொழில்வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். அவர்களுள் சிலர் சர்வதேச அரங்கில் கூட மிளிர்கின்றனர். ஓவியர்கள் பரஸ்பரம் கற்றறிந்து கொள்வதற்கும், அதனூடாக தத்தமது ஓவியத்தை (கலைநயம், பாணி போன்றவற்றை) விருத்திசெய்து மற்றும் மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக 'கலா பொல' கண்காட்சி பெருமளவிலான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்துள்ளதன் பயனாக, மேலும் அதிகளவான அசல் ஓவியங்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களின் சுவர்களை அலங்கரித்த வண்ணமுள்ளன. இலங்கைக்குள் ஓவியம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உன்னதமான மதிப்பு மற்றும் ஊக்குவிப்பானது, ஜோற் கீற் மன்றம் மற்றும் ஜோன் கீல்ஸ் மன்றம் ஆகியவற்றின் நோக்கங்களின் மிக முக்கிய அடிப்படையாகும். அந்த வகையில் இந்த அற்புதமான முயற்சியில் பங்கெடுப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் 300 இற்கும் அதிகமான பிரபலமான மற்றும் வளர்ந்துவரும் உள்நாட்டு ஓவியர்களும் சிற்பக் கலைஞர்களும் 'கலா பொல 2013' கண்காட்சியில் பங்குபற்றுவதற்கென தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளனர். அத்துடன், சர்வதேச கலைப் படைப்புக்களின்பால் உள்நாட்டு ஓவியர்களை வெளிக்காட்டும் பொருட்டு சார்க் வலயத்தைச் சேர்ந்த சில பங்குபற்றுனர்களும் இக்கண்காட்சிக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த வருடங்களைப் போலவே 'கலா பொல 2013' கண்காட்சியையும் கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையிட முடியும் என்பதுடன், பொதுமக்களுக்காக அது திறந்து வைக்கப்பட்டிருக்கும். தற்போது சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் மிக முக்கிய விடயமாக திகழ்கின்ற இக்கண்காட்சியானது – வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த, இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும். 'கலா பொல' கண்காட்சியின் நல்லியல்பான, நட்புணர்ச்சிமிக்க சூழலை கண்டுகழிப்பதற்காக அவர்கள் அனைவரும் இவ்விரு நாட்களிலும் நெலும் பொக்குண மாவத்தையில் திரண்டிருப்பதுடன், இலங்கையின் தலைநகர் கொழும்பின் மையப்பகுதியில் நடைபெறும் இந்த மனமகிழ்ச்சியான கோடைக்கால ஓவியக் கண்காட்சி தொடர்பாக ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுகின்ற உணர்வையும் அனுபவித்து மகிழ்வார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X