2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆண்டுகள் 15; மக்கள் மனதை ஆளும் சூரியன்

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


15 ஆண்டுகள் பல துறை சாதனை படைத்து, வானொலி துறையில் தனக்கென்று தனி இடம்பிடித்து தமிழ் பேசுவோரின் தரமான தெரிவாக முதல்தரமாக மகத்தான தமிழ் பரப்பும் சூரியன் வானொலிக்கு நாளை 25ஆம் திகதி மற்றுமொரு சாதனை ஆண்டு ஆரம்பம். 
 
1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி காலை சூரிய உதயத்தில் இலங்கை வானொலி வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்த, தமிழ் வானொலி துறைக்கு புத்துணர்ச்சி கொடுக்க இலங்கையின் முதலாவது 24 மணித்தியால தனியார் தமிழ் வானொலியாக நமது தங்கச் சூரியன் இலங்கையின் மிக உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தின் 35ஆவது மாடியில் இருந்து உலகத் தமிழ் பேசுவோரை நோக்கி உதயமாகின்றான். 
 
சில வரையறைக்குள் முடங்கி கிடந்த நிகழ்ச்சி முறைகளை தகர்த்தெறிந்து, படித்தோர் முதல் பாமர மக்கள் வரை தேடி விரும்பும் அளவுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வானலை நிகழ்ச்சிகளுக்கே பெருமை சேர்த்து கொடுத்தான் நமது தங்கச் சூரியன். காலை விடிய முதல் கேட்க ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் தூக்கத்துக்கு போகும் வரை நேயர்களுடனே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அளவு அன்பான நேயர்களின் பங்களிப்பும் நமது சூரியன் வளர்ச்சியில் முக்கியம் செலுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
 
அறிவிப்பாளர்கள், நேயர்கள் என்ற தூர உறவு பேணப்பட்டு வந்த ஒரு காலம், நம் நாட்டின் வானொலி காலசாரத்தில் ஒரு காலகட்டத்தில் தலை தூக்கியிருந்தது. சூரியன் எஃப்.எம். வானலை வழியே நேயர்களை சென்றடைய ஆரம்பித்தவுடன் நேயர்களுடனான உறவை நெருக்கப்படுத்தி, அன்பான, நட்பான உரையாடலுடனும், அவர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை வழங்கியதிலும் நேயர்களின் பேரபிபானமும் பெற்று அசைக்க முடியாத ஓர் உறவை நேயர்களிடத்தே பெற்றுக்கொண்டது.
இலங்கையின் ஊடக வலையமைப்புக்களில் இன்று மிக பிரம்மாண்டமான நிறுவனமாக வளர்ந்து வந்திருக்கின்ற ஆசிய ஒலி/ ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வானொலியான சூரியன் எஃப்.எம்.  ஆரம்பம் முதல் இன்றுவரை மிகத் திறமையான வழி நடத்தலுடன் முதல்தரமாக வெற்றிநடை போடுகின்றது. காலத்திற்கு ஏற்ப தேவையான ஆலோசனைகளை வழங்கி, நிறுவனத்தின் தரத்தை வளர்ப்பதிலும் வானலைகளின் புதுமைப் புகுத்தலுக்கும், விரிவாக்கல் நடவடிக்கைகளுக்கும் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெய்னோ சில்வா.
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இலக்கு ஒன்றை நோக்கி புறப்பட்டு சாதனைகள் கண்ட வரலாறுகள் பல, அதுபோலவே 1998இல் ஆரம்பித்த இளைஞர் குழுவின் வானலை ஆரம்பம் இன்றும் சளைக்காமல், களைக்காமல் தொடர்ந்து முன் நகர்ந்து செல்கின்றது. வானொலித் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட கலைத் துறையில் பட்டங்கள் பல பெற்ற சிறந்த ஒரு நாடு போற்றும் கலைஞர் நடராஜசிவத்தின் முகாமைத்துவத்தில் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளராக நிகழ்ச்சிகளையும் சூரியன் அறிவிப்பாளர்களையும் முகாமைப்படுத்த வானலையில் சூரிய குழந்தை தவழ ஆரம்பிக்கின்றான்.
 
அன்று முதல் இன்று வரை உலகம் போற்றும் பல திறமையான அறிவிப்பாளர்களை உருவாக்கிவிட்ட பெருமையிலும் இன்று சூரியன் பண்பலை முதலிடத்தில் சிறப்பான வழிநடத்தல்களைக் கொண்டு தரமான நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு பிடித்த வகையில் வழங்கி அவற்றை செம்மைப்படுத்த பல முகாமையாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனாலும் இந்த 15ஆவது அகவையில் சூரியன் வானொலியில் அதிக காலம் முகாமையாளராக கடமையாற்றியவர் என்ற பெருமையை பெற்றவர் இம்முறையும் சூரியன் பண்பலையின் பணிப்பாளராக தன்னுடைய திறமையான வழிநடத்தலில் சூரியனுடன் கைகோர்த்துள்ளார் என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
காலை வேளை ராகங்களாக தன்னுடைய வழமையான கம்பீரமான குரலில் சூரிய ராகங்களுக்கே சிறப்பு தரும் ஒருவர். விளையாட்டாக இருந்தாலும், அரசியல், சழூக, விஞ்ஞான, சமய, சினிமா மட்டுமன்றி சகல துறைகளிலும் வல்லவர். இவரால் மட்டும் எப்படி முடிகிறது என பலரையும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்க வைப்பவர். எந்த நேரத்திலும் தேடல்கள் நிறைந்த ஒரு மனிதர். வானொலித் துறையில் 'எந்திரன்' என்று கூடச் சொல்லலாம். தமிழ் வானொலித் துறையில் தனக்கென்று ஒரு தனி இடம்பிடித்தவர். இவர்தான் ஏ.ஆர்.வி.லோஷன். சூரியன் வானொலியின் பணிப்பாளராக இப்போது பொறுப்பேற்று முதல்வனின் சாதனைகளில் கரம் கோர்த்துள்ளார்.
அதேபோல் அண்மைக் காலங்களில் வானலை நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஒருவர். தன்னுடைய நகைச்சுவையான பேச்சாற்றலால் பல உள்ளங்களை தன்வசப்படுத்தி இருப்பவர், சின்ன கொமன்டோவிடம் அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்பவர். நகைச்சுவையான நிகழ்ச்சிகள் பலவற்றை சூரியனில் அறிமுகப்படுத்தி அவற்றிலும் அதிகளவிலான இரசிகர்களை தன் வசப்படுத்தியவர். நிகழ்ச்சிகள் தயாரிப்புக்களிலும் இவர் கில்லாடி, யார் என்று கேட்கிறீர்களா? இவர்தான் சூரியன் வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் இசைச்சமர் நிகழ்ச்சியின் சந்துரு.
 
இவர்களுடன் சூரியன் பண்பலையின் நிகழ்ச்சிகள் புதிய நாள் ஒன்றின் காலை வேளையில் ஆரம்பமாகும் போது அருணோதயம் நிகழ்ச்சியுடன் இணைந்து வாழ்த்துக்களை சொல்லி இனிய பாடல்களை வழங்கி உங்களுடன் இணைந்து கொள்பவர்தான் எம்.ஜி.ஆர். என்று பலராலும் அழைக்கப்படுகின்ற றிம்ஷாட் அவருடன் இணைந்து அருணோதயத்தில் பிரஷாவும் கலந்து கலக்குகிறார்.
 
ஒவ்வொரு நாளினதும் காலைப் பொழுது சுபமான வாழ்த்துக்களுடன் ஆரம்பமாக, அதனைத் தொடர்ந்து ஒரு புதிய நாளின் ஆரம்பத்துக்கு வேகமான காலைப்பொழுது. வானலை வழியே பலரது எதிர்பார்ப்புக்கள் நிறைந்த நேரமாக வேலைப்பளுக்களின் மத்தியிலும் சுடச்சுட வரும் தகவல்களையும், ஒவ்வொரு புதிய விடயங்களையும் காலையிலே அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பலரது செவிகள் சூரியன் பக்கம் திரும்புகிறது.
 
ராசி பலன்களை அறிந்து கொள்ளவும், அன்றைய பத்திரிகை செய்திகளை பேப்பர் பொடியனின் நையாண்டியுடன் ரசித்து கேட்கவும், விறுவிறுப்பாக தெளிவாக முழு அறிவுடனான விளையாட்டுச் செய்திகளை கேட்டு மகிழவும், சுவரஸ்யமான செய்திகள் சுடச்சுட பகிர்ந்து கொள்ளவும் ஏ.ஆர்.வி.லோஷனின் சூரிய ராகங்கள். சூரிய ராகங்கள் என்றால் லோஷன், லோஷன் என்றால் சூரிய ராகங்கள் என்றால் அது மிகையாகது. பலருக்கும் சூரிய ராகங்களை நினைத்தால் உடனே ஞாபகத்திற்கு வருபவர் இவர்தான்.
 
இவ்வாறான தனித்தன்மை நிறைந்த சூரியன் வானொலி நிகழ்ச்சிகளின் மத்தியில் சற்று வித்தியாசமான, நகைச்சுவை ததும்பும் ஒரு போட்டி நிகழ்ச்சியாக மூவரும் சேர்ந்து வயிறு குலுங்க வைக்கும் நேரம்தான் காலை 10.00 மணிமுதல் 01.00 மணிவரை. தன்னுடைய வழமையான நகைச்சுவை பேச்சால் சந்துருவும் அவருடன் பக்கபலமாக போட்டிபோட்டு, கல கல சண்டை போட்டு நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்க மேனகாவும் இருவருக்கும் தலையிடியாக புதிய பங்காளியாக வந்து தன்னுடைய குறும்பு தனத்தால் இப்போது பலரது அன்பு நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்தான் மாளிகாவத்தை சின்ன கொமாண்டோ. இவர்கள் மூவரும் சேர்ந்து வழங்கும் இசைச்சமரை யாராலும் மிஞ்ச முடியாது தனி வழி அமைத்துள்ளார்கள் என்றால் வேறு கதை இல்லை.
 
சூரியன் நிகழ்ச்சிகளின் நகர்வின் அடுத்தபடியாக நேயர்கள் பலரையும் ஒன்றிணைக்க, அனைவருக்கும் விருப்பமான பாடல்களை வழங்க அவர்கள் ஆசைப்படுவோருக்கு வாழ்த்துக்களை சொல்ல அன்போடு வானலையில் உறவாட மதிய பொழுதை மகிமையாக்கி கொள்ள மனமகிழ்வோடு உங்களுடன் இணைந்துகொள்கின்றார்கள் நிஷாந்தன் அவருடன் வர்ஷி அலுவலக கடமை புரிவோர்க்கு கொஞ்சம் கிடைக்கும் இடைவேளையில் Lunch Timeஇல் இணைந்து அவர்களும் தங்களுடைய நெருக்கடியான பொழுதை இனிமையாக்கி கொள்கின்றார்கள்.
 
தொடரும் நிகழ்ச்சிகளில் பிந்திக் கிடைத்த புதுமையான தகவல்களுடன் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் வானலையில் நீச்சலடிக்க தனக்கே உரித்தான பாணியில் சுருக்கமாக சொல்லும் விடயத்தையும் விரிவாகச் சொல்லும் தனித்திறமை கொண்ட, நண்பர்களால் 'மைக் டைசன்' என்று செல்லமாக அழைக்கப்படும் தரணி சிறப்பாக கும்மாளத்தில் உயர்ந்து நிற்கிறார். இவருக்கும் அதிகமான காதல் தத்துவங்கள் தெரியும் இதனாலும் வெள்ளிக் கும்மாளத்தில் நிறைய விடயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
 
இவற்றை விடவும் மாலை வேளையின் ஆரம்பம், வேலைக்கு சென்றோர் வீடு திரும்பும் நேரம், வீட்டில் இருப்போர் குடும்பத்தினரோடு மகிழ்ந்திருக்கும் பொழுது. மீண்டும் வானலை வழியே உங்கள் விருப்ப பாடல்களையும், வாழ்த்துக்களையும் கொண்டுவர மாலை மன்னன், வாய மூடு டிலான் தன்னுடைய இனிய குரலால் உங்களை என்றென்றும் புன்னகையுடன் சந்திக்கின்றார். மாலை வேளை புன்னகைபுரிய டிலானுடன் கோபிகாவும் இணைந்திருக்கின்றார்.
 
இவற்றையெல்லாம் கடந்து காதல் உள்ளங்களை கௌரவிக்கவும், உழைத்து களைத்த உத்தமர்களை இளைப்பாற்றவும், கவிஞர்களுக்கு சிறப்பளிக்கவும் தன்னுடைய வழமையான அறிவிப்பு பாணியில் பல இளசுகளை தன்னகத்தே அணைத்து வைத்திருக்கிறார் சூர்யா. நேற்றைய காற்றுடன் தினமும் இரவு 09.00 மணியிலிருந்து உங்களை சந்திக்கின்றார். இவரைப் பொறுத்தவரைக்கும் உடன் கவிதை சொல்வதில் வல்லவர் என்று சொல்லலாம்.
 
நேற்றைய காற்று வீசி ஓய்ந்தவுடன் இன்னொரு புதிய நாள் விடிய உங்களையெல்லாம் ஆட்டம் போட வைக்க விடிய விடிய இரவுச் சூரியன் இரவு நேர சூரிய பயணமாக ஆரம்பமாகின்றது. விடிய விடிய இரவு சூரியனுடன் ஹரி, ரமேஷ், மணிவண்ணன், மனோஜ் உள்ளிட்ட அறிவிப்பாளர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டுகிறார்கள். நிகழ்ச்சி ஒரே தூள் என்று சொல்லலாம்.
 
அதேபோன்று சனி, ஞாயிறு நிகழ்ச்சிகளும் கேட்போர் மனங்களை குதூகலிக்க வைக்கிறது. சனிக்கிழமை நேரம் கொஞ்சம் அதிரடியான பாடல்களை குதூகலிக்க வைக்கிறது. சனிக்கிழமை உற்சகமாக உங்களை மகிழ்விக்க அட்டகாசமாக விளையாட்டுத் தகவல்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறது அட்டகாசத்தில். ஞாயிறு சந்தோசமாக இனிமையான காதல் பாடல்களில் நாம் அன்றைய நாள் முழுவதும் மூழ்கிப்போகின்றோம். 
 
சூரிய குடும்பத்தின் அறிவிப்பாளர்களில் ஒருவரான, மயூரன் இவர் சிறந்த செய்தி வாசிப்பாளர், காலை நேர பிரதான செய்தியறிக்கை மற்றும் மதிய நேர பிரதான செய்தியறிக்கை வாசிப்பவருமாவார். சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார் சிறந்த முறையில் நேயர்களுடன் உரையாடக்கூடிய தன்மை கொண்டவர். சனிக்கிழமைகளில் இரவு 09.00 – 12.00 மணிவரை விசை இசை இரவு நிகழ்ச்சியோடு நேயர்களுடன் கலகலப்பாக பயணிப்பவர். மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05.00 – 8.45 வரை விடுமுறை.com நிகழ்ச்சியில் சிறப்பான மொழிநடை கலந்த உரையாடலோடு அழகாக பயணிப்பவர்.       
 
மற்றும் வேணி காலை நேர மதிய நேர பிரதான செய்தி வாசிப்பாளராகவும் அத்தோடு சனிக்கிழமைகளில் 04.00 – 06.00 வரை சிறப்பாக சனிக்கிழமை உற்சாகத்தில் பயணிப்பவர். ஞாயிற்றுக்கிழமைகளில் 01.00 – 03.00 மணி வரை ஞாயிறு சந்தோசத்தில் இனிமையான காதல் பாடல்களோடு பயணிப்பவர்.  
 
அத்தோடு ராகவன் மாலை நேர மற்றும் இரவு நேர பிரதான செய்தி வாசிப்பாளருமாவார். அத்தோடு ஞாயிற்றுக்கிழமைகளில் 03.00 – 05.00 வரை பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியை வழங்குபவர். அதேபோன்று வழமையான சூரியன் அறிவிப்பாளர்களான லறீப் (விடிய விடிய இரவு சூரியன்), மயூலா, பிரசாந்தா போன்றோரும் இணைந்து கொள்கின்றனர்.
 
இவ்வாறு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நேயர்களின் விருப்பம் அறிந்து தரம் பிரித்து தயாரிக்கப்பட்டிருக்க சூரியன் வானலையின் வளர்ச்சியில் சூரியன் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவும் கைகோர்த்துள்ளது என்றால் மிகையாகாது. தென்னிந்திய திரையுலகினரை மடக்கி பிடித்து அவர்களின் ஆழ்மனதின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் கள்ளமனத்தின் கோடியின் நாயகனான அஷ்ரப் அவர்களின் முகாமைத்துவத்தில் அஜித், கார்த்திக், சுலைமான் பாரி ஆகியோர் விரிவாக்கல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றார்.
சூரியன் என்றால் இன்னுமொரு முழுமையான பங்களிப்பு செய்திப் பிரிவு என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் பேசும் உறவுகள் மத்தியில் சூரியன் செய்திகளுக்கு தனி மவுசு. உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் இன்று வரைக்கும் சூரியன் செய்திகளையே பலரும் தேடி வருகின்றனர்.
 
சூரியன் செய்தி ஆசிரியர் குழாமில் அனுபவமிக்க செய்தி ஆசிரியர்கள் பலரும் சுடச்சுட ஒவ்வொரு செய்திகளை தேடி வழங்குவதில் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்ப்படுகின்றனர்.
செய்தி முகாமையாளராக இந்திரஜித் தலைமையில் சிரேஸ்ட செய்தி ஆசிரியர் வீ.எஸ்.சிகாமணி,  ஆ.சதீப்குமார், பி.விக்னேஸ்வரன், சிறி நாகவானி ராஜா, எம்.ஜி.கிருஷ்ணகுமார் என சூரியன் செய்தியாசிரியர்கள் தங்களுடைய கடமையை சிறப்பாக மேற்க்கொண்டு வருகின்றனர்.
 
இவ்வாறாக சூரியன் பயணம் தொடர வெளிக்கள நிகழ்வுகளிலும் தனது புதுமையான நடவடிக்கைகளால், புதுமைப் புகுத்தலினாலும் தனது சாதனைப் பயணத்தை தொடர்கின்றான். பல வெளிக்கள நிகழ்வுகளை சூரியன் அறிமுகப்படுத்தியதன் பின்னரே இன்னும் பல ஊடகங்கள் அவற்றை இன்னும் தொடர்கின்றன. பல சமூக அனர்தங்களாலும் இயற்கை அனர்தங்கள் ஏற்பட்ட போதெல்லாம் முந்திக்கொண்டு எமது உறவுகளுக்கு உதவ முன்வந்து உதவும் கரங்கள் என்றும் பிரம்மாண்ட நிகழ்வை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களைத் தேடிச்சென்று எங்களால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் எல்லாமே அவர்களின் கரம் கொண்டு ஒப்படைத்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுக்கொண்டது.
 
ஒவ்வொரு ஆண்டும் உதவும் கரங்கள் நிகழ்வினூடாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு சூரியனின் உதவும் செயற்பாடுகள் தொடர்கின்றன. இது தனியே பாடல்களை ஒலிபரப்பி, சுவாரஷ்யமாக உரையாடும் வானொலி கலாசரத்தினை தொடராது சமூக சேவை செயற்பாட்டிலும் முன்னின்று சூரியன் செயற்படுகின்றான். எமது உறவுகளுடன் இன்பத்திலும், துன்பத்திலும் சேர்ந்து செயற்ப்படும் வானலை நண்பன் சூரியன் என்பது இவற்றினூடாக அனைவரும் அறிந்ததே.
தங்க சூரியனின்15 ஆண்டுகால சரித்திர சாதனை பயணத்தில் முக்கியமாக எந்தவொரு தமிழ் வானொலியாலும் நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளில் சூரியன் வானொலி விளையாட்டு செய்திகளை வழங்குவதிலும் முன்னிற்கின்றது.
 
பிந்திய விளையாட்டு செய்திகளை முந்திக்கொண்டு, ஆழமாய் அறிந்து ஆதாரபூர்வமாய் வழங்குவதில் எந்தவொரு வானொலியாலும் எட்டிக்கூட தொடமுடியாத எல்லையில் சூரியன் வானொலி திகழ்கிறது.
 
விளையாட்டு செய்திகள் விரைந்து தரவேண்டும் என்கின்ற வேட்கையோடு சூரியன் விளையாட்டு செய்திகளை வழங்கும் அணியினரும் களத்திலும் கலையகத்திலும் சுறுசுறுப்போடு செயற்படுகின்றனர். 
சர்வதேச போட்டிகள் நடக்கின்ற மைதானங்களுக்கும் சென்று அங்கிருந்து நேரடி கள நிலவரங்களை வழங்குவதோடு மாத்திரமல்லாமல் காலநேரம் பாராது கலையகத்திலிருந்தும் போட்டிகள் பற்றிய களநிலவரங்களை முந்திக்கொண்டு உடனுக்குடன் அறியத்தரும் தமிழ் வானொலி என்ற பெருமையும் சூரியனுக்கே இருக்கிறது.
 
காலையில் சூரியராகங்களில் சூடுபறக்க சூப்பரான விளையாட்டு செய்திகளை பணிப்பாளர் லோஷன் வழங்க, ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு இடம்பெறும் சூரியனின் 'வெற்றி நடை போடும் விளையாட்டு செய்திகள்' தொகுப்பை ரிம்சாத் மற்றும் தரணீதரன் ஆகியோர் சுடசுட தொகுத்து வழங்குகின்றனர்.
 
ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளின் போதும் கடமையில் இருக்கும் ஒரு விசேட அறிவிப்பாளர் போட்டிகளின் தன்மை, சாதக - பாதக தன்மைகள் பற்றி அலசி ஆராய்ந்து அவ்வப்போது ஸ்கோர் விபரங்களையும் ஞாபகப்படுத்தி விளையாட்டு ரசிகர்களின் விருப்பத்துக்குரியவர்களாய் ரிம்சாத், டிலான் மற்றும் தரணீதரன் ஆகியோர் திகழ்கின்றனர்.
 
விளையாட்டு செய்திகள் என்றால் தமிழ் நேயர்கள் வேறெங்கும் சென்றுவிட முடியாத நிலையில் சூரியனையே நம்பியிருக்கின்ற நிலைமையை சூரியனின் அறிவிப்பாளர் குழாம் உருவாக்கியிருக்கிறது.
 
இலங்கைத் தமிழ் வானொலி ஒன்று நம் நாட்டையும் கடந்து சிறப்பு பரிசு ஒன்றை வெளிநாடு ஒன்றில் பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சாதனையையும் சூரியன் வானொலி பெற்றுள்ளது என்றால் அதுவும் மிகையாகாது. தென் ஆசிய நாடுகளுடனான வானொலிகள் பல போட்டியிட்ட ஒரு பிரம்மாண்ட போட்டியில் தெற்காசியாவின் சிறந்த வானொலிக்கான விருதையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன். இலங்கை தமிழ் வானொலித் துறையில் தொடர்ந்து முதல்தரமாகவும் வீறு நடை போடுகின்றான்.
 
அதேபோன்று இலங்கை இசை நிகழ்ச்சிகள் வரலாற்றிலும் மாறாத சாதனைப் பதிவுகளை சூரியன் Mega Blast பெற்றுள்ளது என்றால் யாராலும் அதை நிராகரிக்க முடியாது. தமிழ் இசை நிகழ்ச்சி வரலாற்றில் பல இலட்சக்கணக்கான இரசிகர்களை திரட்டியெடுக்கும் ஒரு பிரம்மாண்டம் சூரியன் Mega Blast இவ்வாறான விண்ணைத் தொடும் சாதனைப் பயணங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதையும் 15ஆம் சாதனை ஆண்டில் இன்னும் பல புதுமையான இசைநிகழ்ச்சிகளுடன் நாம் சந்திப்போம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
 
உச்சம் தொட்டு நிற்கும் சூரியன் பற்றி சொல்ல ஆரம்பித்தால் காலம் போதாது. 15ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே எங்களுடைய அன்பான சூரிய சொந்தங்களை மகிழ்விக்க தமிழ் ஊடக வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வித்தியாசமான சிந்தனை ஓட்டத்தின் பயனாக 'Helicopter பரிசு மழை' ஆரம்பமாகின்றது. எமது சூரிய சொந்தங்களை ஆகாய வழியாக உங்கள் பகுதியை தேடிவந்து பிறந்தநாள் பரிசுகளை அள்ளி வழங்க போகின்றோம். 
 
சூரியன் Helicopter பரிசு மழை ஊடாக பிம்மாண்டங்களை படைப்பது என்பது நமது சூரியனுக்கு ஒன்றும் புதியதல்ல ஏராளமான சாதனைகள், விருதுகள், பாராட்டுக்கள் என தங்கச் சூரியன் தனது சாதனைப் பயணத்தை தொடர்ந்து செல்கின்றான். இவற்றுக்கெல்லாம் முதுகெலும்பாக நின்று எம்மோடு அன்பால் இணைந்து அன்று முதல் இன்றுவரை கைகோர்த்து நிற்கும் சூரிய சொந்தங்கள் தான் இவை அனைத்துக்கும் காரணம். 
 
எதிர்பார்ப்புகள் இன்றி இமயம் தொடும் அளவு சூரியனுடன் இணைந்து வானலை அரசனுக்கு மகுடம் சூடி நிற்கும் சொந்தங்களுக்கு மீண்டும் மீண்டும் கோடான கோடி நன்றிகள்.
 
கடந்து வந்த 14 ஆண்டுகளில் புதுமையைப் புகுத்தி நேயர்களை அன்போடு அரவணைத்த சூரியன் இனிவரும் காலங்களிலும் புதுமை தேடலுடன் புது மிடுக்குடன் 103.6 அல்லது 103.4 என்கின்ற பண்பலை வழியாக காற்றோடு கலந்து உங்கள் இல்லம் வரும் என்றும் அன்போடு கூறிக்கொள்கின்றோம்.

You May Also Like

  Comments - 0

  • kalaiwanan Thursday, 25 July 2013 11:19 AM

    வணக்கம் நான் கலைவாணன்... FM உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் sooriyan fmமை அசைக்க முடியாது. இதுதான் உண்மை. sooriyan fmக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .