2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 41ஆவது ஆண்டுவிழா

A.P.Mathan   / 2014 மே 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு நோக்கிய அரசியல்-சமூக மாற்றத்துக்கான கலை இலக்கியப் பணிகளைக் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 41ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

"துயரும் துணிவும்" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இவ் ஆண்டு விழாவில் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை ஆய்வரங்கு நடைபெறவுள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சி. சிவசேகரம், ஆய்வரங்கினைத் தொடக்கிவைத்து உரையாற்றுவார். ஆய்வரங்கில், "ஒடுக்கும் கரங்களும் எதிர்க்கும் கரங்களும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்கள்: ஒரு கிராம்ஸ்ஸிய மீள்வாசிப்பு" எனுந் தலைப்பில் தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோவும், "வடக்கில் சாதிய அடக்குமுறைக்கெதிரான குரல்களும் விளைவுகளும்" என்ற தலைப்பில் வி. மாதினியும், இலங்கையில் மென்பொருட் தொழிற்துறையில் 'உழைக்கும் வர்க்கம்" என்ற தலைப்பில் மு.மயூரனும் "பெண் ஒடுக்குமுறையும் விடுதலைக்கான வழியும்" எனுந்தலைப்பில் ச.சுதாகரும் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளார்கள்.

இரு அமர்வுகளாக நடைபெறவுள்ள இவ் ஆய்வரங்கின் அமர்வுகளை, த. ராஜரட்ணம், சிவ ராஜேந்திரன் ஆகியோர் தலைமைதாங்குகிறார்கள். ஆய்வுரைகளுக்கான கருத்துரைகளை முறையே க. ஆதித்தன், செப மோகன், த. ஸ்ரீபிரகாஸ், ம.சு. தேவ கௌரி ஆகியோர் வழங்குகின்றார்கள். மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை நடைபெறவுள்ள மாலை நிகழ்வினை, தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சி.தில்லைநாதன் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்வில், பேரவையின் ஆண்டிதழான "புதுவசந்தம்" வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. "புதுவசந்தம்" இதழுக்கான வெளியீட்டுரையை பெ. சுரேனும் கருத்துரையினை துணவியூர் கேசவன் அவர்களும் ஆற்றவுள்ளனர். கலை நிகழ்ச்சிகளாக, மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் வழங்கும் சமூக உருவாக்கப் பாடல்கள், யாழ். பிரதேசப் பேரவை வழங்கும் நாடக ஆற்றுகை, கவியரங்கம் என்பன இடம்பெறும்.

"துயரில் அழுவோமா, நாம் துணிந்தே எழுவோமா?" எனுந் தலைப்பில் நடைபெறவுள்ள கவியரங்கத்தில் கவிஞர் சடாகோபன் தலைமையில், அ.ஹரிசன், ஹரிகீர்த்தனா, பொ.கோபிநாத், லோ. பவனீதா, சோ. தேவராஜா, மு.மயூரன் ஆகியோர் கவியாற்றுகிறார்கள்.

ஆண்டுவிழாவினை ஒட்டி இடம்பெறும் ஆய்வரங்கிலும் மாலை நேரக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் தேசிய கலை இலக்கியப்பேரவை அன்போடு அழைக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X