புத்தளம் நகரசபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி கடைகளுக்கு நிர்ணய விலைப்பட்டியல் ஸ்டிக்கர் நகரசபை அதிகாரிகளால் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டன
புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக்கால் இவ்வாண்டுக்கான (2022) வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட மக்களுக்கான சலுகைகள் மற்றும் மானியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தனி மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலையான 1,000 ரூபாய்க்கும் கலவன் ஈரல் 1,200 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், சில மாட்டிறைச்சிக் கடை வியாபாரிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடிய விலைக்கு மாட்டிறைச்சி விற்பதாக தொடர்ந்தும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தெரிவித்தார்.
இந்த நிலையில், நகர சபையின் நிர்ணய விலைக்கு அதிகமாக மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நகரசபை எல்லைக்குள் உள்ள அனைத்து மாட்டிறைச்சி கடைகளுக்கும் விலைப்பட்டியல் ஸ்டிக்கர்களும் நகரசபை அதிகாரிகளால் ஒட்டப்பட்டுள்ளது.