2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மன அழுத்தங்களில் இருந்து மீட்க வீட்டுத்தோட்டம் சிறந்த பரிகாரம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனஅழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே அவர்களால் சரிவரக் கற்றலை மேற்கொள்ள முடியவில்லை. போதை, வன்முறை என்று சமூகப்பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஒருசாரார் தற்கொலை முடிவை நோக்கியும் செல்கிறார்கள். இவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவிக்க வீட்டுத்தோட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதுதான் சிறந்த பரிகாரமாக அமையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மாணாக்கர் உழவர்  திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விதைப் பொதிகளையும்  செயன்முறைப் பயிற்சிகளையும் வழங்கும் நிகழ்ச்சி  நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)  இடம்பெற்றது.

இந்நிகழ்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டி உள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வீட்டுத்தோட்டங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தின் முதற்படி. வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதோடு வீட்டுக்கழிவுகளைப் பசளையாகப் பயன்படுத்துவதால் நஞ்சற்ற உணவையும் நாம் பெறக்கூடியதாக உள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவு நெருக்கடிக்கும் வீட்டுத்தோட்டம் சிறந்த தீர்வாக அமையும். இந்த அனுகூலங்களைவிட மேலான அனுகூலமாக  வீட்டுத்தோட்டங்கள் மனதை அலைபாயவிடாமல் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் உதவுகின்றது.

தோட்டங்களில் மண்ணைக் கைகளிளால் அள்ளும்போது, மண்ணில் உள்ள பக்றீரியாக்களைத் தொடும்போது உடலில் செரற்ரோனின் என்ற ஓமோன் சுரப்பது தூண்டப்படுகிறது. ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை இது. செரற்ரோனின்  மனச்சோர்வைக் களைந்து, மனஅழுத்தங்களில் இருந்து விடுபடவைத்து, மனஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இரசாயனம் ஆகும். இயற்கையாக செரற்ரோனின் உருவாகுவதைத் தூண்டும் வீட்டுத்தோட்டச் செய்கையில் மாணவர்களை ஈடுபடுத்தினால் செயற்கையாக உற்சாகத்தைத் தூண்டும் ஆபத்தான போதைக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .