2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை இழந்த கணவர்

Editorial   / 2024 மார்ச் 27 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில், சோகமான சில சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. அவ்வாறான சம்பவம் ஒன்றே கர்நாடகாவில் பதிவாகியுள்ளது. 

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை சேர்ந்தவர் தர்ஷன் பாபு (30). மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2021-ம் ஆண்டு ரஞ்சிதாவை (24) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த த‌ர்ஷன் பாபு கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தொடக்கத்தில் கையில் இருந்த பணத்தை இழந்த அவர், பின்னர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தர்ஷன் பாபு தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து அவர், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக இழந்தார். கடன் வாங்கிய பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் இழந்ததால் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் இருந்த நிலத்தை விற்று ரூ.70 லட்சம் கடனை அடைத்துள்ளார். மீதமுள்ள ரூ.84 லட்சத்தை திரும்ப தரக்கோரி கடன் கொடுத்தவர்கள் தர்ஷன் பாபுவுக்கும், அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் தொல்லை கொடுத்துள்ளனர். கடன் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 18-ம் திகதி ரஞ்சிதா தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து பெங்களூரு பொஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவரது படுக்கை அறையில் சோதனை நடத்தியபோது 2 பக்க தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில் ரஞ்சிதா, தனது கணவர் தர்ஷன் பாபு ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்தது, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ் கூறும்போது, ‘‘கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி காரணமாகவே ரஞ்சிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரசும் பொலிஸாரும் ஐபிஎல் சூதாட்ட கும்பலை ஒழிக்க வேண்டும்'' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X