Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Janu / 2025 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பழமையான மற்றும் பெருமைக்குரிய விளையாட்டு கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கிரிக்கட் மற்றும் மெய்வல்லுனர் கழகம், தனது 125 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.
1899 டிசம்பர் 2ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்தக் கழகம், தமது வருடபூர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பி. சரவணமுத்து மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் யூனியனின் 125 வருட கால பயணத்தினூடாக, இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் முக்கியமான அத்தியாயம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இதனை குறிக்கும் விசேட வருடபூர்த்தி இலச்சினையையும் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருந்ததுடன், இலங்கை கிரிக்கட் மற்றும் விளையாட்டு துறைக்கு ஆற்றியுள்ள பெருவாரியான பங்களிப்புகளை குறிக்கும் விசேட நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கழகம், நாட்டின் விளையாட்டுத் துறையின்அபிவிருத்தியில் முக்கிய அங்கம் பெற்றுள்ளதுடன், வருடம் முழுவதிலும் பல்வேறு போட்டித் தொடர்கள், பாரம்பரிய கண்காட்சிகள் மற்றும் சமூக சென்றடைவு நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும். இந்த நிகழ்வுகள் கடந்த கால மற்றும் தற்கால அங்கத்தவர்கள், கிரிக்கட் போட்டியாளர்கள் மற்றும் இதர பரந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, கழகத்தின் சாதனை மிகுந்த வரலாற்றை கொண்டாடும்.
இலங்கை கிரிக்கட்டின் இருப்பிடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கழகம், உலகளாவிய ரீதியில், தேசத்தின் கிரிக்கட் பயணத்தில் ஆழமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பி. சரவணமுத்து மைதானம், இலங்கையின் முதலாவது சகல வசதிகளையும் கொண்ட மைதானமாக திகழ்ந்தது. குறிப்பாக, இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக, 1982 பெப்ரவரி மாதம் பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அப்பால் கிரிக்கட் ஜாம்பவான் சேர். டொனல்ட் பிராட்மன் விளையாடிய ஒரே மைதானமாகவும் இந்த சரவணமுத்து மைதானம் அமைந்துள்ளது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த மைதானமாகவும் இது அமைந்துள்ளது.அதன் வரலாறில், பரந்தளவு பின்புலன்களைச் சேர்ந்தவர்களிலிருந்து கிரிக்கட் திறமைசாலிகளை கட்டியெழுப்புவதில் தமிழ் யூனியன் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த கழகத்தின் புகழ்பெற்ற தூதுவராக 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்களை பதிவு செய்து, சர்வதேச கிரிக்கட் அரங்கில் முன்னணி விக்கட் கைப்பற்றிய வீரராக திகழும் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் திகழ்கிறார்.
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படும் எம். சதாசிவம், இந்த கழகத்தினால் உருவாக்கப்பட்டவர். இவர் சிலோனுக்காக 1945 ஆம் ஆண்டில் முதன் முதலில் விளையாடியிருந்தார். இந்தியாவுக்கு எதிராக 111 ஓட்டங்களை குவித்திருந்தார். 1948 ஆம் ஆண்டில், இவர் அவுஸ்திரேலியாவின் டொன் பிராட்மன் தலைமையிலான அணிக்கு எதிராக இலங்கை அணிக்கு தலைமை வகித்திருந்தார். நாட்டினுள் இவரின் சிறந்த மற்றும் இறுதி சதம் 1955 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தது. கொழும்பின் நொன்டெஸ்கிரிப்ட் கிரிக்கட் கழக மைதானத்தில் அரசாங்க சேவைகள் அணிக்கு எதிராக “ரெஸ்ட்“ அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தமிழ் யூனியன் கழகத்தின் விளையாட்டு சிறப்பு கிரிக்கட் விளையாட்டுக்கு அப்பாலானது.ஹொக்கி விளையாட்டிலும் இந்தக் கழகம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கையின் சிறந்த ஹொக்கி வீரராகவும் ‘the Hockey Wizard’ ஆகவும் அறியப்படும் ஏ. மயில்வாகனத்தை தயார்ப்படுத்தியிருந்தது. பல்வேறு சர்வதேச போட்டித் தொடர்களில் சிலோன் சார்பாக மயில்வாகனம் விளையாடியுள்ளதுடன், அவரின் சிறந்த விளையாட்டு பண்புகள் மற்றும் தந்திரோபாய விளையாட்டுத் திறன் ஆகியவற்றுக்காக அறியப்பட்டவர்.
உலகளாவிய ரீதியில் தேசத்தின் ஹொக்கி நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தார். தமிழ் யூனியன் கிரிக்கட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்தின் தலைவர் ரமேஷ் ஷாப்டர் கருத்துத் தெரிவிக்கையில், “125 வருட காலமாக, இலங்கை கிரிக்கட்டின் மையமாக தமிழ் யூனியன் கழகம் திகழ்கிறது. தேசத்தின் விளையாட்டு அடையாளத்தை பிரபல்யப்படுத்தும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை கண்டுற்றதுடன், பங்களிப்பு வழங்கியிருந்தது. இந்த வருட பூர்த்தியின் போது, எமக்கு பெருமை சேர்த்த பல நபர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்போம்.
கடந்த கால சாதனைகளை கொண்டாடுவதுடன், எதிர்கால கிரிக்கட் திறமைசாலிகளை கட்டியெழுப்புவதற்காக எம்மை மீண்டும் அர்ப்பணித்து, அடுத்த நூற்றாண்டுக்கான விளையாட்டு சிறப்பை எய்த அடித்தளமிடுவோம்.” என்றார்.
கிரிக்கட்டுக்கு அப்பால், தமிழ் யூனியனினால் பரந்தளவு விளையாட்டு வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் நீச்சல், பூப்பந்தாட்டம், ஸ்கொஷ், டெனிஸ் மற்றும் சகல வசதிகளையும் கொண்ட ஜிம்னாசியம் ஆகியன அடங்கியுள்ளன. பெண்கள் கிரிக்கட்டுக்கான ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் நிலையமாகவும் கழகம் திகழ்வதுடன், தேசிய மகளிர் அணிக்கு அவசியமான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
அத்துடன், சமூக ஈடுபாட்டை பேணும் கழகமாக அமைந்திருப்பதுடன், பெருமளவு பான வகைகள் மற்றும் சிறந்த சமையலறை பகுதியை கொண்டு பல உணவு வகைகளை வழங்குவதுடன், வருடம் முழுவதிலும் அங்கத்தவர்களை ஒன்றிணைக்கும் வகையில் பல்வேறு சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.
தமிழ் யூனியன் கிரிக்கட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும்125 வருட பூர்த்தி கொண்டாட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள https://tamilunioncac.com/ எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
28 minute ago
31 minute ago