அமெரிக்காவின் மிகப் பிரபலமான பேய் வீடு என்று அழைக்கப்படும் பழைய பண்ணை வீடு ஒன்று 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட படம் தான் த கோஞ்ஜுரிங் ( 'The Conjuring'). இத் திரைப் படத்தில், குடும்பம் ஒன்று புது வீட்டுக்கு குடிபுகும். அந்த வீட்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களினால் சிக்கித்தவிக்கும் அக்குடும்பம் அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்ற ரீதியில் கதை பயணிக்கும்.

அமெரிக்காவின் ரோட் தீவில் (Rhode Island) அமைந்துள்ள குறித்த பண்ணை வீட்டில் நடந்ததாக சொல்லப்படும் இச் சம்பவங்களைத் தழுவியே இப் படம் எடுக்கப்பட்டது.
சுமார் 286 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பண்ணை வீட்டில் 3 படுக்கையறைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இவ்வீட்டை வாங்குபவர்களுக்கு வித்தியாசமான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ”இவ்வீட்டை வாங்குபவர்கள் பாதுகாப்புக் காரணம் கருதி இவ்வீட்டில் வசிக்கக்கூடாது எனவும் மாறாக வணிக நடவடிக்கைகளை தொடரலாம் எனவும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” எனவும் வீட்டின் உரிமையாளர்களும் அமானுஷ்ய புலனாய்வாளர்களான ஜென் மற்றும் கோரி ஹெய்ன்சன் தம்பதி தெரிவித்துள்ளனர்.
இதற்கு சம்மதித்த பிறகே ஜாக்குலின் நுனேஸ் என்ற தொழிலதிபர் குறித்த வீட்டை வாங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.