2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

மரண தண்டனை கைதியை நாடுகடத்திய இந்தோனேசியா

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை கைதியை நாடு கடத்துவது தொடர்பாக இந்தோனேசியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக, மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது.

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2005ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்ஜ் அட்லாவுய் என்பவர் ஜகார்த்தாவில் கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் முடிவில், அவரது தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

அவரது மரண தண்டனையை 2015இல் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தால் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் செர்ஜ் அட்லாவுயின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று பிரான்ஸ் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த மாதம் 24ஆம் திகதி இரு நாடுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது. நான்கு குழந்தைகளின் தந்தையான செர்ஜ் அட்லாவுயை (வயது 61) மனிதாபிமான அடிப்படையில் நாடு கடத்த இந்தோனேசியா ஒப்புக்கொண்டது. செர்ஜ் அட்லாவுய்க்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாலும், வாரந்தோறும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவரை தாய்நாட்டுக்கு அனுப்பும் முடிவை இந்தோனேசியா எடுத்துள்ளது.

அதன்படி, நேற்று (4), அவர் ஜகார்த்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரான்ஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அவரது தண்டனை குறித்த முடிவை பிரான்ஸ் அரசாங்கத்திடமே இந்தோனேசியா விட்டுள்ளது. இன்று (5) மாலை, அவர் பிரான்ஸ் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X