2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

போர் நிறுத்த பேச்சுவார்த்தை இரத்து

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் ஆயுதக்குழு இரத்து செய்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இஸ்ரேலியர்களின் சடலங்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஹமாஸ் ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.

இதையடுத்து, சனிக்கிழமை (22) பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நடவடிக்கையின்போதும் காசாவில் மேடை அமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த நடவடிக்கையின்போது மேலும் 2 பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு காரில் அழைத்து வந்துள்ளது. அந்த பணய கைதிகள் தங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கெஞ்சுவது போன்ற வீடியோவையும் ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிட்டது.

இந்த நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியது. மேலும், 6 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 620 பேரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்தியது. பாலஸ்தீனிய கைதிகள் 620 பேரையும் இஸ்ரேல் விடுதலை செய்யவில்லை.

இந்நிலையில், பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாத நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 

பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

அத்துடன், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் இரத்து செய்துள்ள நிலையில் பாதுகாப்புப்படையினர் தயார் நிலையில் இருக்குமாறு, இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X