2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

பாக். ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு

Editorial   / 2025 மார்ச் 12 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று (மார்ச் 11) காலை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை படையை சேர்ந்தவர்கள், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 400-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. இதில் இதுவரை 27 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். 150 பயணிகள் வரை மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பயணிகளைச் சுற்றி தற்கொலைப் படையினர் பிஎல்ஏ நிறுத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரயில் நிற்கும் இடம் சுற்றிலும் மலைப் பகுதிகள் சூழ்ந்த பகுதி என்பதால் அது பலுச் விடுதலைப் படையினருக்கு சாதகமான பகுதியாக உள்ளது. அந்த இடத்தை சுற்றிவளைப்பது என்பது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைக்கு சற்று சவாலான விஷயமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

பின்ணியில் ஆப்கன் சதி! - பாகிஸ்தானின் அரசு ஊடகமான ரேடியோ பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்ததாக பகிர்ந்துள்ள செய்தியில், “ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள தீவிரவாதிகளில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிணைக் கைதிகள் அருகில் மனித வெடிகுண்டுகளாக பலுச் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து சில பிரிவினைவாத குழுக்கள் அவர்களை இயக்குகின்றன. இப்போது பாதுகாப்புப் படை கடும் சவாலை விடுக்கும் சூழலில் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை அவர்கள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X