2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு விவரம்: நாளை அறிவிக்கப்படும்?

Freelancer   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போப் ஆண்டவரின் இறுதி சடங்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பான முடிவு, புதன்கிழமை (23) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போப் ஆண்டவரின் பூதவுடல், புதன்கிழமை (23) காலை, வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும். அங்கு போப் ஆண்டவருக்கு பொதுமக்கள் மற்றும் கத்தோலிக்க மத குருக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு போப் ஆண்டவர் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது. வாடிகனில் திரண்டு உள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் பூதவுடல், திங்கட்கிழமை (21) பதப்படுத்தப்பட்டது.  இரவு அவரது உடல் காசா சந்தாமர்தா ஆலயத்தில் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண் கத்தோலிக்க மத குரு இந்த ஆராதனையை தலைமையேற்று நடத்தினார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலை அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வாடிகன் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர். இந்த நல்லடக்கத்தை எப்போது எப்படி, எந்த நேரத்தில் நடத்துவது என்று முடிவு செய்ய, கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் தொடங்கும்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது மனைவியுடன் ரோம் நகருக்கு சென்று போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

75க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ரோம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக போப் ஆண்டவர் மரணம் அடைந்து விட்டால் 4 முதல் 6 நாட்களுக்குள் நல்லடக்கம் செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அடக்கம் முடிந்த பிறகு 9 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.

15 முதல் 20 நாட்கள் கழித்து புதிய போப் ஆண்ட வரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .