2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

டுவிட்டரின் மன்னிப்பால் இந்தியாவில் சர்ச்சை

Editorial   / 2018 நவம்பர் 23 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடக வலையமைப்பான டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜக் டோர்ஸே வைத்திருந்த புகைப்படமொன்றால் சர்ச்சை ஏற்பட, அதற்கு டுவிட்டர் நிறுவனம் மன்னிப்புக் கோரிய நிலையில், பெண் ஊடகவியலாளர்களையும் செயற்பாட்டாளர்களையும், அச்செயற்பாடு கோபப்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜக் டோர்ஸே, தனது விஜயத்தின் ஓர் அங்கமாக, சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து வருகிறார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக, பெண் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனச் சிலரை, அண்மையில் சந்தித்திருந்தார்.

அச்சந்திப்பில் கலந்துகொண்ட தலித் செயற்பாட்டாளர் ஒருவர், டுவிட்டரின் வெறுப்புப் பேச்சுப் பற்றிய முறைப்பாட்டுப் பகுதியில், சாதிய ரீதியான இழிவுபடுத்தல்களைப் பற்றி முறைப்பாடு செய்வதற்கு வழியில்லை என்பது தொடர்பாக, ஜக் டோர்ஸேயின் கவனத்துக்குக் கொண்டுவந்ததோடு, சந்திப்பின் இறுதியில், “பிராமாணிய ஆண்வழி மரபை நொறுக்குவோம்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படமொன்றையும் பரிசாக வழங்கியிருந்தார்.

அப்புகைப்படத்துடன் ஜக் டோர்ஸேயும் அச்சந்திப்பில் கலந்துகொண்ட சிலரும் புகைப்படமொன்றுக்குக் காட்சி கொடுத்தனர். அப்புகைப்படம் வெளியான பின்னர், இந்தியாவில் இந்துத்துவாவைக் கொள்கையாகக் கொண்டுள்ள டுவிட்டர் பயனர்கள் சிலர், அப்புகைப்படத்துக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, டுவிட்டரின் இந்தியப் பிரிவின் பொறுப்பதிகாரியொருவர், அப்புகைப்படத்துக்காக மன்னிப்புக் கோரியதோடு, “எமது எண்ணங்களை அப்புகைப்படம் வெளிப்படுத்தவில்லை” எனவும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, டுவிட்டர் மீதான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பெண்கள் ஊடகவியலாளர்களினதும் செயற்பாட்டாளர்களினதும் குழுவொன்று, இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டு, “வெறுப்பு, துன்புறுத்தல், சட்டரீதியான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் எமக்கு, இந்த மன்னிப்புக் கோரல், ஏமாற்றமாக அமைந்தது.

“ஏனைய நாடுகளில், பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் ஆதரவாக நிற்றல் என்ற, டுவிட்டரின் பலமான நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாக இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், ஆதிக்க சாதிகள் என்று சொல்லப்படுகின்ற சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு, இன்னமும் காணப்படுகிறது. குறைந்த சாதி நிலைமை என்று கருதும் சாதியைச் சேர்ந்த ஒருவருடன், ஆதிக்க சாதி என்று கருதப்படும் சாதியைச் சேர்ந்த ஒருவருக்குக் காதல் ஏற்பட்டாலோ அல்லது திருமணம் இடம்பெற்றாலோ, அவர்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரையோ அல்லது இருவரையுமோ கொல்லும் நடைமுறை, இந்தியாவில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .