2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இஸ்ரேலும் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து வெளியேறுகிறது

Freelancer   / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும்  ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. 

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது," என குறிப்பிட்டுள்ளார்.

"மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை பேய்த்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

"எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!" என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .