2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அமெரிக்காவின் எச்சரிக்கையால் மத்தியகிழக்கில் பரபரப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த 31ம் திகதி டெஹ்ரான் சென்றபோது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் லெபனானில் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் சுக்கூர் பலியானார்.

இந்நிலையில், இஸ்மாயில் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, நாட்டின் விருந்தினராக வந்திருந்த இஸ்மாயில் படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஹமாஸ் தலைவர், ஹிஸ்புல்லா தளபதி படுகொலைகளால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் உருவாகும் என்று தகவல்கள் வந்தன. இந்நிலையில், காசா அருகே உள்ள 2 பள்ளிகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

அந்த பள்ளியில் பலஸ்தீன அகதிகள் தங்கியுள்ளனர். அதில் தீவிரவாதி இருப்பதாக வந்த தகவலையடுத்து இஸ்ரேல் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே காசாவில் நேற்று நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பலஸ்தீனர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதல்களில் ஒரு மூதாட்டி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தளபதி புவாத் சுக்கூர் படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபானானில் இருந்து ரொக்கெட்டுகளை ஏவி தாக்கினர். இந்த ரொக்கெட்டுகள் அனைத்தும் வழிமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த போராளி கொல்லப்பட்டார். பலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது நடக்கும் சம்பவங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்கவும், தன்னுடைய இராணுவத்தை பாதுகாக்கவும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு விமானம் தாங்கிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்த பதற்றத்தையடுத்து அமெரிக்க இராணுவ தளபதி மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்துள்ளார். அவர் இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளுக்கு செல்வார் என தெரிகிறது. அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் மீது ஈரான் எந்தநேரததிலும் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கிறோம். திங்கட்கிழமையே (இன்று) கூட தாக்குதல் தொடங்கலாம்” என்றனர்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘‘இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்த ஈரான் இந்த முடிவில் இருந்து பின்வாங்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பின் தலைவர்கள் படுகொலையால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்படுவதை தடுக்கும் விதமாக ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மான் சபாதி ஈரான் தலைவர்களை சந்திக்க நேற்று டெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன், பிரான்ஸ் ,இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய கிழக்கில் உள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .