Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபதம் வென்ற டிரம்ப்: 2020 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, அதிருப்தியுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டொனால்டு டிரம்ப், “மீண்டும் ஜனாதிபதியாவேன்” எனச் சபதமிட்டு, 2024இல் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். குடியேற்றக் கொள்கையில் மாற்றம், இறக்குமதி வரி அதிகரிப்பு என இப்போதே உலக நாடுகளுக்குக் குடைச்சலும் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
அண்டை சண்டை: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்ந்தது. வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. அது இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் பாதித்திருக்கிறது. ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
புதிய ஜனாதிபதி: 2024 செப்டம்பரில் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) வேட்பாளராகப் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி ஆச்சரியம் தந்தது. பாராளுமன்றத் தேர்தலில் அவர் கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்தது. டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, “இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியளித்த அநுர, புத்தாண்டில் சீனாவுக்கும் செல்லவிருக்கிறார்!
சிறையில் முன்னாள் பிரதமர்: பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசுக் கருவூலத்திலிருந்த பரிசுப் பொருள்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்படுவார் எனப் பேசப்பட்டது. இம்ரான் கான் அதற்கு மறுத்துவிட்டார்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நெருக்கடி: டிசம்பர் 13இல், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியே பதவியிழந்தார். பிராங்சுவா பைரூஸ் பிரதமரானார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரூனின் பரிந்துரையில் பிரதமரான பார்னியேவின் பதவி பறிபோனதால், மக்ரூனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், “2027 வரை நான்தான் ஜனாதிபதி” என்று சூளுரைத்திருக்கிறார் மக்ரூன்!
வெற்றிகளைச் சுவைத்த மஸ்க்: 2024ஆம் ஆண்டின் மிகப் பெரிய செல்வந்தர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ இதழால் இலான் மஸ்க் அறிவிக்கப்பட்டார். இவரது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட்டுகள் 134 முறை விண்ணில் ஏவப்பட்டன. இவரது ‘எக்ஸ்.ஏஐ’ நிறுவனத்தின் தயாரிப்பான ‘அரோரா’வும் வரவேற்பைப் பெற்றது. இவரது ஆதரவு பெற்ற டிரம்ப் ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிட்டார். எனினும், மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்தில் வெறுப்புணர்வு அதிகரித்ததாகச் சொல்லி, ஜனநாயகவாதிகள் பலர் அதிலிருந்து வெளியேறினர்.
சர்ச்சையில் சிக்கிய சாம்: மனிதகுல வளர்ச்சியைவிடவும் லாபத்துக்கே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது, அந்நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான இலான் மஸ்க் குற்றம்சாட்டினார். ‘ஓபன் ஏஐ’ நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறுவதாக விமர்சித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசிர் பாலாஜி மர்மமாக இறந்தது இன்னொரு சர்ச்சையானது!
விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்: ஒரே வாரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லி, ‘ஸ்டார் லைனர்’ விண்கலத்தில் ஜூன் 6இல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் தொழில் நுட்பக் கோளாறுகளால் இன்றுவரை பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இந்தப் புதிய ஆண்டிலாவது சுனிதா மண்ணில் இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற சாம்பியன்: விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓபன், யு,எஸ்.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் என 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில்லிருந்து ஓய்வுபெற்றது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விமர்சனங்களுக்குள்ளான சவுதி அரேபியாவின் டென்னிஸ் தூதராகப் பொறுப்பேற்றதால் சர்ச்சைக்குள்ளானார்.
விருது வென்ற பெண்கள்: விண்வெளி முதல் காலநிலை மாற்றம் வரை பேசிய ‘ஆர்பிட்டல்’ நாவலுக்காக பிரிட்டிஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி ‘புக்கர்’ பரிசை வென்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென் கொரிய எழுத்தாளரான ஹன் காங்குக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை வென்ற முதல் ஆசியப் பெண் இவர்தான்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago