2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெள்ளத்தில் மிதக்கும் இரயில் நிலையங்கள்

Freelancer   / 2024 மே 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. இரயில் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

கேரளத்தில் வருகின்ற 31ஆம் திகதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் பருவமழைக்கு முன்பே அங்கு கனமழை பெய்து வருகிறது.

இதனால் கடற்கரையை ஒட்டிய ஆலப்புழை மாவட்டத்தின் தாழ்வான பகுதியில் உள்ள குட்டநாட்டில் வீடுகள், பள்ளிகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மேலும், மழை நீர் தேங்குவதால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேசமயம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் கடந்த சனிக்கிழமை (25) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம் கைக்குலாங்காரா பகுதியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அங்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி இருப்பதாலும் மரங்கள் சரிந்து கிடப்பதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .