2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விஜயகாந்த் சிலை திறந்து வைப்பு; மயங்கி விழுந்தார் மகன்

Editorial   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)  தலைமை அலுவலகத்தில், கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிலையை திறந்துவைத்துள்ளார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு ​டிசெம்பர் 28ஆம் திகதி காலை காலமானார். நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.

அரசியலில் நுழைந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர் விஜயகாந்த். அவரது 72வது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை 25), சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது சிலையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.

சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொண்டர்களைச் சந்தித்து வந்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகபாண்டியன் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவரை உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .