2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

‘வா வா என் தேவதையே’ : கல்லீரலை தானம் செய்த தந்தை

Editorial   / 2024 ஜூலை 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பில் தவித்து வந்த தன் நான்கு வயது மகளுக்கு தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக வழங்கியுள்ளார் அபுதாபியில் வசித்து வரும் இம்ரான் கான்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் ரசியாவுக்கு அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் சொல்லி அவர் அறிந்து கொண்டுள்ளார்.

இதே கல்லீரல் பாதிப்பால் தனது மூத்த மகள் ஷைமாவையும் அவர் இழந்துள்ளார். 2019-ல் உயிரிழந்தபோது ஷைமாவுக்கு வயது 4. இது குறித்து அவரது மறைவுக்குப் பிறகுதான் இம்ரான் அறிந்து கொண்டுள்ளார். இப்போது மீண்டும் அதே பாதிப்பு தனது மற்றொரு மகளுக்கும் ஏற்பட அதிர்ந்து போயுள்ளார். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இந்த நோயின் தீவிரம் கல்லீரல் செயலிழப்பு வரை செல்லும் எனத் தெரிகிறது.
ரசியாவை காக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். இதற்கான சிகிச்சை கட்டணம் சுமார் 10 லட்சம் திர்கம். இது அதிகம் என்பதால் அவர் அமீரக அரசின் தொண்டு நிறுவனமான எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் உதவியை நாடியுள்ளார். அபுதாபியில் உள்ள புர்ஜீல் மெடிக்கல் சிட்டியில் கட்டணமின்றி சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதே பாதிப்பு காரணமாக எனது மூத்த மகளை இழந்துவிட்டேன். இப்போது இளையவளுக்கும் அதே பாதிப்பு. எங்கே இளையவளையும் இழந்துவிடுவோமா என ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்கிறேன். என்ன நடக்கும் என எனக்குத் தெரியவில்லை.

நாங்கள் அவளுக்காக வெளியில் எங்கும் உறுப்பு தானம் வேண்டி அணுகவில்லை. எங்களது குடும்பத்துக்குள் தான் அதனை தேடினோம். என்னுடய கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவளுக்கு வைக்கலாம் என அறிந்தேன். தந்தை என்ற முறையில் எனது மகளுக்காக நான் தான் இதனை செய்ய வேண்டும். அதன்படி அதை செய்தேன்” என இம்ரான் சொல்கிறார்.

தந்தை மற்றும் மகள் என இருவருக்கும் ஒரே நேரத்தில் கடந்த மே மாதம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரம் இந்த சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து கடந்த ஜூன் 24-ம் ரசியா வீடு திரும்பியுள்ளார். தற்போது குணமடைந்து வரும் அவர் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X