2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது

Editorial   / 2024 நவம்பர் 03 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 "உத்தப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்" என்று மும்பை பொலிஸாருக்கு சனிக்கிழமை (02) மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து சனிக்கிழமை மாலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் யோகி ஆதித்யநாத் இன்னும் பத்து நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பாபா சித்திக் போல அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை அனுப்பியது யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்றாலும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த மிரட்டல் செய்தியினைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஒக்டோபர் 12ம் திகதி பாபா சித்திக் அவரது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு முன்பு மூன்று நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாலிவுட் நடிகர் சல்மான்கானிடம் ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவரை பொலிஸார் புதன்கிழமை (ஒக்.30) கைது செய்த நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக செவ்வாய்க்கிழமை (ஒக்.29) 20 வயது இளைஞரை நொய்டாவில் பொலிஸார் கைது செய்தனர். முகம்மது தய்யப் என்ற அந்த நபர், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகிய இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார் என கூறப்படுகிறது.

  முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது பெண் ஒருவர்  (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கைது செய்யப்பட்ட பெண் ஃபாத்திமா கான் என்பது தெரியவந்துள்ளது. பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் படித்துள்ள அப்பெண் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்துக்கு அருகே உள்ள உல்காஸ்நகர் பகுதியில் வசித்துவருகிறார். அவரது தந்தை மர வியாபாரம் செய்துவருகிறார்.

அப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். முதல்வருக்கு வந்த மிரட்டல் செய்தி குறித்த விசாரணையின் போது ஃபாத்திமா கான் அந்த செய்தியை அனுப்பியது தெரியவந்தது. மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் உல்காஸ்நகர் பொலிஸார் இணைந்து நடந்திய விசாரணையில் அப்பெண்ணைக் கண்டுபிடித்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X